உலகினை அழிவிலிருந்து பாதுகாத்த கடவுளுக்கு நன்றி



கடவுள் ஒருநாள், தான் படைத்த உலகையும், உயிர் இனங்களையும் நேரில் பார்ப்பதற்காக தனியாய் வந்தார். வந்தவர் பார்த்ததும் அப்படியே மலைத்துப் போய் நின்றார். (கடவுளுக்கு இது எல்லாம் ஏற்கனவே தெரியும்; என்றாலும் கதைக்கு ருசி ஏற்றவே இப்படி!)

இங்கு மனித இனம், மன விருத்தி செய்வதற்குப் பதிலாக இன விருத்தியில்தான் கூடிய கவனம் செலுத்தி இருப்பதை அவதானித்தார்.(மீண்டும், ருசிக்கே!).  இந்தப் பூமியை, ஒரு குறிப்பிடட அளவு சுமையைத் தாங்கக் கூடிய அளவிலேயே அவர் சிருஷ்ட்டித்தார். கலி யுக முடிவில் உலகை முற்றிலும் அழிப்பதற்கு இன்னும் 427 ,000 வருடங்கள் இருக்கின்றனவே, அதுவரை இப் பூமி பாரம் தாங்காது சிதறுண்டு, திசை மாறிப் போவதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்.

(குறிப்பு: பூமியின் நிறையோடு பார்த்தால், மனித இனத்தின் நிறை ஒரு தூசுக்குச் சமன். அது ஒரு பொருட்டே  இல்லை. மீண்டும், இது ஒரு கதை ருசிக்குத்தான்!).

இதற்கு ஒரே வழி, அத்தனை உயிர் இனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் என்று முடிவு செய்தார். இதை அமுல் செய்வதற்கு ஒரு முறையான ஒழுங்கு விதியினைக் கடைப் பிடிக்க  'பாவப் பட்டியல்' ஒன்றைத்  தயார் செய்தார்.

முதலில் மனித உயிர்கள் பக்கம் தன் கவனத்தை ஊன்றினார். கலி யுகத்தின் சின்னங்களான,  பல விரும்பத்தகாத செய்கைகளில் மனிதன் ஈடுபட்டுச் சீரழிவதை கண்டார்.

ஆன்மீக தளர்ச்சி, களவு, ஏமாற்று, சமூக சீரழிவு, பணப் பேராசை, பொறாமை, சூழ்ச்சி, சூது, காமம், குரோதம், கொலை, அரசியற்  கொள்ளை, லஞ்சம், வன்மம், பொய், புரட்டு, போதைப் பொருள்  என்று எண்ணற்ற குற்றச் செயல்களை செய்து, சாதாரணமாகவே நாளாந்த வாழ்க்கையில் பாவம் செய்து கொண்டு இருப்பவர்களை ஒவ்வொருவராக அகற்றுவது என்று முடிவு செய்தார்.

எல்லாவற்றையும் எழுதி ஒரு பாவப் பட்டியலாக கையில் எடுத்துக் கொண்டார்.

முதலில், தன் பெயரால் ஆலயங்களை அமைத்து, ஆன்மீகத்தை வளர்க்கின்றோம் என்ற போர்வையில், அமைதி தேடி வரும் அப்பாவி பக்தர்களை, தெய்வ பயம் காட்டி, கடவுளுக்கு கூடிய பணச் செலவில் பூசை செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று நம்ப வைத்துப் பணம் பறிக்கும் கூடத்திற்கு ஆப்பு வைத்தார்.

அதே இடங்களில், பக்தர்களின் பணத்தில் கடவுளுக்கென்று கொடுக்கப்பட்ட பொருட்களையும், சமைத்த, சமைக்காத உணவுப் பொருட்களையும்  தம் குடும்பத்தினருக்கு எடுத்துச் செல்லும் திருடர்களைக் கவனித்து ஒழித்தார்..

மேலும், கடவுளின் பேரால், கடவுள் சொல்லி  கொலைகள்  செய்கின்றோம் என்று பிதற்றிக்கொண்டு, அழிவு செய்வோர் எல்லோரையும் அகற்றிச் சுத்தம் ஆக்கினார்.

பார்த்தார், சுமார் அரவாசிச் சனத்தொகை இப்போது காலியாகி  இருந்தது.

இப்போது அரசியல் பக்கம் திரும்பி, மக்களுக்குப் பொய் வாக்குறுதி கொடுத்து அரசாங்கம் சென்று, அங்கு நாட்டுக்குச் சேரவேண்டிய பணம் எல்லாவற்றையும் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்ற அத்தனை பேரையும் தீர்த்துக் காட்டினார்.

பின்னர், குழந்தைகள், சிறுமிகள் உட்படப் பெண்களை சீரழிக்கும் காமுகர்களைக் காவு கொண்டார்.

மேலும், கிடைக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யாது லஞ்சம் கேட்போர், பணம் வாங்கி ஏமாற்றுவோர், புரளி, குத்து மாற்று செய்வோர் எல்லோரையும் தேடித் பிடித்து அழித்தார்.

அத்தோடு, கொலை செய்வோர், கொள்ளை அடிப்போர், பழி வாங்குவோர், சூழ்ச்சி, சூது செய்வோர் பட்டியலையும் முறைப்படி கவனித்தார்.

கடைசியில், போதைப் பொருள் தயாரிப்போர், விநியோகம் செய்வோர், நுகர்வோர் எல்லாரையும் ஒரு கை பார்த்தார்.

இவை முடிய, மனித குலத்திற்கு ஒவ்வாத, சுற்றுச் சூழலை மாசு படுத்தும் அதிகமான தொழில்  சாலைகள், நிறுவனங்கள், தீங்கு விளைவிக்கும் கதிர் வீச்சு மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்ப சாதனைகள் எல்லாவற்றையும் இடித்துத் தள்ளினார்.

இத்துடன் அவரது மனித குல சுத்திகரிப்புப் பணிகள் முடிவடைத்தன.

இப்போது அவர், இதர உயிர் இனங்களான நிலம் வாழ் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், பாம்புகள், மற்றும் நீர்வாழ் மீன் வகைகள் என எல்லா நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்று பார்த்து, தயார் நிலையில் இருந்த பாவப் பட்டியலை தன் முன்னால் பிடித்துப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்; எந்த ஒரு மற்ற உயிரினங்களும் மனிதனைப் போல பாவம் செய்தவையாக அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. உலகெங்கும் தேடினார்; அங்கும், இங்குமாக ஒரு சில உயிர்களையே அவரால் கண்டு பிடித்து அழிக்க முடிந்தது. மேலும் பாவ உயிர்களைத் தேடித், தேடி களைத்தே போய்விட்டார். பாவம் செய்யாத எல்லா உயிர்களையும் அப்படியே விட்டு விட்டார்.

அவரின் ஜீவ சங்காரம் முடிவுக்கு வந்தது. மெல்லவும் ஒரு பார்வையை பூமி மேலே விட்டார். அவரது செய்கை மிகவும் திருப்திகரமாக இருந்ததைக் கவனித்தார்.

"இனி, பூமியில்  பழையபடி, முதலில் இருந்து நல்ல படியே உயிர்கள் வாழத் தொடங்கிவிடும்" என்று ஆசீர்வதித்ததுச் சென்றபோது விடயம் விளங்க வில்லை; பின்னர்தான் புரிந்தது; ஓர் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுவிட்டுச் சென்றுள்ளார் என்று.

சங்கார முடிவில், மனித இனம் (சுமார்) முற்றாகவே அழிக்கப்பட்டு   விட்டது. ஒவ்வொரு நாட்டிலும், ஒரு சில 'நல்லவர்கள்' மட்டுமே மிஞ்சி இருந்தார்கள். அவர்களும், இங்கும் அங்குமாக மிகத் தூரத்தில் இருந்ததால், அவர்களிடையே எந்தவித தொடர்புகளும் அற்றுப் போய் விட்டது. பழையபடி அவர்கள் ஒரு தனிமையான வாழ்க்கையையே கொண்டிருந்தார்கள். வெறுமனே காடுகளில் உணவு தேடி விலங்குகள் போல் அலைந்தார்கள்.

ஆனால், விலங்கு உலகமோவெனில் மனிதனை விடத்  தொகையில் மிஞ்சி விட்டது. ஆற்றலும் பெருகி விட்டது. இப்போது, விலங்குகள் எல்லாம் மனிதன் தன்னிடம் இருந்து பறித்தெடுத்த நிலப் பகுதிகளைத் திரும்பவும் எடுத்துக் கொண்டன. அவ்விடங்கள் நாளாந்தம் அவைகளின் அழகிய  காடுகளாக மாறின.

மனிதனுக்கு அடுத்தபடியான மதி நுட்பம் கொண்ட குரங்குகள், இப்போது நகர்ப் புற வீடுகளில் வந்து வசிக்கத் தொடங்கின. மனிதன் விட்டுச் சென்ற பொருட்களையும், சாதனங்களையும், தொட்டுப் பார்த்து, உணர்ந்து எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உபயோகிக்கத் தொடங்கியன.

குரங்குகள் இப்போது மற்றைய உயிர் இனங்களின் மேல் அதிகாரம் செலுத்தி ஆட்சி செய்யும் தகுதியை அடைந்துள்ளன.

காட்டுக்குள் அலைந்து திரியும் மனிதனைக் கண்டால், அவனைப் பிடித்து அடக்கி, குரங்கு மொழிதனைக் கற்பித்து, தங்கள் உதவியாளர்களாகவும், வீட்டு வேலைகள் செய்பவர்கள் ஆகவும் பயிற்சி கொடுக்கின்றன.

இப்படியே, திரும்பவும் குரங்கில் இருந்து இன்னொரு தடவை வேறொரு விதமான மனித குலம் பரிணாம வளர்ச்சி அடைய இன்னும் எவ்வளவு காலம் செல்லுமோ?

அடுத்த முறை உலக அழிவு வரை,  இந்தப் பூமி, சகல உயிர்களின் பாரத்தினையும் தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது பூமியையே பெரும் அழிவிலிருந்து மீட்டுச் சென்ற அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக!


↠↠↠↠↠↠↠↠↠🌎செல்வதுரை,சந்திரகாசன்✍↞↞↞↞↞↞↞↞↞↞↞ 

3 comments:

  1. சேரன்Monday, June 24, 2019

    இந்தியாவில் மூலைக்கு மூலை அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கும் பல கடுவுள்மார்களில் ஒருவரேனும் இந்த வேலையைச் செய்ய முன் வரவில்லையே இதுவரை!

    ReplyDelete
  2. வேதன் , துரைWednesday, June 26, 2019

    கடவுளுக்கு பாதுகாப்பு தேடி இங்கு மனிதர்கள் அல்லவா முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  3. கடவுள் மனிதனைத் தேடி ஒரு மனிதனாக வந்தார். மனிதர்கள் அவரை கண்டுகொள்ளவிலை. மதம் என்ற போர்வையால் தங்களை மறைத்துக்கொண்டார்கள். இந்தப் போர்வையிலிருந்து வெளியே வந்தவர்கள்தான் அவரைக் கண்டுகொண்டார்கள். மனிதர்கள் இவர்களைக் கடவுளாக்கினார்கள். அவரையோ வெகுதுரத்தில் வைத்துவிட்டார்கள்.

    ReplyDelete