தமிழரின் மூட நம்பிக்கைகள்,பகுதி-09"A"‏

  "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்கள்"
Omens relate to animals, birds and reptiles. 
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam]

"நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....."
[ சங்க கால  சத்திமுற்றப் புலவர்]
பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.நாரைக் கூட்டங்களே.நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில்,தலைவன் வரும் சேதியை பல்லி சகுனம் சொல்கிறதா என வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால்,இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் மேலே கூறிய செய்யுள்.இதனால்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,சங்க காலத்திலேயே, பல்லி சகுனம் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது எமக்கு இப்ப தெரிய வருகிறது

மேலும் சகுனம் என இக்காலத்தில் வழங்கும் பொதுச்சொல் சங்ககாலத்தில் புள், நாள், ஓரை, நிமித்தம் போன்ற சொற்களால் உணர்த்தப்பட்டது.பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர்.இதை மேலே உள்ள பாடல் புலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால்,"பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர்.காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி/chameleon) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக் கூட நல்ல புள் (நல்ல சகுனம்) என்று கருதினர்

"வேதின வெரிநி னோதி முதுபோத்     
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்     
சுரனே சென்றனர்............"
[குறுந்தொகை 140. பாலை திணை ]

கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய,முதிய ஆண் ஓந்தியினது சத்தத்தை,வழிச்செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுகின்றனர் அப்படிப்பட்ட  பாலைநிலத்திற் எம் காதலர் சென்றனர் என்கிறது இந்த சங்க பாடல்

கூடுதலான நிமித்தம்,சகுனம் என்பவை மிருகங்கள்,பறவைகள்,ஊர்வன என்பனவற்றுடன்தொடர்புடையன.மிகவும் வியப்பூட்டும் அல்லது ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்னவென்றால் சில சகுனங்கள் சங்க காலத்தில் இருந்தவாறு அப்படியே மாறாமல் இப்பவும் இருப்பதே.உதாரணமாக பல்லி, காகம்  இவைகளின் சகுனத்தை கூறலாம்.

ஒரு பயணத்தின் போது யானையை காண்பது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது.அது போல ஒரு வீட்டின் உச்சியின் மேல் ஒரு  ஆந்தை,கோட்டான் குந்தி இருப்பது மிக கெட்ட சகுனமாகும் .இது படுவீழ்ச்சி, நாசம், அழிவு,மரணம் போன்றவற்றுக்கான
ஐயுறவு இல்லாத,உறுதியான அறிகுறியாகும்.நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு நாய் இரவில் ஊளையிடுவது,"சா" வருவதை குறிப்பதாக நம்புகிறார்கள்
காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை-அதற்கான நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் சங்கத் தாயைக் காட்டுகிறது கிழே தரப்பட்ட ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.
ஐங்குறுநூறு 391, ஓதலாந்தையார், பாலை திணைதலைவியின் தாய் சொன்னது
"மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம் சின விறல் வேல் காளையொடு
அம் சில் ஓதியை வரக்கரைந் தீமே."
"அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன்....அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ!அதன் பிறகாவது...என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம் குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ!"என்று லஞ்சம் கொடுப்பது போல,சாப்பாடு கொடுத்து அதைக் கூவி அழைக்கிறாள் இந்த சங்கத் தாய்!

பகுதி09"B":"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்களின் இரண்டாம் பகுதி அடுத்தவாரம் தொடரும்


0 comments:

Post a Comment