விஞ்ஞானத்தின் விந்தை -நன்சாரம் வந்தது!

       அறிவியல்=விஞ்ஞானம்


 


 

வருடம் 2125 – மின்சாரம் போனது; நன்சாரம் வந்தது!

 

ஓர் இருநூறு வருடங்களுக்கு முன், “மின்சாரம்என்ற சொல்லே புதிதாக ஒலித்தது.

அது, ஒரு பிரகாசமான மந்திரம் போல மனித வாழ்க்கையை மாற்றியது.

அந்த ஒளியிலிருந்து தொடங்கி, மின்னணு வரைமின்சாரம் மனிதனின் மூச்சாக மாறிவிட்டது.

அந்த மின்னொளியில் தான் உலகம் விழித்தது, வேலை செய்தது, காதலித்தது, சிந்தித்தது!

ஆனால் மனிதனின் சிந்தனைக்கு எல்லை எங்கே?

அவன் கேள்வி கேட்கும் இடத்தில் இயற்கை மவுனமாக இருக்காது. மனிதனின் ஆக்கச் சிந்தனைகள் விரிவடைகின்றன.

 

தெரியாமல்தான் கேட்கிறேன்

மின்சாரம் பிறந்ததுபோல, இன்னும் ஒரு வித்தியாசமான சக்தி இருக்க முடியாதா? பிறக்க முடியாதா?”

 

விண்வெளியில் மிதக்கும் கோடானுகோடி நட்சத்திரங்கள்ஒவ்வொன்றும் நம்மால் இன்னும் அளவிட முடியாத ஒளியையும், அலைகளையும், கதிர்வீச்சுகளையும் பறக்க விட்டுக்கொண்டே இருக்கின்றன.

 

அந்த அலைகளின் இரகசியம் இன்னும் திறக்கப்படவில்லை.

மனிதன் இதுவரை பார்த்தது மின்சாரம் என்ற ஒரு அலை மட்டும்;

ஆனால் அண்டம் இன்னும் சொல்லாத பலஒளி மொழிகளைதன்னுள் வைத்திருக்கிறது.

மின்சாரம் என்ற பழைய, சிக்கலான, ஆபத்தான, செலவு கூடிய சக்தியை விட

இலவசமாகவும், சுலபமாகவும் கிடைக்கக்கூடிய ஒரு புதிய சக்தி மூலம் நிச்சயமாக இருக்கவே இருக்கிறது.

மனிதன் ஏற்கனவே எக்ஸ், அல்பா, பீட்டா, காமா, லேசர், மைக்ரோவேவ், இன்ஃப்ரா ரெட், யூ.வி. அலைகள் போன்ற சிலவற்றை மட்டுமே கண்டு பிடித்துவிட்டான்.

அவை அனைத்தும் மறைந்து இருந்தவையே  ஆனால் மனிதன் அவற்றை வெளியில் இழுத்து வந்தான்; கண்டு பிடித்தான்.

அதேபோல், இன்னும் மறைந்திருக்கும் புதிய சக்தியையும் கண்டுபிடிப்பான்.

அதற்கு நாம் பெயர் வைப்போமே — “நன்சாரம்என்று!

 

நன்சாரத்தின் யுகம்:

இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்குள்,

ஒரு சிறிய மைக்ரோசிப், ஒரு புள்ளி அளவு நுண்ணிய உதிரி,

விண்வெளி முழுக்க பாயும் அண்ட அலைகளை வாசித்து, பரிமாற்றி,

அதிலிருந்து ஒளி, வெப்பம், இயக்கம்அனைத்தையும் உருவாக்கும்!

 

>இனி கம்பிகள் தேவையில்லை.

>மின் நிலையங்கள் தேவையில்லை.

>பேட்டரிகளும் இல்லை. எலெக்ட்ரிக் ஷொக்கும் இல்லை!

அண்டமே நமக்குப் போதுமான சக்தி தரும்!

சூரியனோ, நிலவோ, நட்சத்திரங்களோ

அவைகளின் அலைகளே நம்மை இயக்கும்.

வீடுகள், தொழிற்சாலைகள், சாலைகள், வாகனங்கள்

அனைத்தும் இலவச நன்சாரம் மூலம் இயங்கும்.

 

பழைய கதை:

 மின்சாரம்என்றொரு காலம்!

இன்னும் 100 ஆண்டுகள் பின், மக்கள் வியப்புடன் பேசிக்கொள்வார்கள்;

அந்தக் காலத்தில்மின்சாரம்என்ற ஒன்றினால் மக்கள் எவ்வளவுக்கு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா?” என்று.



