'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 10

 


உலகம் தோன்றின நாள் முதல் இன்று வரை உயிர்கள் அனைத்தும் நம் கண் முன்னால் பல் வேறு இனங்களாக இன்றும் இருப்பதற்கு காரணம் அவை அனைத்தும் ஆண் பெண்ணாக பரணமித்ததே. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிர் இனங்கள் பெரும்பாலும் உடலால் மட்டும் இணைகின்றன. ஆனால் ஆறறிவு மனிதன் மட்டுமே உடலாலும் மனதாலும் இணைகின்றன. எனவே தான் மற்ற உயிர்கள் இணைவதற்கு இனப்பெருக்கம் என்றும் மனிதன் இணைவதற்கு திருமணம் என்றும் கூறுகிறோம். இந்த மனதால் இணைதல் என்ற பண்பு மற்றவற்றில் இருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. இனப்பெருக்கம் என்ற ஒரு குறிக்கோளை தாண்டி, பல்வேறு ஒழுக்கங்களை அவன் ஏற்படுத்துகிறான். எனவே அந்த ஒழுக்கங்களுடன் அமைவதே முறையான திருமண உறவு என்று கூறலாம்.

 

 

திருமணம் என்ற சொல்லில் உள்ள மணம் - கூடுதல், கலத்தல் என்று பொருள் படும். அடிப்படையில் இவை இணைத்தல் என்ற விளக்கத்தை பெற்று, இது மங்கள நிகழ்வு என்பதால், ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து இருவரும் உடலாலும் மனதாலும் இணைவதை திருமணம் என்றனர் முன்னோர். இதை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களாலும் அழைத்ததை இலக்கியங்களில் காணலாம். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும், பொருள் கொடுத்தும், திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும், என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.


உதாரணமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில், பொது மக்களுக்கிடையில் திருமணம் செல்வத்தாலும் பலத்தாலும் இணையாமல், காதலால் இணைந்ததற்கு பல உதாரணங்கள் உண்டு. மேலும் செல்வந்தர்கள் தன் மகளுக்கு ஏறுதழுவல் அல்லது காளைச் சண்டை  மூலம் மணமகன் தெரிந்து எடுத்ததும் அறிகிறோம். இங்கு செல்வத்தை விட உடல் வலிமையே ஏற்றுக் கொள்ளப் பட்டதை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தை திருமணங்களையும் அங்கு காண்கிறோம். உதாரணமாக, கிமு 350 - கிமு 290 ஆண்டை சேர்ந்த மெகஸ்தெனஸ் [Megasthenes] என்ற ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் தனது இண்டிகா [‘Indica’] என்னும் நூலில், தான் இந்தியாவில் பயணம் செய்த இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அதில், தமிழ் பாண்டிய நாட்டில் அன்று நடைபெற்ற ஒரு திருமணத்தை [கொண்டாட்டத்தை] குறிப்பிடுகிறார். ஆறு அல்லது ஏழு வயது சிறுமிக்கு பெற்றோர்களால் நடத்தப் பட்டது இந்த திருமணம் ஆகும்.

 

 

பண்டைய சுமேரியாவில் அல்லது மெசொப்பொத்தேமியாவில் ஒவ் வொரு நகரமும் குறைந்தது ஒரு கடவுளை வழி பாட்டிற்கு வைத்திருந்தார்கள். உதாரணமாக, நன்னா [Nanna] கடவுளை ஊர் நகரம் வைத்திருந்தது. அங்கே, தெய்வத்தின் கோபத்தை தவிற்பதற்கு என்று, ஒழுங்காக தாரளமாக காணிக்கை செலுத்தினார்கள். சிலவேளை, தேவைக்கு அதிகமாகவே கொடுத்தார்கள். உதாரணமாக  ஷ்தார் [Ishtar, சுமேரியன் கடவுள், "ஈனன்னா"வின் மறுபடிவம் ஆகும்] ஆலயம், அங்கு வணங்கும் பெண் பக்தர்களிடம் அவர்களின் கன்னிமையையே [virginity] வற்புறுத்தியது. கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [Herodotus, கி மு 490-425] தனது குறிப்பில், ஒரு பெண் கல்யாணம் செய்யும் முன், ஆலயத்தில் தேவதாசியாக கடமையாற்ற நிர்பந்திக்கப் பட்டார்கள் என குறிப்பிடுகிறார். இது அவர்கள் ஒரு சற்புருஷனின் [a pious customer] கவனத்தை தங்கள் மேல் இழுக்கும் வரை தொடரும் என்கிறார். அந்த சற்புருஷன் தனது சம்மதத்தை, தான் விரும்பும் அந்த பெண்ணுக்கு நாணயங்களையோ அல்லது ஆபரணங்களையோ சுண்டி ஏறிவதால் [by tossing a coin or piece of jewellery / கொடுப்பதால்] வெளிபடுத்துகிறார் என்கிறார். இதனால் அழகிய பெண்கள் சில நாட்களிலேயே தமது தேவதாசி கடமையை முடித்து வெளியேறி, திருமணம் செய்து விடுவார்கள் என்றும் எளிய ஆடம்பரமில்லாத பெண் வருடக்கணக்காக காத்திருக்க வேண்டி வரும் என்றும் ஆகவே, இது ஒரு நியாயமற்ற முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். கன்னிப் பெண் ஒருவரை ஆண்டவனுக்கு பணி செய்ய கோயிலுக்கு கொடுக்கும் வழக்கம், பண்டைய தென் இந்தியாவிலும் அன்று இருந்தது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துபாட்டு, போன்ற சங்க இலக்கியங்களில் தேவதாசி பாரம்பரியம் இருந்ததிற்கான மேற்கோள்கள் காணப்படுகின்றன. அங்கு பலவிதமான தேவதாசிகளை குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக "கொண்டிமகளிர்", "விறலியர்", "கூத்தியர்", "பரத்தையர்" ஆகும். நமது பண்டைத் தமிழ் கலாசாரத்தில், பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை, தேவரடியாள்’ [தேவிடிச்சி] என்பர்.

 

கடந்த 3000 ஆண்டுகளை விட கடைசி 30 ஆண்டுகளில் நாம் கூடுதலான மாற்றங்களை காண்கிறோம். பொதுவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் திருமணம் முடிவுகள், அன்பு மற்றும் தனிப் பட்ட திருப்திகளை தாண்டி [love and personal satisfaction], பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையில் பெரும்பாலும் இருந்தன [economic and political considerations]. ஆகவே திருமணம் அன்று இளைஞர்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் ஒரு கட்டாய நிறுவனமாக [coercive institution] காணப் பட்டது. ஆனால இன்று அது முற்றிலும் வேறுபட்டு, எப்போது, ​​யாரை திருமணம் செய்வது, எப்படி திருமணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனிப் பட்ட உறவுகள் [personal relationships in and out of marriage] வைத்திருத்தல் போன்றவைகளை முன்னோடியில்லாத [unprecedented] சுதந்திரத்துடன் தாங்களே, ஆண் பெண் வேறுபாடின்றி, தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது. அது மட்டும் அல்ல, இன்று திருமணங்கள் பெண் [மனைவி] மற்றும் பிள்ளைகள் ஆணுக்கு [கணவருக்கு, தந்தைக்கு] சட்ட அடிபணிதலை [legal subordination] அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மேலும் இன்று பல பெண்கள் பொருளாதாரத்தில் தமது கணவருடன், ஆண்களுடன் சரிசமனாக உள்ளார்கள் [economic equality with their partners]. 


என்றாலும் ஜனநாயக புரட்சிகள் போல், திருமண மற்றும் குடும்ப உருமாற்றம் அல்லது தன்மை மாற்றம், குழப்பமாகவே உள்ளது. பல தேர்வுரிமை [choices] இருக்குமானால், வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் கட்டாயம் இருக்கும், ஆனால அதுவே தோல்விக்கான புதிய வாய்ப்புகளாகவும் இருக்கும் என்பதையும்  மறக்கக் கூடாது. அது மட்டும் அல்ல, ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் சக்திக்கு அல்லது எல்லைக்கு அப்பால் அவரை தூண்டி விடக் கூடிய புது ஆற்றலாகவும் [new temptations] அது மாறலாம். எது திருமணத்தை மிகவும் நிறைவானதாக ஆக்கியதோ அதுவே அதை மேலும் உடையக் கூடியதாகவும் ஆக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஏனென்றால் திருமணத்தில் இருந்து, தம்பதியர்கள் மிகவும் அதிக அன்பு, நெருக்கம் மற்றும் பரஸ்பரம் [so much more love, intimacy, and mutuality] போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள்.  அவர்கள் அந்த, தங்கள் இலட்சியங்களுக்கு ஏற்ப கடினமாக முயற்சிக்கிறார்கள். என்றாலும்  

அவர்களின் அதிக எதிர்பார்ப்புகளை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் விரைவாக விவாகரத்து செய்து விடுகிறார்கள். அது தான் மிகப் பெரிய குறை.

 

 உங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக கூட இருக்கலாம், ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும்,  தங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை இளைஞர் யுவதிகளுக்கு இருக்கு என்று நம்பத் தொடங்கினார்கள். அத்துடன் அன்பு மற்றும் பரஸ்பர ஈர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் எனவும் எண்ணினார்கள். அது மட்டும் அல்ல ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான், மனைவிக்கு அவர்கள் சம்பாதித்த அல்லது  மரபுரிமையாக அடைந்த சொத்தின் மேல் [over money they inherited or earned] சரிசமனான சொத்துரிமை சட்ட ரீதியாக வந்தது. ஆக நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்புதான், ஒரு கணவர், தன் மனைவியை உடல் ரீதியாக திருத்தும் அல்லது பூட்டி வைக்கும் உரிமை இல்லை என்று சட்ட ரீதியாக வந்தது [husband had no right to physically “correct” or imprison his wife]. கணவர்மார்களுக்கு  விபச்சாரம் அல்லது கள்ள உடலுறவு சாதாரணம் என்று முன்பு ஏற்றுக்கொண்டது, பின் குறைவாக வந்துவிட்டது.  மனைவியை அடிப்பது [Wife-beating] கண்டனத்துக்கு உள்ளாகியதுடன், 1970 பின் கடுமையான குற்றமாக மாறியது.

 

பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விரிவாக்கத்தால், ஒரு முழுநேர இல்லத்தரசியின் தேவை குறைதல், ஒருவரின் தனிப்பட்ட வாழ்வின் மேல் உள்ள சமுதாயத்தின் கட்டாய சக்தியின் வலுவிழத்தல் [decline in society’s coercive power over personal life] போன்றவையால்,  கட்டாயம்  விவாகரத்து இல்லாமல் போகாது. அவை அதை தூண்டக் கூடியதாகவே இருக்கும். மேலும் இவைகள் திருமண வயதை அதிகரிக்கவும் செய்கின்றன. அத்துடன் விருப்பத்தினால் அல்லது தற்செயலாக [either by choice or by chance] பெண்கள் கூடிய காலத்தை திருமணமாகாத தாய்மார்களாகவும் இன்று  வாழ்வை கழிக்கிறார்கள். மேலும் இன்று ஒரேபாலருடன் அல்லது எதிர்பாலருடன் [same-sex or opposite-sex], திருமணத்திற்கு வெளியே ஒன்றாக ,    அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை கழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல, எல்லா உறவுகளும் திருமணத்தில் முடிவதும் இல்லை.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

முற்றிற்று.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள் - Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01: 

1 comments:

  1. மனுவேந்தன். செFriday, December 31, 2021

    காலம் காலமாக மாறிவரும் பண்பாட்டு மாற்றங்கள் அவற்றினை ஆழமான தேடலில் அழகான முறையில் தொகுத்து வழங்கிய எழுத்தாளரின் அணுகுமுறை விதம் பாராட்டுக் குரியது. இத்தொடர் கட்டுரை மூலம் நாம் பல தகல்வல்களை அறிய முடிந்தது. நன்று பாராட்டுகள்.

    ReplyDelete