தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் :

மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் தவறு என்று உணர்ந்த பின், அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்பது தான், உங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
       செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல.. அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனனை!
       குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள்? உங்களை அடிதவரிடமே கூட எந்த வண்மமும் இல்லாமல் திரும்ப அவ்ர்களிடம் செல்வீர்களே... அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது?
       வளர வளர உடல் அளவிலும் மனதளவிலும் இருகிவிட்டீர்கள்.
       சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.
       அந்த அடையாளத்தின் கெளரவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், உங்கள் நேர்மையையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். அதனால் தான் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டீர்கள்!
       "மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது, அறியாமல் செய்துவிட்டேன்! அடுத்த தடவை திருத்திக்கொள்கிறேன்!" என்று பணிந்து சொல்வதால், என்ன குறைந்துவிடுவீர்கள்.
       தவற்றை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.
       ஒரு முறை சங்கரன்பிள்ளை, இன்னொருவர் தோட்டத்தில் கனிந்த பழங்கள் தொங்குவதைக் கண்டார். ஒரு கோணிப்பை எடுத்து வந்தார், வேலி தான்டிக் குதித்தார்.
       மரத்திலிருந்து பழங்களைப் பறித்தார். கோணிப்பையை நிரப்பித் தோளில் போட்டுக்கொண்டார். வேலி தாண்டி வெளியேறப் பார்த்த போது தோட்டத்தின் சொந்தக்காரன் கையில் வசமாக சிக்கிக் கொண்டார்.
       "யார் அனுமதியுடன் இவற்றைப் பரித்தாய்?"
       "நான் பறிக்கவில்லையே, பலமான காற்று அடித்தது, அவற்றில் இவை எல்லாம் உதிர்ந்தன!" என்றார் சங்கரன்பிள்ளை.
       "அப்படியானால், இந்தக் கோணியை எதற்காக எடுத்து வந்தாய்?"
       "... இதுவா? இதுவும் காற்றில் காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்தது!"
       “காற்றிலே பழங்கள் உதிர்ந்திருக்கட்டும்.... கோணியும் பறந்து வந்திருக்கட்டும்! பழங்களைக் கோணியில் நிரப்பியது யார்?" என்று சொந்தக்காரன் உறுமினான்.
       சங்கரன்பிள்ளை அதற்கும் கலங்காமல், அப்பாவி போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு, "அது தான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்றார்.
       தவறு செய்பவர்கள் பலரும் சங்கரன்பிள்ளை போலத் தான்.... கையும்களவுமாகப் பிடிபட்டாலும், தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.
       இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!
நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், மேலதிகாரியிடம், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் என்று பாகுபாடு பார்க்காதீர்கள்.
       என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.
       தவறு என்றே உணராமல், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைக் காயப்படுத்தி விடுவார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் உனக்கு வேதனை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்பார்கள்.
       பழைய ஜோக் ஒன்று...
       பஸ்ஸில் ஒருவன் தனக்கு பக்கத்தில் நின்றவனின் காலை அழுத்தமாக மிதித்துவிட்டான். பின்பு கவனிக்கலே என்று சொல்லி, காலை எடுத்துக் கொண்டான்
       மிதிபட்டவன் தன் காலைப் பார்த்து, "...காலே! அவர் தான் காரணத்தை சொல்லி விட்டாரே! இன்னும் ஏன் வலிக்கிறாய்?" என்று அதட்டினாய்.
       வேண்டும் என்றே மிதித்தாலும், தெரியாமல் மிதித்தாலும் வலி, வலி தானே?
       மன்னிப்புக் கேட்பதை விடுத்து, "வேண்டுமென்றா மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்.
       கவனமற்று இருப்பதே ஒரு தவறு என்பதை புரிந்து கொள்ள மறுக்கலாமா?
       கவனிக்காதவரை, அதே வேதனையை இன்னும் பல நூறு பேர்களுக்கு கொடுக்க நேரலாம் அல்லவா?
       கவனமில்லாமல் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால், தவறு பற்றிய கவனமில்லாமல் தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது.
       சிலர் உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடும், பார்த்துவிட்டு தான் போகட்டுமே!
       நீங்கள் மன்னிப்பு கேட்டால், உங்கள் யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?
       புரிந்துகொள்ளுங்கள்.. இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....
       வியாபாரம் செய்தாலும், விளையாட்டாக இருந்தாலும், உங்கள் தவறுகளை எற்றுக்கொள்ளப்வதைப் பொறுத்து் தான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது.
      தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை, மனதிற்க்குள் சிலுவை போல் உங்கள் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.
       உங்கள் அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும், கவலைப்படாமல் செயல்பட்டாலும், காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு உங்களைத் துரத்தும்.
       தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து விழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பலம்!


வாழ்க வளமுடன்!

0 comments:

Post a Comment