தமிழ் வழி மலையாளம்மலையாள மொழி ஓரளவுக்கு நன்றாகப் புரிகிற, ஆனால் மலையாள எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிதானதல்ல என்பது அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழைவிட மிக அதிகமான மெய்யெழுத்துக்கள், அந்த மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று சேரும்போது தோன்றும் சீரற்ற வடிவம் கொண்ட நூற்றுக்கணக்கானக் கூட்டெழுத்துக்கள் என்று எல்லாம் சேர்ந்து தலை சுற்ற வைத்துவிடும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே மலையாள எழுத்துக்களை வசப்படுத்த முடியும்.
ஒரு மொழி மற்றொரு மொழியின் கலப்பின் காரணமாக உருமாறும் போது பெரும்பாலும் அதன் அடிப்படைச் சொற்கள் அப்படியே தான் இருக்கும். மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் கலந்திருந்தாலும் மிகப் பெரும்பாலான அடிப்படைச் சொற்கள் தமிழ் சொற்களே. சில எடுத்துக்காட்டுகளை கீழே தந்திருக்கிறேன்.
உறுப்புகள்: தல, கண்ணு, மூக்கு, நாக்கு, வாய், பல்லு, கழுத்து, நெஞ்சு, கை, காலு.
வினைகள்: வா, போ, நட, ஓடு, குடி, குளி, அடி, கடி, கொடு.
இடப்பெயர்கள்/சுட்டுப்பெயர்கள்: ஞான், நீ, அவன், அவள், அவர், அது, இது, எது.
பருவங்கள்: மழ, வெயில், காற்று, மின்னல், இடி.
திசைகள்: வடக்கு, தெக்கு, கிழக்கு, இடத்து, வலத்து.
எண்கள்: கால், அர, முக்கால், ஒந்நு, ரண்டு, மூந்நு, நாலு, அஞ்சு, ஆறு...
நிறங்கள்: கறுப்பு, வெளுப்பு, நீலம், சுவப்பு, பச்ச, மஞ்ஞ.
உலோகங்கள்: இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, வெங்கலம்.
கிழமைகள்: ஞாயர், திங்கள், சொவ்வ, புதன், வ்யாழம், வெள்ளி, சனி
விலங்குகள்/பறவைகள்: ஆன, பசு, எரும, ஆடு, பன்னி, மயில், குயில், காக்க, கோழி.
இன்றைய தமிழ் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால் எழுத்துத்தமிழில் இடம்பெறும் ஏராளமான சொற்கள் மலையாளப் பேச்சு வழக்கில் வழங்கி வருகின்றன. கீழே தமிழ் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சில சொற்களையும் அவற்றுக்கான மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டுகளாகத் தருகிறேன்.
காது - செவி, உள்ளே - அகத்து, வெளியே - புறத்து, பக்கத்தில் - அரிகில், கூப்பிடு - விளி, வெட்கம் - நாணம், வேலை - பணி, சண்டை - பிணக்கு, பார் - நோக்கு, எப்படி - எங்ஙனெ (எங்ஙனம்)

வேறு சில அடிப்படைச் சொற்கள் தமிழல்லாதது போல் தோன்றினாலும், அவையும் தமிழ் சொற்களிலிருந்து தோன்றியவை என்பதை பழந்தமிழ் சொற்களோடு அறிமுகம் உள்ள ஒருவரால் கண்டறியமுடியும். மலையாளத்தில் நேற்று என்பதைக் குறிக்கும் இன்னலெ என்ற சொல் அதே பொருளுடைய பழந்தமிழ் சொல்லான நென்னல் என்பதன் திரிபு என்பதை ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். இன்னொரு எடுத்துக்காட்டு தருவதென்றால் மற்ற மூன்று திசைகளையும் குறிக்க மலையாளத்தில் கிழக்கு, வடக்கு, தெக்கு என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் போது மேற்கு என்பதை மட்டும் "படிஞ்ஞாறு" என்று சொல்கிறார்கள். முதல் பார்வையில் அன்னியமாகத் தெரியும் இந்த சொல் "சூரியன் மறையும் திசை" என்பதைக் குறிக்கும் "படுவான்" என்ற தமிழ் சொல்லுடன் (அகராதியில் இருக்கிறது) தொடர்புடையது. படுஞாயிறு என்பதே படிஞ்ஞாறு என்று ஆகியிருக்கவேண்டும். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஏரியின் கிழக்குப்பகுதியை "எழுவான்கரை" என்றும் மேற்குப்பகுதியை "படுவான்கரை" என்றும் அழைக்கிறார்கள். தெலுங்கில் மேற்கு என்பதைக் குறிக்கும் "படமதி" என்ற சொல் இதனுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன்.

தமிழ் சொற்கள் மலையாளத்தில் எப்படித் திரியும் என்பதற்கான விதிகளைப் புரிந்து வைத்திருப்பதும் மலையாளத்தை வாசிக்க உதவும். பெரும்பாலும் தமிழின் வல்லின ஒலிகள் மலையாளத்தில் மென்மையாக ஒலிக்கும். வே. வேங்கடராஜுலு அவர்கள் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலிலிருந்து சில விதிகளை கீழே தருகிறேன்.
'ன்ற' ஓலி 'ன்ன' என்று மாறும்: ஒன்று-ஒன்னு, தென்றல்-தென்னல்
'ந்த' ஒலி 'ந்ந' என்று மாறும்: வந்து-வந்நு, சந்தனம்-சந்நனம்
'ங்க' ஒலி 'ங்ங' என்று மாறும்: மாங்காய்-மாங்ங, நீங்கள்-நிங்ஙள்
'ஞ்ச' ஒலி 'ஞ்ஞ' என்று மாறும்: மஞ்சு-மஞ்ஞு, கஞ்சி-கஞ்ஞி
'ந்த' ஒலி 'ஞ்ஞு' என்று மாறும்: அறிந்து-அறிஞ்ஞு, தேய்ந்து-தேய்ஞ்ஞு
'த்த' ஒலி 'ச்ச' என்று மாறும்: அடித்து-அடிச்சு, பித்தளை-பிச்சள
ஐகாரம் அகரம் ஆகும்: மலை-மல, தலை-தல, வாழை-வாழ

எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மணிப்பிரவாள நடையை விட சற்று அதிகமான அளவுக்கு மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. மணிப்பிரவாள நடையை முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாதத் தமிழர்கள் கூட இன்று தமிழில் வழக்கிலிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை மலையாளத்தில் அடையாளம் கண்டு புரிந்துக்கொள்ளமுடியும். (.கா: ஸந்தோஷம், ஆனந்தம், ஸ்நேகம், ப்ரேமம், இஷ்டம், விரோதம், தேஹம், திவஸம்..) தமிழில் தமிழ் இலக்கண விதிகளின் படி எழுதப்படும் பல வடமொழிச் சொற்கள் மலையாளத்தில் (மணிப்பிரவாளத்தைப் போல) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எழுதப்படும் என்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். (.கா: சுதந்திரம் - ஸ்வதந்திரம், உதாரணம்-உதாஹரணம், அட்சரம்-அக்ஷரம், சிங்கம் - ஸிம்ஹம், சுபாவம் - ஸ்வபாவம்..) அறிமுகமில்லாதவை போல் தோன்றும் பெரும்பாலான வடமொழிச் சொற்களையும் கொஞ்சம் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி முயன்றால் புரிந்துக்கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக 'தக்ஷிணேந்திய' என்று ஒரு சொல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் சொற்களின் புணர்ச்சி விதிகளை வைத்து அதை "தக்ஷிணம் + இந்திய" என்று பிரிக்கலாம். தக்ஷிணம் என்னும் சொல் தமிழில் இல்லையென்றாலும் தென்னாடுடைய சிவனை தக்ஷிணாமூர்த்தி என்று சொல்வது நினைவுக்கு வந்தால் 'தக்ஷிணேந்திய' என்பதன் பொருள் 'தென்னிந்திய' என்பது விளங்கும்.
-ஜெகத்

0 comments:

Post a Comment