அண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)

அன்று.எமது நாடு உள் நாட்டு யுத்தத்தில் மூழ்கி அழிந்து கொண்டிருந்த  காலம். பலரும் உயிருக்கு பயந்து அங்கும் இங்கும் அகதிகளாக அலறி ஓடிக்கொண்டிருந்த வேளை, எங்காவது ஒரு நாடு சென்றுவிடவேண்டும்  என்ற எண்ணம் மேலோங்க நான் (ஜெயகுமார்) எடுத்த முயற்சியின் பலனாக க்கனடிய மண்ணில் கால் பதிக்கிறேன்.
நான் வந்த காலம், இங்கு தமிழரை காண்பது மிக அரிதாகவே தென்பட்டது. அதேவேளை  எனது கனடிய இருப்புக்கு கனேடிய சட்ட ரீதியிலான அலுவல்கள்  மேற்கொள்ள பல அலுவலகங்களின் படிகளில் ஏறிஇறங்க   வேண்டி இருந்தது.
இப்படியே ஒருநாள் ஒரு அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் ஒன்றினை நான் நிரப்பிக்கொண்டிருந்த வேளையில் தன் கையில் ஒரு படிவத்துடன் என் அருகில் வந்த ஒரு இளம்யுவதி 
 ''அண்ணா நீங்க தமிழோ?''என்று தயங்கியவாறே கேட்டாள்.
சற்றும் எதிர்பாராது என் அலுவலில் இருந்த நான் புன்னகைத்தவாறே 
''தமிழ் எண்டு தெரிஞ்சுதானே அண்ணா எண்டீர்கள்''என்றேன்.
சிரித்துக்கொண்ட அவளும்,''அண்ணா,இதையும் ஒருக்கா நிரப்பித் தாறியளோ?''என்றவாறே அப்படிவத்தினை நீட்டிக்கொண்டிருந்தாள்.
நானும் ''பிரச்சனையில்லை'' என்றவாறே அவள் படிவத்தினை வாங்கி நிரப்பும்போது அதன் கேள்விகளுக்குரிய பதில் ஒவ்வொன்றுக்கும் அவள் ''அண்ணா'' என விழித்துக் கொண்டது, உறவுகளை பிரிந்து பல ஆயிரம் மைல்கள் கடந்த நிலையில் என் உள்ளத்தினில் அது சகோதர உணர்வாக உறைந்து கொண்டது.
அன்றிலிருந்து புதிய தேசம் தந்த புதிய உறவு நல்ல ஒரு சகோதரியாக  மலர்ந்துவிட  நானும் நல்லதொரு அண்ணணாக  பழகி என்னாலான உதவிகளையும் செய்தேவந்தேன்.
 அவளின் நிரந்தர வதிவுரிமை கிடைத்ததும் எங்கள் மகிழ்ச்சிக்கு நடுவில் அவளது கல்யாண பேச்சுக்களும் ஊரில் முற்றுப் பெற்றதனை இந்த அண்ணனுக்கே  முதலில் சொல்லி ச் சந்தோசப்பட்டாள்.
அவளின் திருமணத்திற்காக டொரோண்டோ விமான நிலையத்தில் அவளை ஊருக்கு அனுப்பி வைத்தபோது அவள் கண்களில் வெளியேறின கண்ணீர் துளிகள் என்னை உருக்கிவிட்டது.
திருமணம் இனிதே நிறைவேறி கனடா வந்து அவள் தன கணவனுக்கு செய்யவேண்டிய ''ஸ்பொன்சர்'' அலுவல்களையும் முடித்துக்கொண்டபோது என்னவோ பெரும் திருப்தியினை நான் உணர்ந்து கொண்டேன்.
''அண்ணா!அவருக்கு விசா கிடைச்சிட்டுது'' என்று அவள் கூறியதும்   அவளை அழைத்து சென்று விமான சீட்டுக்கு ஒழுங்கும் பண்ணியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
அவர் டொரோண்டோ வந்து இறங்கும்  நாளும் வந்தது.
அவளை அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்ற நான்  நீண்ட நேரம் காத்திருந்து அவரினை சந்தித்தோம்.
அவரைக் கண்டதும் ஓடோடி சென்றவள்,
''அத்தான்,எப்பிடியத்தான் பயணம்.இங்க இவர்தான் ஜெயகுமார்.உங்களுக்கு சொல்லுவனே! உதவியெல்லாம் செய்யுறவர் எண்டு.'' என்று கூறியவள் எனது பக்கம் திரும்பி 
''ஜெயகுமார்,காரை எடுத்துக்கொண்டு வாருங்கோ!நாங்கள் வாசலிலை நிக்கிறோம்!'' 
ஓ!அத்தானைக் கண்டதும்  அண்ணன் உதயகுமாரனாகி விட்டான்.
ஐயகோ! என்ன இந்த உலகம்! இடிந்த நெஞ்சுடன் பனித்த விழிகளுடன் நான்  காரினை எடுக்க அதற்குரிய பார்க்கிங் பணத்தினை செலுத்திக்கொண்டே இதுவரையில் நடந்தவற்றை இரை மீட்கலானேன். 
 [கதை வடிவம் -செ.மனுவேந்தன்]


0 comments:

Post a Comment