நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01A

[சீரழியும் தமிழ் சமுதாயம்] 

இன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது? இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா?, அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன ? இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா? இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா? ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம்?, இப்படி பல பல கேள்விகள் எம்மில் இன்று எழுகின்றன.  இவைகளுக்கு எம்மால் இயன்ற பதில்களை தேடி அலச முன்பு, நாம் இரண்டு விடயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சமுதாயம் என்றால் என்ன?, வீழ்ச்சியடைகிறது அல்லது சீரழகிறது என்றால் என்ன?

ஒரு சமுதாயம் [Society / குமுகாயம்] என்பது தனிப்பட்ட ஒரு இனங்கள் ஒன்றாக வாழும் ஒழுங்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனலாம். உதாரணமாக உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உடல் அமைவது போல, ஒரு இனங்கள் பல சேர்ந்து உருவாகுவதே சமுதாயம் ஆகும். எனவே சமுதாய கட்டுக்கோப்பிற்குள் வாழ்க்கை நெறிகள் அல்லது ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இப்படி பல பல இருக்கும். அதேவேளை சமூகம் (Community] என்பது ஒரே இடத்தில் வாழும் ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது பொதுவான சிறப்பியல்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையோ குறிக்கும். என்றாலும் சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும் பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் அவை உண்மையில் வேறுபட்டவை. அதாவது  சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்றும் சமூகவியலாளர் கூறுவர். இன்னும் ஒரு முக்கிய பன்பையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், அதாவது உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே ஒரு மாறிவரும் சமுதாயத்தில் [evolving societies] வாழக்கூடியது. ஏனென்றால் சுற்றுச்சூழல் நிலைமைகளின் மாற்றங்களுக்கு மட்டும் அல்ல, மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கும் [evolving economic conditions] ஏற்றவாறும் தனது சமுதாயத்தின் கட்டமைப்பை சரிபடுத்தக் கூடியது.


ஆதி மனித சமுதாயம் ஒரு வேட்டுவ உணவு திரட்டியாக [hunter-gatherer] இருந்தனர். தங்களை சுற்றி இருக்கும் நிலத்தில் கிடைக்கும் உணவிலேயே இவர்கள் தங்கி இருந்தனர். எனவே இவர்கள் அதிகமாக உறவினர்களை கொண்ட சிறிய குழுக்கள் குழுக்களாக [kinship group] இருந்தனர். தொழிலாளர் பிரிவு [Division of labour] இங்குதான் முதலில் ஏற்பட்டதாக நாம் கருதலாம். வேடையாடுதல் ஆண்களாலும், உணவு தயாரித்தல், ஆடை மற்றும் குழந்தை வளர்ப்பு பெண்களாலும் நடைமுறை படுத்தப் பட்டன. விதைகளை நாட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு [seed planting and animal husbandry] அறிமுகம் செய்யப்பட்டதும், மனித சமுதாயத்தின் அமைப்பு மாறியது. அவர்கள் இப்ப, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு கிராம குடியிருப்புகளில் [village settlements] வாழத் தொடங்கினார்கள். இவைகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பான விவசாய சமுதாயம் [agricultural society], பல்வேறு வடிவங்களை இம்மாற்றங்களால் ஏற்படுத்திக் கொண்டது. இங்கும் தொழிலாளர் பிரிவு தொடர்ந்தது. உதாரணமாக ஆண்கள் நிலத்தை உழுது பயிர்கள் பயிரிட்டனர், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தனர். இவைகளை தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையிலான, தொடர்புகளின் தாக்கத்தால்  நகர்ப்புற சமுதாயம் [urban society] ஒன்று எழுச்சி பெற்றது. இதனால் மேலும் பல தொழிலாளர் பிரிவு எற்பட்டது. அதுமட்டும் அல்ல மக்கள், முன்பு இருந்ததை விட, அளவு அல்லது தொகை கூடிய சமூகங்களில் /குழுக்களில் வாழ்த் தொடங்கினர். அதாவது பெரிய நகரங்கள் உருவாகின, ஆனால், அதன் உள்கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரி ப்பதற்கு, அந்த பெரிய நகரங்களுக்கு சிறப்பு நிர்வாக திறன்கள் மேலும் தேவைப் பட்டது. இது வர்க்கங்கள் [classes] உள்ளடக்கிய சமூக அடுக்குகளை [பாகுபாடுகளை / படிநிலைகளை /stratification] ஏற்படுத்தியது எனலாம். அத்துடன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு ஒரு வர்த்தக வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியது. என்றாலும் பல பல காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளில் ஆண்களே பெரும் பாலும் ஈடுபட்டு, செல்வங்களை / பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனவே நகர்ப்புற சமுதாய வளர்ச்சி, பெண்கள் ஆண்களில் பொருளாதாரத்திற்கு சார்ந்து இருக்கும் ஒரு நிலைமையை [economic dependence] அதிகரித்தது. அடிப்படை சமூக உறவான [Basic social relationship] திருமணம், செல்வத்தையும் பலத்தையும்  அடைவதற்கான ஒரு கருவியாகவும் இங்கு பெருபாலும் மாறியது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛

0 comments:

Post a Comment