சித்தர் சிந்திய முத்துக்கள்.......3/68

***************************************************

சித்தர் சிவவாக்கியம்--541

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று

ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்

சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென

நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.                   

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள்.

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் -542

காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்

தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்

தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே

பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள்.

       

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -543

முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்

சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர்

நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே

பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே.               

ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.    

 

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

 

0 comments:

Post a Comment