தமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01

[ அலசல் -கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில் எழுத்து உருவாகிய போது,பல சமயங்கள்,பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன.என்றாலும்,அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேடவேண்டியுள்ளது.கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை.அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும்.காடுகள்,கொடிய மிருகங்கள்,இடி,மின்னல்,மழை,வெள்ளம்,புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள்.பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து,இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு.பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி,கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை உருவாக்கியிருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில்,மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ- இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க,அதற்கு ஒரு விளக்கம்
கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை,மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப்பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவகால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது?- கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா?....எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது?-எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது?/ ஏற்படுத்துகிறார்கள்?... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது?-தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை?... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை?... எல்லாத்திற்கும் மேலாக,முக்கியமான கேள்வி,ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது?...விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது.ஏன்? இன்றும் கூட,கடைசிக்கு முதல் கேள்விக்கு-அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு- இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு-மறுமைக்கு- இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட  அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள்
நம்பிக்கை அமைப்பு முறை தோன்றவும், முதலாவது சமயகுருமார் அமைப்பு தோன்றவும்,கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும்,கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும்,இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான  ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமைத்தது.

 எப்பொழுது மனிதன் முதல் முதல் ஆத்திகன் ஆனான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால்,மத நடத்தைகள் பற்றிய நம்பத்தகுந்த ஆதாரங்கள்,மத்திய பழைய கற்காலம் சகாப்தத்தில்[Middle Paleolithic era] இருந்து,அதாவது 300–500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அல்லது அதற்கு முன்பே இருந்து எமக்கு கிடைத்துள்ளன. சில அறிஞர்கள்,மனிதனின் மிக நெருங்கிய உறவினரான,சிம்பான்சிகள்[மனிதக்குரங்குகள்] மற்றும் பொனொபோ குரங்குகள்[chimpanzees and bonobos] போன்றவை, மனித கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு முன்னோடிகளாக உள்ளன என்கின்றனர், உதாரணமாக, சில மனிதக் குரங்குகள் கடும் மழை தொடங்கியதும் அல்லது ஒரு நீர் வீழ்ச்சியை காணும் போதும் ஆடுகின்றன. இந்த,இவைகளின் அடிப்படை ஆடும் காட்சிகள், மத சடங்குகளுக்கு ஒரு முன்னோடி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பல மிருகங்கள் தம் உறவினரின் பிரிதலால் அல்லது இறப்பால் துக்கம் கொண்டாலும், அங்கு,மனிதர்கள் போல்,இறுதி ஊர்வல சடங்குகள் நடைபெறுவதில்லை, எப்படியாயினும்,யானையின் விரிவான புதைத்தல் நடத்தையை காணும் ஒருவர், அது கட்டாயம் ஒரு சடங்கு முறையின் அல்லது மத நடத்தையின் ஒரு அறிகுறி என்பதை நிராகரிக்க மாட்டார்கள். உதாரணமாக, யானை ஒன்று இன்னும் ஒரு யானையின் இறந்த உடலை காணும் போது, அது அந்த உடலை சேறு,மண் மற்றும் இலைகள் கொண்டு பெரும்பாலும் அடக்கம் செய்கின்றன. அது மட்டும்
அல்ல,அவை தமது இறந்த உறவினரின் உடலை,அதிக அளவு பழங்கள்,மலர்கள் மற்றும் வண்ணமயமான இலைத்தொகுதி அல்லது குழை கொண்டு புதைக்கின்றன. எனினும் மனிதனை தவிர்த்த மற்ற எந்த மிருகங்களும் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் பிரார்த்தனை, வழிபாடு மற்றும் இவைபோன்ற மனிதனுக்கே உரித்தான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை. எது எப்படியாயினும், சில மனித குழுக்கள் அல்லது இனங்கள், தமது பண்டைய காவியங்கள் மற்றும் மதம் அல்லது கடவுள் கதைகளில் குரங்கு,யானைகளை இணைத்ததற்கு இந்த மிருகங்களின் இப்படியான நடவடிக்கைகளே காரணமாக் இருந்திருக்கலாம். இவை பின் படிப்படியாக கடவுள் அந்தஸ்த்தை அல்லது தகுதியை பெற்றிருக்கலாம்?உதாரணமாக அனுமான், கணபதி அல்லது பிள்ளையார் ஆகும்,மனிதனின் முந்தைய மத சிந்தனைக்கான சான்றாக,அவர்கள் தமது இறந்த உறவினர்களுக்கு செய்த சடங்கு முறை சாட்சியாகிறது. இந்த சடங்கு முறை அடக்கம், மனித நடத்தையில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுத்தது. இது,வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அவர்களின் விழிப்புணர்வை பிரதிநிதித்துவம் படுத்துவதுடன்,அதிகமாக அவர்கள் மறுமை பற்றி அறிந்திருந்தார்கள்  அல்லது அதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மத எண்ணங்களை குறியீட்டு மூலம் தெரிவிப்பது பெரும்பாலும் உலகளாவிய ஒரு முறையாகும். பொதுவாக மத நடவடிக்கைகளில் தெய்வீக அல்லது ஆவித்தொடர்புடைய சக்திகளையும்  அதன் கருத்துகளையும் பிரதி நிதித்துவம் படுத்த படங்கள் மற்றும் சின்னங்கள் உருவாக்குவது ஒரு இயல்பான செயல் ஆகும். அப்படியான முன்னைய சான்று மத்திய கற்கால ஆப்பிரிக்கா பகுதியில் கிடைத்துள்ளது. குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு,சாயப் பொருளான [நிறமி]  சிவப்பு காவிக்கல் [red ochre] பாவித்தது தெரிய வந்துள்ளது. இன்னும் உலகில் வாழும் வேடுவர்கள் மத்தியில், இந்த சிவப்பு காவிக்கல்,சடங்குகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உலகளாவிய மனித பண்பாட்டில், சிவப்பு நிறம்-குருதி,பாலியல், வாழ்க்கை மற்றும் இறப்பு[ blood,sex,life and death] போன்றவற்றை எடுத்துச் சொல்லும் அல்லது குறித்துக்காட்டும். எப்படியாயினும் இவையை தவிர,மனிதன் நவீன நடத்தையை[behavioural modernity] அடையும் முன்பு,அங்கு மதம் இருந்ததற்கான வேறு சான்றுகள் ஒன்றும் இல்லை. நடத்தை நவீனத்துவம்[behavioural modernity] என்பது பொருத்தமான நடத்தை மற்றும் அறிவாற்றல் பனுபுகளால் தற்போதைய  ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய  தற்கால மனிதர்,கிடத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன்பு,புராதான மனிதரில் இருந்து உருவாகிய உள்ளமைப்புப்படி நவீன மனிதர் போன்ற மனிதரில் இருந்து வேறுபடுத்துவதை குறிக்கும்.நவீன நடத்தை மனிதனில் 50,000 ஆண்டளவில் வெளிப்படத்தொடங்கி காலக்கிரமத்தில் முழுமை அடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.   

சமயம் மற்றும் ஆவி உலகம் பற்றிய விழிப்புணர்வு பழங்கற்கால பகுதியில், அதிகமாக ஆரம்பித்து இருந்தாலும், அது மேலும், உலகளாவிய பொதுவான பண்பாடுகளான [cultural universals] கலை,இசை,மொழி இவைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து தானும் விருத்தி அடைந்தது. வேடையாடி சேகரித்து வாழ்ந்த இந்த முன்னைய நாடோடி மக்கள்,அதிகமாக 10,000 ஆண்டுகளுக்கு முன்,தேவையின் அடிப்படையில் அல்லது அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வசதி நிமித்தம், முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறி வேளாண்மை நுட்பத்தை கற்று, முதலாவது விவசாயி ஆகினான். இந்த விவசாய வாழ்க்கையே ஒழுங்கமைக்கப்பட்ட மதம் ஒன்றிற்கு அத்திவாரம் இட்டது. இதன் மூல தடயம் மைய கிழக்கு (Near East) நாடுகளில், குறிப்பாக மெசொப்பொத்தேமியாவில் காணலாம். என்றாலும், இப்படியான விவசாய வாழ்க்கை சுயாதீனமாக உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று இருக்கலாம்?

        பகுதி 02 அடுத்த வாரம் தொடரும்..                                                           .


1 comments:

  1. ஒவ்வொரு மனிதனும் படித்து அறியவேண்டிய விடயங்களை நன்றாக தொகுத்து வழங்க்குகிரீர்கல்.தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete