"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"பகுதி:04

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


சைவ நாயன்மார்களில்/சித்தர்களில் திருமூலர் ஒரு முக்கியமானவர்.இவர் இயற்றிய திருமந்திரம் 3027 பாடல்களைக் கொண்டுள்ளது.இதுவே சைவ சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று இவர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார். 


"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
 நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
 சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
 நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே"[திருமந்திரம் 2104]

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார்.இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது.அது மட்டும் அல்ல,சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" என்று கூறுகிறது.அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர்.அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதையும் அறிந்தீர் என்கிறது.வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா? இதனால் சைவம் எந்த வேறுபாடும் காட்டாமல் மக்களை இணைத்தது.இதை,இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும்/பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான். மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது.“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின்(Lev Nikolayevich Tolstoy)  பிரபலமான வாசகம்.நம்மாலான உதவியை
அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும்,அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும்.அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறுகிறார்.அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும்,சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும்,அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர்.ஆகவே "அன்பே சிவம்",அதாவது அன்பு தான் கடவுள் என்பது,திருமூலர் விவரித்தவாறு,சைவ சமயத்தின் மையக்கருவாக உள்ளது.அதுமட்டும் அல்ல,'உள்ளது அழியாது,இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.அத்துடன் உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை.அவை தோற்றமில் காலந்தொட்டே [அநாதியாகவே,ஆதி அற்று] இருப்பவை என்றும் சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.மேலும் சுவாமி தாயுமானவர் "கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி,எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே",அதாவது மறப்பும் நினைப்புமாகிய கங்குல் பகலற்று எல்லா இடத்திலும் நின்திருவடிக் காட்சியே கண்டுகொண்டிருப்பர்;அத்தகையோர் யாவருங் கண்ட நன்னெறி யொன்றேயாம் என்றும்,சுவாமி சுந்தரர் "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என்றும், சுவாமி மாணிக்கவாசகர் "அவன்  அருளாலே அவன் தாழ்  வணங்கி" என்றும் கூறியதையும் நோக்குக.சைவ சமயம் உண்மை ஒன்று என்றும் பாதைகள் பல என்றும் ஏற்றுக் கொள்கிறது.ஒவ்வொரு மதத்தின் உள்நோக்கமும் மனிதனை மீண்டும் கடவுளுடன் இணைப்பது என்பதால்,ஒரு
உண்மையான சைவன் எவரினதும் நம்பிக்கையிலோ அல்லது மத நடை முறையிலோ தலையிடுவதில்லை.கடவுளை அடைய எந்த ஒரு பிரத்தியேக வழிமுறையும் இல்லை என அது நம்புகிறது.எல்லா மக்களும் ஆறுதல்,சமாதானம் மற்றும் விடுதலை காணும் முழுமுதற் பொருள் ஒன்றே என்கிறது.எனவே சைவன் எல்லா மத மரபுகளையும் எல்லா மதத்தவரையும் மதிக்கிறான்.அது எல்லா சைவனுடனும் எல்லா அந்நியனுடனும் இணங்குகிறது.ஒவ்வொருவரும் அவர் அவர் வழியில் கடவுளை உணரலாம் என்பதால்,எம் வழியே ஒரே வழி என்றோ அதுவே சிறந்த வழி என்றோ அது ஆலோசனை கூறவில்லை.ஆகவே கட்டாய மத மாற்றத்தை அது எதிர்க்கிறது.போர்துக்கேயர் இலங்கை இந்தியாவில் செய்த கட்டாய மத மாற்றம் அல்லது இன்னும் சில குழுவினர் இன்றும் செய்யும் இப்படியான செயல்கள் போன்றவற்றை அது கடைப்பிடிக்க வில்லை.அப்படி செய்யுமாறு ஆலோசனையும் கூறவில்லை.

பரவலாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 250 மில்லியன் மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகிறார்கள் என்றாலும்,இதன் பாரம்பரிய தளங்கள் இந்தியாவிலேயே,குறிப்பாக தென் இந்தியாவிலேயே உள்ளன.வரலாற்று சான்றுகள் சிவா அல்லது சிவலிங்க வழிபாடு கி மு 2500 ஆண்டு நாகரிகமான சிந்து சம வெளியில் அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடர்வதாக சாட்சி பகிர்கின்றன.அண்மைக்காலங்களில், சுமேரிய இலக்கியங்களில்,ஆழமான மொழியியல் ஆராய்ச்சி செய்த,மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழ் என்றும்,சுமேரியன் ஆலயங்களில் சைவ ஆகம மரபு சார்ந்த காட்சிகள் அல்லது நிகழ்வுகள் நடப்பில் இருந்துள்ளன என்றும் பல சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.எனவே,இந்த சான்றுகள் அல்லது கண்டுபிடிப்புகள்,எம் சைவ-தமிழ் [திராவிட] பாரம்பரியத்தை,பாபிலோனிய மற்றும் பண்டைய மத்திய கிழக்கு பண்பாட்டுடன் சமகாலத்துக்குரியதாக அல்லது அதற்கு முன்னோடியாக எடுத்துக் காட்டுகிறது.ஆகவே,எம் பண்டைய பாரம்பரியத்தையிட்டு நாம் பெருமை படுவதுடன்,உலகம் முழுவதும் பரந்து வாழும் அறிஞர்களுக்கு, குறிப்பாக இலங்கை அல்லது தென் இந்தியா திராவிட அறிஞர்களுக்கு,இவ்வாறான ஆய்வில் மேலும் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது வருங்கால சைவ சந்ததிக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும்.உலக வரலாற்றில் எம்முடைய சரியான பங்கை அல்லது அந்தஸ்த்தை நிலைநாட்ட, சுமேரு-திராவிட ஆய்வு முக்கியமாகும்.மேலும் புனிதமான,பெருமைக்குரிய எம் தாய் மொழியில் நாம் பிரார்த்தனை அல்லது வழிபாடு செய்தல் எமது பிறப்புரிமையும் ஆகும்.இந்த அறப்போர் பிராமணருக்கு எதிரானது அல்ல,ஆனால் பிராமணியத்துக்கு மட்டுமே எதிரானது என்பதை தெளிவாக்குவோம்-பிரித்தானிய[பிரிட்டிஷ்] ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மகாத்மா காந்தி போராடி வெற்றிகொண்டவாறு,மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அமைப்பிற்கு எதிராக நெல்சன் மண்டேலா போராடி வெற்றிகொண்டவாறு,சமஸ்கிருதம்,அந்நிய பண்பாடு மற்றும் பிராமணியம் திணித்த சாதி,நிற வேறுபாடுகளுக்கும் எதிராக 1500-1300 ஆண்டுகளுக்கு முன் எமது நாயன்மார்கள் அப்பரும் சுந்தரரும் மற்றும் எமது  மற்ற சைவ நாயன்மார்களும் தமது அறப்போரை ஆரம்பித்தார்கள்.அது இன்னும்,இன்றும் தொடர்கிறது.நீண்டகால பக்தி மரபும், உலகளாவிய சைவ கோட்பாடான ஒன்றே குலம் என்ற மனித சமத்துவத்தையும்,அன்பே கடவுள் என்ற சைவ வாழ்வையும் நாம் இன்னும் தொடர்ந்து பாதுகாத்து வருவதும்,வரலாற்றில் மிகவும் எம்முடன் சம்பந்தப்பட்டவை ஆகும்.இது இயற்கைக்கு எதிராக எதையும் செயலாற்ற எமக்கு ஆலோசனை கூறவில்லை.சில மதம்,சிறுவர்களை துறவிகள் ஆக்க வலியுறுத்தி மக்களை கட்டாயப்படுத்துகிறது.வேறு சில இசை,பாட்டு,நடனம் மற்றும் பிற நுண்கலைகளை,சரீர அல்லது உடல் இன்பத்தை அவை தூண்டுகிறது என்று தடுக்கிறது.அதே போல,இன்னும் சில,காட்டுக்கு போதல்,குகையில் வாழ்தல்,நிர்வாணமாய் இருத்தல்,சொந்த பந்தங்களை வெறுத்து ஒதுக்குதல் போன்றவைகளை பெரிய உன்னத தவம் என்கிறது.ஆனால் சைவம் அப்படியான எதையும் ஆதரித்து பரிந்துரைக்கவில்லை.இது மிகவும் பரந்த கொள்கையடையது,எளிமையானது மற்றும் இது எந்த உலக இயற்கைக்கும் எதிரானதும் அல்ல.

என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை,அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் முழுமையாக,விரிவாக அறியலாம் என கருதுகிறேன்.ஆகவே அதை முதற்கண் சுருக்கமாக அடுத்த பகுதியில் தருகிறேன். 
பகுதி 05 ..தொடரும்..
                                                                                                   

2 comments:

  1. உங்கள் ஆக்கம் வாசிக்க வாசிக்க மேலும் ஆவலாக உள்ளது.நன்றி.ஆனால் காந்தியின் போராட்டத்தினால் வெள்ளையன் வெளியேறவில்லை.சுபாஸ் சந்திரபோஸ்ஷின் ஆயுதப் போராட்டம் தாங்கமுடியாமலே ஓடினான்.ஓடும்போது ஆயுதத்திற்கு பயந்து போவதை காட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை.அதற்காகவே காந்திஜி யை உபயோகித்தான்

    ReplyDelete
  2. ஒன்றே குலம் என்று சொன்ன சைவம் அன்பே சிவம் என்று சொன்ன சைவம் கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது எப்படி? தமிழரில் ஒரு சாராரை சாதி அடிப்படையில் தீண்டப்படாதார் என சொல்லி திருக்கோயில்களுக்கு வெளியே வைத்திருக்கிறது. சைவ ஆகமங்கள் அதனை அனுமதிக்கிறது. மேலும் சைவக் கோயில்களில் இடம்பெறும் சடங்குகளில் 90 விழுக்காடு வேத (ஆரிய) முறைப்படியம் 10 விழுக்காடே தமிழர் முறைப்படியும் நடைபெறுகிறது. எனவே சைவம் தமிழர்களுடைய மதம் என்பது கேள்விக்குரியது.

    ReplyDelete