"ஆசையில் ஓர் காதல்"-[ சிறு கதை]


மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்தாள். அவள் நீண்ட கருங்கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்கவேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கிவந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை.

ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்துசென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொண்ட அவன் நடந்து சென்றான்.

"அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்

தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;"

என புறநானுறு 83 கூறியதுபோல். இன்று செருப்பு அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நடையுடன் செல்லும் அவன் மேல் எனோ அவளுக்கு ஒரு ஈர்ப்பு தானாக ஏற்பட்டது. அது எப்படி, ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் கைவளைகள் கூட நெகிழ்ந்து கழல்கின்றன. அவளை அறியாமலே, அவள் திரும்பி தாமரை போன்ற தன் இரு பாதங்கள் நோகும் படி மெல்ல அடி எடுத்து வைத்து அந்த  இளைஞனைப் பின் தொடர்ந்தாள். அவளுக்கு என்ன நடந்தது? இதுவரை அவள் அறியாத ஒன்றால்  அவனிடம்  ஈர்க்கப்பட்டாள். ஆனால் அவனோ ஒரு பேரழகி ஒருத்தி தன்னந்தனியாக, பூத்து குலுங்கும் மரங்களுக்கிடையில் தன்னைப் பின் தொடர்வதைக் எதேச்சையாக கண்டாலும், எனோ அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை, கம்பர் கூறியது போல, 

"துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்

கணைக் கருங் கணினாளை ஓர் காளை தான்,

பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை

அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்’’

என்கிறானோ? அம்பை நிகர்த்தும் கரும் கண்களை உடைய அவளை, அவன் பார்த்து, பருத்துப் பெரிதாக அழகாக விரும்பத்தக்க அவளின்  மார்பகங்களை முழுவதுமாக அணைத்து ஏந்தக் கூடிய அளவுக்கு தனக்கு விசாலமான அகன்ற மார்பு இல்லையே என்று நொந்து போய்ப் அவளை பார்க்கவில்லை போலும்! என்றாலும் அவன் மனமும் கலங்க தொடங்கியது. 

அவன் கொஞ்ச நேரத்தால் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு அவள் நடந்து வரும் அழகை ரசித்தான். அப்பொழுது

"பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்

புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,

நாள் இரை கவர மாட்டித் தன்

பேடை நோக்கிய பெருந்தகு நிலையே."

என்பது போல, அங்கே ஒரு  காட்டுக்கோழி ஈர மண்ணைக் கிண்டி இரையை வாயில் வைத்துக்கொண்டு தன் பெண் - கோழியைப் பார்ப்பதை கண்டான். அது அவனை ஆச்சரியப் படுத்தி, தன் ஈரம் கொண்ட இதயத்தை கிண்டி, காதல் என்ற இரையை தன் வாயில் வைத்துக்கொண்டு, அதை அவளுக்கு ஊட்டிட , கண் வெட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவளும் அவன் அருகில் வர, 'ஹாய்' என்று பேச்சைத் தொடங்கினான். அவள் தன்னை அறியாமலே, அவன் கையை பற்றினாள். அவனும் மெதுவாக அவளை தன்னுடன் அணைத்தான். இருவரும் மலர்களுடன் கொஞ்சி குலாவி, சிறகடித்து வட்டமிடும் வண்டுகளை ரசித்தபடி நடக்கத் தொடங்கினர். அவர்கள் புரிந்தோ புரியாமலோ ஏதேதோ பேசினார்கள். அவர்களுக்கு இப்ப மலர்களோ, வண்டுகளோ, தென்றல் காற்றோ, மரக்கிளைகளில் ஒன்றை ஒன்று கொத்தி காதல் புரியும் பறவைகளோ அல்லது தரையில் ஒன்றை ஒன்று துரத்தி, உரசி காதல் புரியும் விலங்குகளோ தெரியவில்லை அவனுக்கு அவள் மட்டுமே தெரிகிறாள். அவளுக்கு அவன் மட்டுமே தெரிகிறான்.

ஆசையில் ஒரு காதல் மொட்டாக அரும்பத் தொடங்கியது!   

