சித்தர்கள் சிந்திய முத்துகள்......3/66

 


****************************************************

சித்தர் சிவவாக்கியம் -536

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை

மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்

பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர்

காசினியில் எழுநரகைக் காத்திருப்பதுண்மையே.                  

பூசைகளைப்போட்டு நேம நிட்டைகளோடு மற்றவர் பார்த்து வியப்படைய பூரித்து நடிக்கும் பாதகர்கள் ஆசை கொண்டு அனுதினமும் அன்னியர் பொருள்களை அபகரித்து மோசம் செய்வதற்கே முற்றிலும் அலைகின்றனர். அவர்களுக்கு இவ்வுலகில் ஏமாற்றுவதால் பொருளோடு வாழ்ந்திருந்தாலும், அதனால் இக்காசியினில் ஏழு பிறப்பும் நரகம் காத்திருப்பது உண்மையாகும்.

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் -537

நேசமுற்று பூசை சித்து நீறு பூசிச் சந்தானம்

வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே

மோசம் பொய் புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்

வேசரி கலம்புரண்ட வெண்ணீராகும் மேனியே.

ஈசன் மீது மிகவும் அன்புற்று இருப்பது போல் நடித்துக் கொண்டு அன்றாடம் பூசைகள் செய்து உடல் நிறைய விபூதியை தரித்து வாசமுடைய சந்தனத்தை உடம்பு முழுதும் அணிந்து கொண்டு நெற்றியில் அஞ்சன மையினால் கறுப்புத் திலகமிட்டு மற்றவர் மதிக்க பெரிய பக்தராக வேடமிட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! அதனால் வரும் வினை என்ன தெரியுமா?  போர்க்களத்தில் வெட்டுப்பட்டு ரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் ரண வேதனைகள் உண்டாகி கொதிக்கும் வெந்நீரைப் போல் மேனி கொதித்து துன்பத்தில் உழல்வீர் எச்சரிக்கை.

       

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -538

வாதஞ்செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்

போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவேனச்

சாதனை செயதெத்திச் சொத்துத் தந்ததைக் கவர்ந்துமே

காத தூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.                       

நான் இரும்பைச் தங்கமாக்கும் வாதவித்தை செய்வேன் வெள்ளியும் பொன்னும் பத்தரை மாற்று தங்கமும் செய்ய சாகாத வேகாத போகாத குருமருந்து செய்ய வேண்டும். அந்த குரு செய்து முடிக்க ஒரு மண்டல காலம் ஆகும். அதற்கு வேண்டிய பொன்னும் பணமும் தாருங்கள். உங்களை இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாக மாற்றுவேன் என ஆசை காட்டி எத்தாகப் பேசி ஏமாற்றி வாக்கிய சொத்துக்களை கவர்ந்து கொண்டு வெகுதூரம் ஓடிவிடுவார்கள். அவர்களைத் திரும்பவும் காண்பதென்பது அருமையே. ஆதலால் இம்மாதிரியான போலி சித்தர்களை நம்பி ஆசையில் அகப்பட்டு ஏமாறாதீர்.     

 

***************************************************

-அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment