"புரியாத கர்வம் பலரைத் தள்ளிவைக்கும்
அறியாத உண்மை உன்னைச் சிதைத்துவிடும்
நெறியான வாழ்வு இல்லாமல் போய்விடும்
'புரிதலின் போது' எல்லாமே தேடிவரும்!"
கதிரழகி ஒரு அழகின் தரிசனம். அவளுடைய இருப்பு எவரையும் சலிப்படைய முடியாதவாறு, அது எந்த இடமாக இருந்தாலும் அதை ஒளிரச் செய்வது, அவளுடைய அற்புதமான உடல் அம்சங்கள் அவளைப் பார்த்த அனைவரையும் கவர்ந்திழுக்கும். தினமும் காலையில், அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறாள், அது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு தற்பெருமை!
ஒருமுறை அவளுக்கு திருஞான சம்பந்தர் உமாதேவியாரைப் பற்றி கூறியது ஞாபகம் வந்தது. "மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்" என்ற வரி. ஆனால் அவளுக்கு அவளின் அழகு முன் உமாதேவி எங்கே என்ற எண்ணம் தான் வந்தது. அவள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். அது தான் அவளின் புரிதல் அப்பொழுது!
இனிய புன்னகை, கருணை கொண்ட மனம், உதவ நீளும் கரங்கள், சோர்ந்திருக்கும் மனதிற்குத் தரும் இதமான அன்பு, ஆரோக்கியமான மனம், உடல் எல்லாமே அழகு தான். நான் என்பது கண்ணாடியில் தெரியும் உருவம் அல்ல. நான் என்பது எனது நம்பிக்கை, எனது திறமை, எனது தோற்றம், எனது எண்ணங்கள், எனது செயல்பாடு அனைத்துமே தான். ஆனால் இந்த "புரிதலின் போது" தான் உண்மையில் மனிதன் விழித்தெழுகிறான் என்பதை அவள் உணரும் பக்குவத்தில் இன்று இல்லை.
அவளின் எல்லையில்லா அழகால், ஆண்கள் பலர் அவளை நேசித்தார்கள், நண்பர்கள் அவளைப் பாராட்டினர், அந்நியர்களால் கூட அவளை உற்றுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆயினும் கூட, அவள் தன்னை அணுக முயற்சிக்கும் ஒவ்வொரு இளம் ஆண்களையும் தகுதியற்றவர்களாகக் கருதினாள், அவர்களை வெறும் அபிமானிகள் என்று ஒதுக்கித் தள்ளினாள் - அவளுடைய சொந்த மனதில். "ஆண்கள் என்னைப் போற்ற வேண்டும். என்னுடன் பேசுவதற்கு கூட அவர்கள் ஒரு அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும் " என்று செருக்காக நினைத்தாள்.
ஆண்டுகள் கடந்தன, அவளை ரசித்த ஆண்கள் ஒவ்வொருவராக அவளை விட்டு நகர்ந்தனர். அதில், எப்பொழுதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டும் இரக்கமுள்ள இளம் மருத்துவர் அறிவழகன் இருந்தான். ஒரு கனிவான இதயத்துடன் மற்றும் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்ட ஒரு பொறியியலாளர் நவீன் இருந்தான். இப்படிப் பலர். அவளின் ஒவ்வொரு மறுப்பிலும், ஒவ்வொரு கோரிக்கை நீக்கத்திலும், அவள் உண்மையான அன்பு மற்றும் தோழமைக்கான மற்றொரு கதவை மூடிக்கொண்டே இருந்தாள்.
ஆண்டுகள் உருண்டோடின, கதிரழகி பாராட்டுதலும் அழகும் நிறைந்த தன் சொந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஆனால் படிப்படியாக, அவள் மாற்றங்களை கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு காலத்தில் அவளைச் சூழ்ந்திருந்த நண்பர்கள் இப்போது தங்கள் தங்கள் "புரிதலின் போது" உண்மை அறிந்து, உலகம் அறிந்து, திருமணமாகி, குடும்பங்களை உருவாக்கி, தங்கள் வாழ்வை இன்பமாக மகிழ்வாக அமைத்து வாழ்வதைக் கண்டாள். தன் உடல் பூரிப்பும் அழகும் ஆண்டுகள் போகப்போக மங்குவதைக் கண்டாள். அப்பொழுது ஒரு நாட்டுப்பாடல் நினைவுக்கு வந்து முணுமுணுக்கத் தொடங்கினாள்.
"வாட வெத்தலை வதங்க வெத்தலை வாய்க்கு நல்லால்லே
நேத்து வச்ச சந்தனப் பொட்டு நெத்திக்கு. நல்லால்லே
குருவி கொத்தின அரளிப் பூவு கொண்டைக்கு நல்லால்லே
.மாமன் வந்து தோப்பிலே நிக்குது மனசுக்கு நல்லால்லே"
இப்படித்தான் தானும் நாள்ப்பட ஆகிவிட்டேன். "புரிதலின் போது" தான் என்னை, இளமை அழகின் உண்மையை, அறிந்துவிடேன் என்று தன்னை ஆறுதல் படுத்தினாள்.
ஒரு அமைதியான மதியம், அவள் தன் நண்பிடன் அமர்ந்து தேநீர் பருகினாள். இப்போது, நான் தனியாக இருக்கிறேன் மீரா. முப்பது வயதாகியும், என்னை அன்புடன் பார்க்கும் ஒரு ஆண் கூட இன்னும் இல்லை என்று கேட்டாள்.
மீரா ஆறுதலான புன்னகையை வழங்கி அவள் கையை அழுத்தினாள். “கதிரழகி, புரிதல்தான் மாற்றத்தின் முதல் படி. ஆம், ஒருவேளை உங்கள் இளமைப் பருவத்தில் சில புரிதலில்லா காரணங்களால் அது நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் இந்த
"புரிதலின் போது",
பெருமையை விட்டுவிட்டு, உங்கள் அன்பான உண்மையான இயல்பை மக்களுக்கு காட்டினால், உங்கள் தோற்றத்திற்கு மேலாக உங்களை நேசிக்கும் ஒருவரை நீங்கள் இன்னும் காணலாம். அது கட்டாயம் நடக்கும்" என்றாள்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment