கனடாவிலிருந்து ஒரு கடிதம்

           


                                                                               11.12.2021

அன்புள்ள தங்கைச்சிக்கு,

நான் நலம்.அதோபோல் நீயும் உன் கணவரும் பிள்ளைகளும் நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

  தங்கைச்சி, உனது அன்பான கடிதம் கிடைத்தது. பல புதினங்களும் அறிந்தேன். மகிழ்ச்சி 

 

தங்கைச்சி, அண்மையில் முகநூலில் நடந்த ஒரு தவறினை சுட்டிக்காட்டியிருந்தாய். ஒரு மனிதன் இறக்கமுதல் அவனின் மரண அறிவித்தலை போடுவதற்கு நான் முந்தி,நீ முந்தியென்று போட்டிபோட்டு, அவன் இறக்க முதல், இறந்ததாக அறிவித்தல் போடும் மனச் சாட்சியிலாத மனிதர்களை, எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்குவோருக்கு உதாரணமாகஉன் கடிதத்தில் கடுமையாகச் சாடியிருந்தாய். உண்மைதான். இவர்களுக்கெல்லாம் ஒரு உயிரிழப்பின் வலியினை உணரமுடியாத ஜென்மங்கள். அதனால் தான் தமது இரத்த உறவுகளாக   இல்லாதவர்களாக இருந்தாலும் கூடஇறந்தார்களா இல்லையா என அறியமுடியா நிலையிலும்முகநூலில் மரண அறிவித்தல் போடுவதன் மூலம் தம்மை இனங்காட்ட  முயற்சி செய்கிறார்கள்.  ஒருவரின் வீட்டு விடயத்தினை பொது வெளியில் விளம்பரப்படுத்துவதற்குஅடுத்தவர்களுக்கு  உரிமை இல்லை  என்பது அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

 

ஆனால் ஒன்று கூறுகிறேன்  தங்கைச்சி,  . முகநூலில் அறிவித்தல் ஒன்றினைப் பதிவதற்கு  கட்டணம்  அறவிடும் வழக்கமிருந்திருந்தால், இவர்களெல்லாம் முகநூல் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மையாகும்.

 

தங்கைச்சி, ஊரில் என்றுமில்லாத மழையும் வெள்ளமும் என்று எழுதியிருந்தாய். நான் அண்மையில் ஊருக்கு வந்த வேளையில் ஊரில் பெரும் மாற்றங்களை அவதானித்தேன். முன்னர் இருந்த ஓலை வேலிகள் எல்லாம் இன்று கொங்கிறீற் சுவர்களாகிவிட்டன. நாங்கள் ஓடி விளையாடிய மண் முற்றங்களெல்லாம் கொங்கிறீற் தரைகளாகிவிட்டன. பெய்யும் மழைத் தண்ணீர் ஓடிச் சென்று கடலடைய சுவர்கள் தடையாக இருக்கும்போது பெய்யும் சிறுமழைகூட பெரும் வெள்ளத்திற்கு காரணமாக அமையும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றே!

 

தங்கைச்சி, முன்னரெல்லாம் கோடை காலத்தில் ஊரில் நுளம்புகளை நாம் கண்டதில்லை. ஆனால் நான் ஊரில் நின்றிருந்த வேளையில் நுளம்புத்தொல்லை அதிகமாகவே இருந்தது.காரணம் என்ன என்று நினைக்கிறாய்?

காரணம் இதுதான். இப்பொழுதெல்லாம் உங்கள் கொங்கிறீற் முற்றங்கள் மூலம் வெயில் வெக்கை அடிக்கிறது என்பதற்காக அம்முற்றங்களுக்கு மோட்டார் தண்ணீர்   விசிறுக்கிறீர்கள். மேலும் முன்னர்போன்று துலா,கப்பி இல்லாது , மோட்டார் தண்ணி குளிப்பு /முழுக்கு மூலம் வரும் அதிகளவு தண்ணீரும் நீண்டநேரம்  நிலத்தின் மேற்பரப்பில்  தங்கி நிற்கிறது. எனவே இரு வழிகளாலும் அக்கம் பக்கங்களில் நீர் தங்கி நிற்கும் நிலைநுளம்பின் இனப்பெருக்கத்த்திற்கு காரணமாக இருந்துவிடுகிறது. இதனாலேயே ஊரில் கோடைகாலத்திலும் நுளம்புத்தொல்லை தொடர்கிறது.

 

தங்கைச்சி, வாழ்வில் மாற்றங்கள்  அவசியம்தான்.ஆனால் அம்மாற்றங்களினால்  ஏற்படக்கூடிய  பாதகங்களுக்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள்  இல்லாவிட்டால், மாற்றங்கள் மனிதனுக்கு இடையூறாகவே என்றும் அமையும் என்பதனை நிகழ்ந்த  பாதிப்புகள் மூலம்எம் கண்ணெதிரிலேயே இன்று காணக் கூடியதாக இருக்கிறது.

 

தங்கைச்சிமேலும் புதினங்களை அடுத்த கடிதத்தில் பகிர்ந்துகொள்கிறேன். உன்னுடைய சுகத்தினையும், தேவைகளையும் கொண்ட  உன்னுடைய பதில் கடிதத்தினை ஆவலுடன்  எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
என்றும் அன்புள்ள
அண்ணன்
செ.மனுவேந்தன்.

📧📧📧📧📧📧📧📧📧0 comments:

Post a Comment