களவையும் கற்பதா? என்ன கூறுகிறீர்கள்????


"களவும் கற்று மற"
தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

"திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு." - இதுவே இதற்குக் கூறப்படும்  பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலா வருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. "ஏன் தவறு செய்கிறாய்?" என்று கேட்டால், "களவும் கற்று மற" என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்து விடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்க வேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் "இளையோரை வழிநடத்துதல்" ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவைதான்  பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். "தவறுகளைச் செய்யாதே" என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே தவிர "தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு" என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். இனி இப்பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் "திருட்டு, சூது" ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் எடுத்துக் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு "சூதாட்டம்" என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே "மகாபாரதம்" உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே. இதைப் பற்றி "சூது" என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.  - குறள் எண்: 935.

இங்கே "கவறு" என்பது சூதாடும் கருவியையும், "கழகம்" என்பது சூதாடும் இடத்தையும் குறிக்கும். "சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல் சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்." என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த "கவறு" என்னும் சொல்லை "கற்று" என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள் கொள்ள வழிவகுத்து விட்டது.
களவுத்தொழிலைக் கையால் தான் செய்ய வேண்டும். அதேபோல் சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். "இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு" என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். அப்படியானால் சரியான பழமொழி

" களவும் கவறு மற."
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

0 comments:

Post a Comment