விஞ்ஞானத்தின் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்



💻எண்ணத்தால் இயங்கும் கணினி

மெட்டா நிறுவனம், எண்ணங்களை உணர்ந்து செயல்படும் ஒரு புதிய வகை கருவியை பரிசோதித்து வருகிறது. கடிகாரம் போல மணிக்கட்டில் கட்டக்கூடிய இந்த அணி கருவி, 'சர்பேஸ் எலெக்ட்ரோமயோகிராபி' (SEMG) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது, தசைகளின் மிகச்சிறிய அசைவுகளிலிருந்து வெளிப்படும் நுண்மின் சமிக்ஞைகளை உணரும் திறன் கொண்டது. இதனால், ஒரு விரலை அசைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும்போதே, இந்த அணி கருவி, உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்படும்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் ஆற்றலைக் கொண்டது என்று சொல்லலாம்.

 

📗தூக்கமின்மைக்கு தீர்வு தரும் சங்கு

நமது வழிபாட்டில் சங்கு ஊதுதலுக்கு முக்கியமான இடம் உள்ளது. சங்கு ஊதுவது உடல் நலனுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்று துாக்கமின்மை பிரச்னையைச் சரிசெய்ய சங்கு ஊதுதல் உதவும் என்கிறது. ஓஎஸ்ஏ (Sbstructive sleep apnea - OSA) என்பது துாங்கும்போது ஏற்படும் பிரச்னை.

உறக்கத்தின் போது சிலருக்குத் தொண்டை தசைகள், நாக்கு ஆகியவை ஓய்வுபெற்று மூச்சுப் பாதையை அடைத்துவிடும். இதனால் சரியாக மூச்சுவிட முடியாது. இதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுத் துாக்கம் கெடும். இரவு துாங்காததால் பகலில் சோர்வு ஏற்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். இதைச் சரி செய்வதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சமீபத்தில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த எடெர்னல் இதய மையம் மற்றும் ஆய்வுக்கூடம் இது தொடர்பான ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த மையத்தின் ஆய்வாளர்கள் ஓஎஸ்ஏ பிரச்னை கொண்ட 19 -- 65 வயதுடைய 30 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஒருபகுதியினரை மூச்சுப் பயிற்சி செய்யச் சொன்னார்கள். மற்றொரு பகுதியினருக்கு தினமும் 15 நிமிடம் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து 6 மாதங்கள் சங்கு ஊதும் பயிற்சி செய்யச் சொன்னார்கள்.

பயிற்சி தொடங்கிய சில தினங்களிலேயே அவர்களின் பிரச்னை குறையத் துவங்கியது. இறுதியில் பகல்நேரச் சோர்வு 34 சதவீதம் குறைந்தது. இரவு துாக்கத்தில் ஏற்படும் தொல்லையும் சரியாகிவிட்டதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.

சங்கை ஊதும் போது அதிக முயற்சி செய்து ஊத வேண்டும். அப்போது மூச்சுக்குழாய், தொண்டை ஆகிய பகுதிகள் வலிமை அடைகின்றன. இது ஓஎஸ்ஏ பிரச்னைக்குத் தீர்வாக அமைகிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து. குறைந்த செலவில் மருந்தே இல்லாமல் கிடைக்கும் தீர்வாக இது உள்ளது.

 

🍖புதிய மனித இனம்

எத்தியோப்பியாவில் புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 26.5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 10 பற்கள் இங்கு கிடைத்துள்ளன. இந்தப் புதிய இனத்திற்கு ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.


🤶தாய் உடல் பருமன்

பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும், ஆட்டிஸத்தைக் கூட ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

👀கண்களை காக்கும் புதுமை தொழில்நுட்பம்

மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக, தானமாகப் பெறப்படும் கண்களை, உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பது பெரிய சவால். கண்களை அகற்றிய சில நிமிடங்களிலேயே, விழித்திரைகள் செயலிழக்கத் துவங்கிவிடுகின்றன. நேரமாக ஆக, அந்தக் கண்கள் செயலிழந்து, மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.

இந்த சவாலைச் சமாளிக்க, '- - எக்மோ' (Eye--ECMO) என்ற புதிய கருவியை அமெரிக்கா வின் மயாமி பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய கருவிதான். இது தானமாகப் பெறப்பட்ட கண்ணுக்குள், கதகதப்பான ஆக்சிஜன் செறிந்த திரவத்தைச் செலுத்துகிறது. இதனால், கண்கள் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படும்போதும், மற்ற பரிசோதனைகள் செய்யப் படும்போதும் வெகுநேரம் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், இந்தக் கருவியின் வாயிலாக விழித்திரை, பல மணி நேரங்களுக்குப் பிறகும் உயிர்ப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. '- - எக்மோ' கருவி, எதிர்காலத்தில் கண்கள் தானம் செய்வதை மிகவும் எளிமையாக்கும்.

மேலும், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளுக்கு இடையே கண்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் இது உதவும். கண் மாற்று அறுவை சிகிச்சையில் - - எக்மோ ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

 

🌞அதிக சூரிய ஆற்றல் தரும் புதிய கருப்பு உலோகம்

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள், இதுவரை மிகவும் குறைந்த செயல்திறன் கொண்டவையாகவே இருந்தன. அதனால், அவற்றின் பயன்பாடு பெரிய அளவில் இல்லை.

ஆனால், ரோசெஸ்டர் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய கண்டு பிடிப்பின் வாயிலாக, இதன் செயல் திறனை 15 மடங்கு அதிகரித்துள்ளனர்.

அவர்கள், வழக்கமாக ஆராயப்படும் சூரிய மின் பலகையின் குறைக்கடத்திப் பொருட்களில் கவனம் செலுத்தாமல், அதன் மேல்தளத்தில் உள்ள உலோகத் தகடுகளிலும் வெப்ப பரிமாற்றத்திலும் கவனம் செலுத்தினர்.

'பெம்டோசெகண்ட் லேசர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டங்ஸ்டன் உலோகத் தகடை வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் கருப்பு உலோகமாக மாற்றினர்.

இது சூரிய ஒளியை ஒரு நுரைப்பஞ்சுபோல் உறிஞ்சி, வெப்பமாக மாற்றுகிறது. மேலும், இந்த கருப்பு உலோகத்தின் மீது ஒரு பிளாஸ்டிக் பாதுகாப்பு உறையைப் பொருத்தியதால், வெப்பம் வெளியே கசிவதைத் தடுக்க முடிந்தது. இதன் வாயிலாக வெப்பம் உள்ளேயே தங்கி, மின்சாரமாக மாற்றப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, தெர்மோ லக்ட்ரிக் ஜெனரேட்டர்களை வருங்கால மின்னணு சாதனங்களின் தேவைகளுக்கு ஏற்றவையாக மாற்றக்கூடும்.

குறிப்பாக, கைகளில் அணியக்கூடிய கருவிகள், சிறிய உணரிகள் போன்றவற்றில் இது மிகச் சிறப்பாகப் பயன்படும்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment