மாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா?


நாம் இருக்கும் பூமியில் வளி மண்டல கரியமி வாயுச் செறிவு, நீர் அசுத்தமாகல்  நிலத்தில தேங்கும் குப்பைகள், அளவுக்கும் மீறிய சத்தங்கள், அபாயகரமான கதிர் வீச்சுகள் என்பனவற்றால் சுற்றாடல் மாசு படுதல் மிகவும் வேகமாகப் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இவற்றினுள், பூமியின் தரையில் நடக்கும் மாசடைதல்களை ஒருவாறு செல்வந்த நாடுகளினால் கட்டுப்படுத்த முடியும்.  என்றாலும், வெளியில் ஆகாயம் வரை நம்மைச் சூழ்ந்திருக்கும், நம்மை ஆரோக்கிய சுவாசத்துடன் வைத்திருக்கும், நம்மை சுட்டுப் பொசுக்கக் கூடிய  கதிர் வீச்சுகளில் காப்பாற்றும் வளி மண்டலத்தினுக்குள் செலுத்தப் பட்டிருக்கும் கரியமி   வாயுவினால் - மீதேன், நைதரஸ் ஓக்சைட் வாயுக்களினாலும் -  ஏற்பட இருக்கும்  பேரழிவில் இருந்து நாம் காப்பாற்றப் படுவோமா?

முடியும் என்றுதான் ஆராட்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்!

பூமியின் வளி மண்டலத்தினில் தொழில் புரட்சி தொடங்கிய காலத்தின் முன்னர் கரியமி வாயுவின் செறிவு  250 (ppm ) அளவாக இருந்தது. ஆனால் இப்போதோ 400  அளவுக்கு வந்து விட்டது.. இந்த விகிதத்தில் போனால் காலப் போக்கில் உயிர்கள் எல்லாம் மூச்சுத் திணறி இறந்து போவது நிச்சயம்.

இதைத் தவிர்க்க உலகெங்கும் பலவிதமான முன்னெடுப்புக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கரு வாயுவின் வெளியேற்றத்தை உள்வாங்குவதற்காக பாரிய மர நடுகை இயக்கம் நடந்து கொண்டு இருக்கின்றது. கரிப் புகையைக் குறைப்பதற்காக, சூரிய ஒளி, காற்று, நீர் வீழ்ச்சி, கடல் அலைகள் மூலமாக சக்திதனைப் பெறுவதற்கு உலகெங்கும்  முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

இதை விட, விஞ்ஞானிகள் வேறு விதமான வழிமுறை ஒன்றைக் கண்டு பிடித்து, அதன் பொருளாதார ரீதியிலான பரீட்ச்சார்த்த செயல் முறைகளில் ஈடுபட்டிருக்க கொண்டு இருக்கிறார்கள்.

வேறு ஒன்றும் இல்லை; நிலத்தில் இருந்து பல்வேறு இரசாயன சேதனப் பொருட்களை எல்லாம் கிண்டி எடுத்து, அவற்றை எல்லாம் பெரிய அளவில் எரித்துப் புகை ஆக்கி இறுதியில் கரியமி வாயுவாக வளி மண்டலத்தினுள் தள்ளுகின்றோமோ, அத்தனை கரி வாயுவையும் திரும்ப இழுத்து, சில செயல் முறைகளின் மூலம், அவ்வாயுவை  மனிதனுக்கு உபயோகமான பொருட்களாகவும, மருந்து உற்பத்திக்கு தேவையான இரசாயனக் கலவைகளாகவும், மாற்று சக்தி உருவாக்கிகளாகவும், மண்ணுக்கு உரம் சேர்க்கும் பதார்த்தங்களாகவும் மாற்றிவிட முடியும். மிகுதியாகும் திண்ம சேதன எச்சங்களை பாறைகள் வடிவிலும், பூமியின் அடியிலும், கடலின் தளத்திலும் ஒதுக்கி வைக்க முடியும்.

இதற்கான ஆய்வுகள் உலகின் பல பாகத்திலும் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன. முக்கியமாக கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மிகவும் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர் ஆகின்றார்கள்.

தாவரங்களில், சூரிய ஒளித்தொகுப்பின்போது, சூரிய ஒளி உதவியோடு, வளிமண்டல  கரியமி வாயு, நீருடன் சேர்ந்து சீனி போன்ற பதார்தத்துடன் பிராண வாயுவை வெளி விடப்படும். இதே தாக்கத்தை பெரிய அளவில் செயற்கை முறையில் ஒளித்தொகுப்பு செய்வதன் மூலம் நம் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று கண்டு பிடித்து இருக்கின்றார்கள்.

மிக நுண்ணிய பதார்த்தங்களை, சில பாக்டீரியாக்களுடன் சேர்ப்பதனால், ஒரு செயற்கையான ஒலித்தொகுப்பினை நடை பெறச் செய்து, வளி மண்டலத்து கரியமிவாயு, நீர், சூரிய ஒளி என்பனவற்றில் இருந்து மனிதனுக்குத் தேவையான விளைவுப்  பொருட்களுடன் பிராணவாயுவும் வெளியேற்றப்படுகிறது.

இந்த வழியில், காற்று மண்டலத்து கரி வாயுவும், நீராவியும் குறைக்கப்பட்டால் புவி வெப்பமாகுதல் குறைக்கப்பட்டு, திரும்பவும் பழைய வெப்பநிலைக்கு பூமியின் சுற்றுப் புறம் வந்து, பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

இத்தொழில் நுட்பம், செலவீனம் சற்று அதிகமானதாக இருப்பதால்  இன்னும் சில வருடங்களில் செல்வந்த நாடுகளினால் மட்டுமே பாவிக்கக் கூடியதானாக இருக்கின்றது.

என்றாலும், வெகுவிரைவில் மிகவும் மலிவான செலவில் அதிக அளவில் செயற்கை ஒளித்  தொகுப்பு  செய்யக் கூடிய நுண் தொழில் நுட்பம் கை வசம் இருக்கின்றது; இவற்றை எல்லாம் அமுல் படுத்தும் காலம் நெடும் தூரத்தில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.
அந்நேரம், மாசற்ற வளி மண்டலம் மீண்டும் வரும்!

🌍🌎🌏🌐-செல்வதுரை, சந்திரகாசன்.

1 comments:

  1. சந்திரகாசன்Sunday, April 21, 2019

    திருத்தம்: கரியமில வாயு என்று வாசிக்கவும்.

    ReplyDelete