2125ல் ஒரு வீடு; ஒரு பாட்டியும், அவளின் 10 வயது பேரனும்.

பேரன்:

பாட்டி, மின்சாரம்னா என்ன?”

அவன் முன்னே அவனுடனே தானாகவே பயணித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிறிய ஒளி சிப்விண்வெளி அலைகளைப் பிடித்து, மாற்றிச் சக்தி தரும் அதிசய கருவி

மெதுவாக மெல்லிய நீல ஒளியினைப் பாய்ச்சிக்கொண்டு இருந்தது.

 

பாட்டி (சிரித்து):

அது ஒரு பழைய சக்தி முறை கண்ணா!

அதைக் கிடைக்க பெரிய கம்பிகள், மீட்டர்கள், பில்கள் எல்லாம் இருந்தது.”

 

பேரன்:

பில்? ஒளிக்கே பணம் கொடுத்தாங்களா?

அப்போ சூரியனுக்கு யார் பில் கட்டினாங்க?”

 

அவன் சிரித்து சிரித்து கீழே விழுந்தான்.

 

பாட்டி:

ஆம்ஒவ்வொரு நாளுமே, ஒவ்வொரு பாவனைக்கு பணம் கட்ட வேணும்.

ஏனென்றால் மின்சாரம் உற்பத்தி செய்ய எண்ணெய் தேடினோம், நிலக்கரி தோண்டினோம், அணுமின் நிலையம் கட்டினோம், நதிகளை அடைத்தோம், மின்மாற்றிகள், பைப்புகள், கொங்கிறீட் தூண்கள், கம்பிகள், காற்றாலைகள், சூரியத் தகடுகள், பேட்டரிகள் என்று .....

அப்பப்பா! அதற்காக பல நாடுகள் சண்டை போட்டன, உயிர்கள் பலி ஆனது…”

 

பேரன்:

அட பாட்டி! சும்மா கிடைக்கக் கூடிய ஒன்றுக்காக இவ்வளவு தூரம் துன்பம் அனுபவித்தார்களா?”

 

அவன் முன் மிதந்துகொண்டு இருந்த ஒளிசிப், அங்கிருந்து சென்று சுவரின் மூலையில் தானாக அமர்ந்துகொண்டது.

 

பாட்டி:

அது மட்டும் இல்லைக் கண்ணா

அந்த மின்சாரத்தைத் தொட்டால் ஆட்கள் உடனே இறந்து போய்விடுவார்கள்!”

 

பேரன்:

அய்யய்யோ, அப்போ, அந்தக் காலத்தவர்கள் ரொம்ப அறிவில் குறைந்தவர்களா?”

 

பாட்டி சிரித்தார்ஆனால் அந்தச் சிரிப்பில் கசப்பும் நினைவுகளும் கலந்திருந்தது. அப்போதைக்கு அவர்கள் புத்திஜீவிகள் என்று சொன்னால் அவன் என்ன ஏற்றுக்கொள்ளவா போகின்றான்?

 

அந்தச் சிரிப்பில் பழைய உலகின் உண்மை மறைந்து போனது

அந்த மின்சாரம் எத்தனை இரவுகளை ஒளியிட்டதோ,

அதைவிட எத்தனை உயிர்களையும் இருளாக்கியது.

 

அண்டத்தின் பாடசாலை:

 

வரும் நாள்களில், மனிதன் அண்டத்தின் நுண்ணிய அலைகளோடு இணைந்து வாழ்வான்.

அவன் சக்தி பெற்று பறப்பான்விமானம் போல அல்ல, எண்ணம் போல.

 

இன்று இது ஒரு கற்பனை போல தோன்றலாம்;

ஆனால் மின்சாரமும் ஒருகாலத்தில் கற்பனையாகத்தான் இருந்தது.

 

அண்டம் இன்னும் திறக்கப்படாத ஒரு பாடசாலை.

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு ஆசிரியன்.

மனிதன் இன்னும் மாணவன்.

அவன் கேள்விகள் தொடரும் வரை

புதிய சக்திகள் பிறந்து கொண்டே இருக்கும்.

 

இறுதிச் சொல்:

 

மின்சாரம் முடிந்த இடத்தில் மனித சிந்தனை தொடங்கும்!”

மின்சாரம் எங்களை ஒளிரச்செய்தது; நன்சாரம் எங்களை உயிராக்கும்!”


ஆக்கம்: சந்திரகாசன் செல்லத்துரை

0 comments:

Post a Comment