தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:

 superstitious beliefs of tamils:
"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]


"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்கள்/Omens relate to animals, birds and reptiles". :

"திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
" ( குறுந்தொகை , 210 )
“பலம் மிகுந்த தேரை உடைய நள்ளியின் காட்டில்,இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன்,தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லின் சூடான சோற்றைக் கலந்து,காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறே.ஏனென்றால்,என் தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்திற்கு ஒரு நல்ல மாற்றாக ,விருந்தாளி வருவான் என்று அறிவித்துக் கரைந்த காக்கைக்கு இந்த உணவாகிய பலி மிகச் சிறிய கைம்மாறே ஆகும் ”என்கிறாள் இன்னும் ஒரு சங்கத் தோழி.
சங்க பாடல்களான ஐங்குறுநூறு 391,குறுந்தொகை 210 இன் படி காகம் விருந்தினர் வருவதை முன் கூட்டியே சொல்லும் திறன் உடையதாகும்.அதாவது ஒருவர் வீட்டில் காகம் கரைந்தால்,கட்டாயம் அங்கு விருந்தினர் வருவர் என எதிர் பார்ப்பார்.அதாவது காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக்கொள்ளுவர் என்கிறது. யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் அங்கு இரு வகையான காகங்கள் உண்டு.ஒன்று சிறியது.இது காலையில் கரைந்ததால் நீங்கள் ஒரு நல்ல செய்தியை எதிர் பார்க்கலாம்.அதாவது கடிதமோ விருந்தினரோ வரலாம்.அடுத்தது பெரிய காகம்.அது சத்தம் போட்டால்,அது
கேடு,பொல்லாங்கு,நோய் போன்றவற்றை குறிக்கும்.ஒரு பயணத்தின் போது ஒரு மயிலை காண்பது நல்ல சகுனம்.ஆனால் அதன் கீச்சுக் குரலை கேட்பது வழிப்பறி நடக்கப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதாக இருக்கும்.ஒரு வருத்தக்காரன் இருக்கும் கூடத்திற்கு முன்னால் ஒரு நாய் ஊளையிட்டால் , அவரின் மரணத்தை அறிவிப்பதாக இருக்கலாம்.ஒரு புது வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவதை ஊக்கமூட்டு கிறார்கள்.காரணம் அது நல்ல எதிர்கால நிலையை/செல்வ வளத்தை தரும் என்பதால்.ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள்.உண்மையில் அது ஏன் ஆடுகிறது?விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றின் படி அது பெண் மயிலை கவருவதற்காகவே என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
எப்படியாயினும் பல்லியே பல மூட நம்பிக்கைகளுக்கு தானே காரணமாக உள்ளதாக அது தனக்கு தானே பெருமிதங் கொள்ளத்தக்கதாக உள்ளது.பல்லி சோதிடம்[Gowli Shastra ]என்று ஒரு தனி பிரிவே உண்டு.அது மட்டும் அல்ல நாட்காட்டிகள்,பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும்.பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து தம் மனதை குழப்புவது இன்னும் நிகழ்கிறது. 
குறுந்தொகை 218, கொற்றனார், பாலை திணை – தலைவி சொன்னது

"விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் 
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் 
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் 
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி 
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம்மின்று 
இமைப்புவரை அமையா நம்வயின் 
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே."

தோழி! அவர் என் உயிருக்கு உயிரானவர்.இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.என்னை நினையாது மறந்து விட்டு இவ்வாறு அவர் சென்றதால்,நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்கு பலிக்கடன் செய்ய மாட்டேன்,என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன்,பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன்,நல்ல சொல்லுக்காக காத்துக்கொண்டு இருக்க மாட்டேன்.அவரைப்பற்றி நினைக்கவும் மாட்டேன்.என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள்.இது பல சங்க கால மூட நம்பிக்கைகளை கூறிச் செல்கிறது.மேலும் சில நம்பிக்கைகளை சுருக்கமாக கிழே தருகிறேன்.  
"காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது."
"வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்."
"பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்."
"பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்."
"பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்." 
"தவக்கை கத்தினால் மழை வரும்"
"கோழி சிறகை விரித்து மண்ணில் பதுங்கினால் மழை வரும்"
"தட்டான்[தும்பி/dragonfly?] தாழப்[கிழே] பறந்தால் மழை வரும்"
"ஆடு கூடி கூடி அலந்தால் மழை வரும்"
நான் எப்பவோ கேட்ட,வாசித்த ஒரு நிகழ்வு இப்ப ஞாபகம் வருகிறது.

 "ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தான்.அப்ப ஒரு ஏழை அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்தான்.அதன் பிறகு அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லைமல் போயிற்று.ஏன் என்று யோசித்து பார்த்தான்.அப்பொழுது தான் காலையில் முழித்த அந்த ஏழை முகம் ஞாபகம் வந்தது.அது,அந்த சகுனம் சரியில்லை என்ற எண்ணம் தோன்றியது.ஆத்திரம் அடைந்த அரசன்,தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த
ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டான்.
ஏழை அழைத்துவரப்பட்டான்.தனது கெட்ட,துக்க நிகழ்வுகளுக்கு காரணமான அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தான்.ஆனால் அந்த ஏழையோ எந்த கவலையோ,துக்கமோ இன்றி சிரித்தான்!சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பினான் அரசன்.அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 
ஏன் சிரிக்கிறாய்?என்று கேட்டான்.அந்த ஏழை மிக அமைதியாக சொன்னான். 
'என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன்.எனக்கோ என் உயிரே போகப் போகிறது.யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன்' என்று கூறினான்." 
இப்ப சொல்லுங்கள் "எது நல்ல சகுனம் ? எது கெட்ட சகுனம்?"
பகுதி/Part 10:"சாவும் பேயும்/death & Spirits:" அடுத்தவாரம் தொடரும் 

0 comments:

Post a Comment