அவர்கள் இருவரும் இசை மற்றும் கலையில் நாட்டம் கொண்டு இருந்ததுடன், இயற்கையின் மீது ஆழ்ந்த ஆர்வத்தையும் இருவரும் கொண்டு இருந்தது, இருவரின் மனமும் பலவகையில் இணைய அனுகூலமாக  இருந்து, அவர்களை மேலும் மேலும் ஒன்றாக்கின. இதழ்கள் குவிந்து மொட்டாக இருந்த காதல் ஆசை மெல்ல மெல்ல மலரத் தொடங்கின. காதல் என்பது இப்ப அவர்களுக்கு பேரின்பம், பேருணர்ச்சி, பேராற்றலாக மலர்ந்து அவர்களின் இணைப்பு மேலும் வலுவடைந்து, விரைவில் அவை பிரிக்க முடியாத உறவாக இறுக்கமாக வளர்ந்தது.

இருவரும் பல நேரம் மகிழ்வாக ஒன்றாக பொழுது போக்கியத்துடன், அவள் இதுவரை அனுபவித்திராத வகையில் அவளது இதயம் அவனிடம் சரணடைந்தது. "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்" என வள்ளுவர் கூறியது போல, நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா என்பதை அவன் உணரும் நாள் விரைவில் வந்தது. என்றாலும் அவனுக்குள் ஒரு போராட்டம். இது அவனின் இரண்டாவது காதல், முதல் காதல் பல இழுபறிக்குள் இன்னும் சிக்கி தவிக்கிறது. அவனுக்கு அந்த முதல் காதலில் பல விடயங்களால் வெறுப்பு என்றாலும், இன்னும் அந்த முதல் காதலி முழுமையாக விலகிப் போகவில்லை. 

அவன் தன் பிரச்னையை இவளிடம் கூறி, தான் எப்படியும் முதல் காதலுக்கு ஒரு முடிவை விரைவில் கொண்டுவந்து உன்னையே மணப்பேன் என்று சபதமும் செய்தான். ஆனால் அவள் அதை உடனடியாக நம்பும் நிலையில் இல்லை. என்றாலும் அவன் மேல் கொண்ட காதல் மட்டும் இன்னும் இன்னும் வளர்ந்துகொண்டே இருந்தது! அவளுக்கு ஆசையில் ஓர் காதல் அது மட்டுமே!

நாட்கள் கிழமைகளாக, மாதமாக நகர்ந்த போதிலும், அவனின் முன்னைய காதல் முடிவு இல்லாமல் இழுபறியில் இருந்த போதிலும், அவன் மேல் கொண்ட அவளின் 'ஆசையில் ஓர் காதல்' தணிந்த பாடாக இல்லை. அது இன்னும் பலத்துடன் அவள் இதயத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. அவளுக்கு நன்றாக தெரியும், அவனின் முன்னைய காதல் முடிவு பெறாமல், அவனை நேசிப்பதில் பயன் இல்லை என்று. அதனால் அவள், அவனில் இருந்து விலகி இருந்தாலும், அந்த அவளின் காதலின் தணல் அணைந்தபாடில்லை. அது புகைத்துக்கொன்டே இருந்தது.

காதல் ஒரு தந்திரமான விடயம் என்று அவளுக்குத் நன்றாகத் தெரியும். எனவே எதிலும் அவசரப் படாமல் நிதானமாக இருந்தாள். அவளின் ஆசையில் ஓர் காதல் வெற்றியா தோல்வியா என்று அவளுக்கு இன்னும் தெரியாது. அவள் இரண்டும் அற்ற நிலையில் தன் வீட்டின் முற்றத்து தரையில் இருந்தபடி நிலாவை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அது அவளின் காதல் தணலை திருப்பவும் ஊதி பற்றவைத்ததே தவிர, அதை அணைக்கவில்லை

ஆசையில் ஓர் காதல் அவள் இதயத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது. அவன் நல்ல செய்தியுடன் வருவான் என்று ஏங்கிக்கொண்டே இருக்கிறது! 

 :நன்றி-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment