2023 கிரிக்கெட்- இந்தியா வெல்லும்

 


"2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்"

என்று கணித்துக் கூறிய பிரபல ஜோதிடர்கள்!

 

இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் 'பிரபல' ஜோதிட சிகாமணிகள், பல சரியான பலன்களை கணித்துக் கூறிப் புகழ் பெற்ற ஜோதிடர்களான,  சுமித் பஜாஜ், பண்டிற் ஜெகநாத் குருஜி, பண்டிற் லோபோ எனவும் பலர், '2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும்" என்று அடித்துக் கூறினார்கள்.

 

 ஆனால், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

 

ஜோதிடர்கள் பெரும்பாலும் சரிபார்க்கக்கூடிய கணிப்புகளைச் செய்வதைத் தவிப்பார்கள். மாறாக இவர்கள் பொதுவான பலன்களைத் கூறித்தான் பெயர் பெறுவார்கள். "உனக்கு ஒரு கஷ்டம் வரும்", "இழப்பு நேரும்", "விபத்து நிகழும்", " நோய் பீடிக்கும்"  என்று பொதுப்படக் கூறி வைப்பார்கள். இவற்றில் எதோ ஒன்று எப்போவாவது சரி வந்தால் அவர் சரியான ஜோதிடர் ஆகி விடுவார். பிழை , பிழையாகக் கூறிய ஏராளமான ஜோதிடர்களையும், கூறப்பட்ட பலன்கள் அனைத்தையும் ஜோதிடப் பிரியர்கள் இலகுவில் மறந்து விடுவார்கள்.

 

ஒரு கோடிக்கணக்கான பலன் விளைவுகளில் இருந்து, குறிப்பாக இது ஒன்றுதான், இவ்வளவுதான், இப்போதுதான், இவருக்குத்தான் நடக்கும் என்று ஜோதிடம் கூறி, அது நடந்தேறினால் அதுதான் உண்மையான ஜோதிடம் என்று ஏற்றுக் கொள்ளலாம்.

 

ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டியில் இரண்டில் ஒன்றுதான் விளைவு; 'வெற்றி' அல்லது 'தோல்வி'. இந்த இரண்டிலிருந்து ஒன்றைக் கூடிச்  சரியாகக் கூறமுடியாத இவர்கள் எந்த விதத்தில் தங்களை ஒரு பெரிய ஜோதிட வல்லுனர்கள் என்று பறை சாற்றிக்கொண்டு திரிகிறார்கள்?

 

என்றாலும், ஒரு சில 'சின்ன' ஜோதிடர்கள் "இந்தியா தோல்வி அடையும்" என்று, கூறி இருப்பார்கள். அவர்கள்தான் வருங்கால மகா பண்டிதர்களாக இருக்கப் போகிறார்கள்!

 

ஏனென்றால், 'துல்லிமாக' ஜோதிடக் கணிப்புச் செய்து சரியான அந்த விளைவை முன்கூட்டியே கூறிப் பெயர் பெற்ற ஜோதிடர்கள் ஆகிவிட்ட இவர்கள் பின்னால், இந்தச் சாத்திரங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளிக் கூட்டம்,  அலை மோதிக் கூடிவிடும் என்றபடியால்!

செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment