நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? / பகுதி: 2A

[சீரழியும் தமிழ் சமுதாயம்]
இன்று சமுதாயத்தை பற்றி பேசும் எவரும், வீழ்ச்சி, சரிவு, சீரழிவு என்ற சொற்களை பெரும்பாலும் பாவிப்பதை காண்கிறோம். வீழ்ச்சியடைதல் என்றால் தாம் இன்று உள்ள நிலையில் இருந்து சரிதல் அல்லது கீழ்நோக்கி போவதாகும். சீரழித்தல் என்றால் இன்று இருக்கும் ஒழுங்கில் இருந்து குலைதல் அல்லது நிலைகெடுதல் ஆகும். உதாரணமாக. நிலைகெடுதல் என்ற அதே கருத்தில், திருவள்ளுவர் தனது குறள் 934 இல் "சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்" என்று சொல்லுவதை காண்க. அதாவது  பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையில் ஆழ்த்தி ஒருவரை கெடுக்கும் தீமையான சீரழிக்கும் செயல் சூதாட்டம் என்று சொல்லுகிறார்.

எனவே சமுதாய சீரழிவு என்றால் எதை குறிக்கிறது என்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது. அதாவது நாம் பரம்பரை பரம்பரையாக கட்டி வளர்த்த அந்த சமுதாயம் என்ற உன்னத அமைப்பு ஆட்டம் காண்பதை சுட்டிக் காட்டுகிறது எனலாம். உதாரணமாக விண்ணைத் தொடும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள், விவாகரத்துக்கள், பதின்ம பருவ பாலியல்கள், அதனால் ஏற்படும் பிறப்புக்கள், ஒற்றை பெற்றோர் [single parent], போதைப்பொருள் துஷ்பிரயோகங்கள், போர், தனிப்பட்ட நன்னடத்தையில் ஏற்படும் சரிவு மற்றும் அதி தீவீர மத பக்தி [skyrocketing rates of crime, divorce, teenage sex, teenage births, single parent and drug abuse; war; and a general decline in personal morality and religiosity.] போன்றவையை கூறலாம். அத்துடன் இனவாதம் மற்றும் இன சமத்துவமின்மை [Racism and racial inequality], இனப் படுகொலைகள் மற்றும் ஏனைய சகல வன்முறைகளும் [genocides and other mayhem], நாம் அடைந்த எல்லா முன்னேற்றத்தையும் கவிழ்த்து விடும். எனவே சமூக சரிவு ஒரு சிக்கலான மனித சமூகத்தின் வீழ்ச்சி என நாம் கருதலாம்.

சுமேரியா [மெசொப்பொத்தேமியா], இந்திய, எகிப்திய, ரோம, மாயா போன்ற அதியுயர் கலாச்சார வடிவங்களும், அங்கு காணப்பட்ட வழி முறைகளும், சரிந்து சின்னா பின்னமாகத் தடைகள் அற்றுப் போனது போல், தற்போதைய நவீன உலக நாகரீகமும், சகல வழிமுறைகளும் சீரழிவதற்கான சூழல் காணப்படுவதாக இன்று பலர் உணர்கிறார்கள். இதனால் இன்று மக்கள் சில நேரம் 'உடைந்த சமுதாயத்தை' ['broken society'] பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக மாற்றம் மற்றும் கலாச்சார மாற்றத்தின் [social change and cultural change] ஒரு விளைவாக இதை நாம் காணலாம். எங்களுக்கு சமூக மாற்றம் இன்று பல நடைமுறைகளில், செயல்களில் இருந்து நன்றாக தெரிகிறது, சமுதாயம் என்பது ஒரு வார்த்தை மட்டும் தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் ஏற்படுத்திய இணைப்பின் மூலமே அந்த கட்டமைப்பு உருவாகிறது. எனவே தனி மனித மாற்றம் இல்லாமல் சமுதாயம் / சமூகம் மாற முடியாது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கியமான தொழில் நுட்ப முன்னேற்றமும் இறுதியாக சமூக உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடுகிறது. தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே, சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வந்ததுடன் இதுவே பொதுவாக அடிப்படை சமூக அலகாக [fundamental social unit] எல்லா சமூதாதயங்களிலும் இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக எந்தவித மாற்றிடும் செய்யாமல் அது இன்று சிதைக்கப் படுகிறது. நாம் இன்று நமது நாகரிகத்திற்கு அடிப்படையாகக் கொண்ட மதிப்புகள் / விழுமியங்கள் பலவற்றை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. நாம் எதை நம்புகிறோம் என்றே எமக்கு இப்ப தெரியாது, நாம் குழம்பி இருக்கிறோம், அந்த குழப்பத்துடனேயே எம் பிள்ளைகளையும் இன்று வளர்க்கிறோம். சமூக நடத்தை விதிகளிலிருந்து விலகல், வன்முறை மற்றும் சமூக விரோத நடத்தை முதலியவற்றை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் ஒளிபரப்பி மகிழ்வாக கொண்டாடும் ஒரு விசித்திரமான கலாச்சாரத்தை இன்று நாம் உருவாக்கியுள்ளோம். நாகரிகம் நிச்சயமாக அழிந்து போகும் என்ற இன்றைய யோசனை ஒன்றும் புதியதல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்தே, முடிவும் நெருங்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு நாகரிகமும் எதோ ஒரு கட்டத்தில் வீழ்ச்சி அடையும். அதாவது நாகரிகம் மற்றும் சமூகங்கள் வந்து போகும், அவை என்றும் நிரந்தரம் அல்ல. எனவே எமது இன்றைய கேள்வி எப்பொழுது, ஏன் என்பதே ஆகும். நான் முன்பு ஒருமுறை எழுதிய, கீழே தரப்பட்ட  எனது பாடல் ஒன்று இப்ப என் நினைவுக் வருகிறது.

"பொத்தானை அழுத்தி,மறு கரையில் காதலிப்போம்
ஜன்னளை திறந்து,புதியவானம் காண்போம் கண்ணே?
உலகம் சுருங்குதோ,எண்ணம் அப்படி தோன்றுதோ
தொழில் நுட்பம்,அப்படி மாற்றுதோ கண்ணே?"

"நாளாந்த வாழ்வில்,பல பல மாற்றங்கள்
ஒன்றாய் அனுபவிப்போம்,ஆனால் எந்த இழப்பில் கண்ணே?
ஆண்டாண்டு மாசுபடுத்தி,சூழலை கெடுத்து விட்டோம்
நெருக்கடி வந்தபின்பே,மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?"

"மதிநுட்ப சிந்தனையாளனா,நாம் மரத்துப்போனவனா
இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே?
கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா அல்லது
தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே?"

"இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ
நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே?
அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு

விட்டுப் போவது பெரும் இன்பமா துன்பமா கண்ணே?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞

0 comments:

Post a Comment