ஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்!

கண்ணுக்கு தெரியாத பாபாவின் புகைப்படம்சமீபத்தில் நித்திய சொரூபி சந்தண மழை ஷிரிடி சாய் பாபா ஆலயத்தில், கடந்த வருடம் நிகழ்ந்த அதிசயம், அற்புதம் ஒன்று, இரவில் CCTV  கமெராவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மையான யூ டியூப் வீடியோ ஒன்றின் மூலம் பார்க்கும் நற்பாக்கியம் எனக்கு அவர் திரு அருளாலே கிடைத்தது!

இவ் வீடியோவில், சாய் பாபாவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த  பூ மாலை, இரவு நேரத்தில், யாருமே இல்லாத சமயத்தில், அது கட்டவிழ்ந்து, தானாகவே தோளை விட்டு விலகி, கை மேல் தவழ்ந்து, தரையில் கீழே விழுந்திருக்கின்றது! அது மட்டுமல்ல, ஒருவரின் உதவியோ அல்லது தொழில் நுட்ப புனைபாடுகளோ இன்றி, மாலையை அவர் தன் மார்பினை விரித்தும், கைகளை அசைத்தும் கீழே தள்ளி, வலு ஒழுங்காக கீழே விழுத்தியும் காட்டி உள்ளார்.

ஆஹா, ஆஹாஇச்செயலின்மூலம் அவர் எங்கள் மீது காட்டிய கருணையே கருணை! அப்பப்பா! இந்த அற்புத செயலைக் காண நாம் எத்தனை, எத்தனையோ ஜென்மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று விடயம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள். இந்த அற்புதத்தினை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்!

பக்தர்கள் இட்ட மாலையை வேண்டாம் என்று அவர் உதறித் தள்ளினார் என்று சில விதண்டாவாதிகள் கூறிக்கொள்ளுவார்கள்; நம்பாதீர்கள்! அவர்கள் எல்லாம் ஞானக் கண் அற்ற ஊனக் கண்ணினர்! இது அவர்களுக்கு விளங்க மாடடாது.

இந்த அதிசயம் நடந்த கோவிலில் நேரே சென்று தரிசனம் செய்து அருள் பெற்றிட ஏராளமான பகதர்கள் திரள், திரளாகச் சென்று கொண்டு இருக்கின்றார்கள். எக்கச்சக்கமான பலன்களை அவர் வாரி, வாரி  வழங்க, அவர்கள்  அள்ளி, அள்ளிக்கொண்டு செல்வது கண் கொள்ளாக் காடசியாக இருக்கிறது!

இந்தப் பெரிய அதிசயத்தின்மூலம், பாபா நம் எல்லோரையும் ஆசீர்வதிக்க வந்திருக்கின்றார் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை ஆகும். இது உலகத்திற்கு ஒரு நன்மையான விடயம் ஆகும். உலக நாடுகள் எல்லாம் இதுபற்றி மிகவும் ஆனந்தம் அடைந்துள்ளன. அனைத்து தேசத்து தலைவர்கள், மக்கள் எல்லோரும், இனி என்ன கஷ்டம்; கடவுள் வந்துவிடடார்தானே என்று மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.

எந்தப் பொருளும், அது மாலையோ, சேலையோ கழன்றால் நிச்சயமாக  மேலே நோக்கித்தான் செல்ல வேண்டும் என்ற நியூட்டனின் புவியீர்ப்பு விதிக்கு எதிராக, ஒரு சின்னக் குழந்தைக்கே தெரிந்த அறிவுக்கும் அப்பால், அது மேலே போகாது கீழே விழுந்திருக்கிறது! என்னே ஆச்சர்யம்! என்னே அற்புதம்!
இந்த அற்புதத்தால் இனிமேல் உலகெங்கும்,
- பசி, பட்டினி என்பது நீங்கி விடும்.
- எல்லோருக்கும் நிறைய பணம், பொருள் எல்லாம் கிடைக்கும்.
- ஒருவரையும் தீராத நோய்கள் ஒன்றும் அண்டாது.
- சகல பயங்கர வாத கொலைகள் எல்லாம் இல்லாது ஒழியும்.
- பொய், களவு, வெட்டு, குத்து, கடத்தல், கொலைகள் எல்லாம் இருக்காது.
- நல்ல அரசு உருவாகும்.
- லஞ்சம் ஒழியும்.
- சுபீட்ஷம் உண்டாகும்.
- எல்லாவற்றிலும் மேலாக, எல்லோரும் விரும்பும் சொர்க்கம் இறந்த பின்னர்  போய்ச் சேருவோம்.
இதேபோல, சமீபத்தில் கனடாவில் கடவுள் சாய் பாபா, சுவரில் நிழல் வடிவத்தில் வந்து விழுந்தும் அடியார்களைப் பரவசப் படுத்தி, கருணை மழை பொழிந்துள்ளார் என்பதும் ஒரு  நம்ப முடியாத, ஆனால் உண்மையில் நடந்த அற்புதம் ஆகும். வந்தது உலகத்துக்கு நல்ல காலம்!
அதனால், எல்லோரும் இனிமேல் வீட்டில் சும்மா இருந்து, 'சாய் ராம்' என்று சொல்லிக்கொண்டே இருப்போம்!
அவர் (கடவுள்) எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்!
மேலும், இந்தியாவில் உள்ள செத்துப்போன, மற்றும் இனி சாகப்போகும்  ஆயிரக்கணக்கான கடவுள்மார் எல்லோரும் அடிக்கடி இப்படியான, நம்பவே முடியாத அற்புதங்களை நிகழ்த்தி, இவ்வுலகில் உள்ள மக்களின் ஆன்ம முன்னேற்றத்துக்காக உழைக்க முன் வர வேண்டும் என்று, அதே கடவுள்மார்களை நாங்களும் எந்நேரமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்போமாகசாய் ராம்.
                          --செல்வத்துரை    ,    சந்திரகாசன்-- 

குறிப்பு: கடவுள் என்றால் என்ன என்று அறியமுடியாத, உணரமுடியாத , புரியமுடியாத மேற்படி அப்பாவிகளை  வைத்து உழைக்கும் இப்படியான 
கூட்டம் பெருக்கிச் செல்லும் நிலைக்குக்  காரணம் அந்த அப்பாவிகளின் [கடவுளைப்  பயங்கர வாதியாக கருதும்] பய பக்தியே! மந்திரம்,தந்திரம் செய்பவர்கள் கடவுள் என்றால் வளர்ந்துவிடட நாடுகளில் ஏராளம் கடவுள்கள் இதுவரையில் உருவாக்கப்பட்டிருப்பார்கள். அற்புதங்கள் கடவுளின் செய்கைகளாக இருக்கவும் முடியாது. அதனால் மனிதனுக்கோ ,உலகிற்கோ இல்லை நீங்கள் கருதும் கடவுளுக்கோ எவ்வித பயனுமில்லை. அதை வைத்துப் பிழைப்போர் பணப்பைதான் நிரம்புகிறது.
- சித்தர் குறிப்பிலிருந்து..
.......................................................................................................................

1 comments:

  1. சாய் ஹரன்Saturday, June 09, 2018

    இப்படி விழும் விடயம் ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த மதப் பெரிய கடவுள் சரி, எனக்கு முன்னர் நேராகத் தோன்றி, என்னுடன் ஒரு மாசம் என் வீட்டிலேயே இருந்துதங்கி விட்டுப் போனால்கூடி நான் அதை பெரிய அற்புதம் என்று எடுக்க மாடடேன். அவரால் எனக்கோ, உலகுக்கோ என்ன கிடைத்தது என்றுதான் பார்த்து அவரை எடை போடுவேன். வெறுமனே வந்து என்னோடு இருந்து தண்டச் சோறு சாப்பிடட ஒருவரால் என்ன இலாபம் சொல்லுங்க!

    ReplyDelete