பூமி என்னும் சொர்க்கம் 22:

-எதையும் தாங்கும் புழு!-

அற்பப் புழு’ என்று கூறுவது உண்டு. ஆனால் கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய புழு ஒன்று நம்ப முடியாத அளவுக்குப் பல்வேறு திறன்களைப் பெற்றதாக விளங்குகிறது. அதன் பெயர் டார்டிகிரேட் (Tardigrade) அந்தப் புழுவுக்கு நீர்க்கரடி (water bear) என்ற பெயரும் உண்டு.

 

இந்த நுண்ணியப் புழு கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும். கடும் குளிரையும் தாங்கி நிற்கும். கடும் கதிர் வீச்சையும் தாங்கி நிற்கும். இது அன்ன ஆகாரமின்றி பல ஆண்டுகள் ஜீவிக்கும் திறன் கொண்டது. ஏதோ விபரீதம் ஏற்பட்டு பூமியில் உயிரினப் பேரழிவு ஏற்பட்டாலும் டார்டிகிரேட்  புழு உயிர் பிழைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.

 

எனவேதான் விஞ்ஞானிகள் டார்டிகிரேடு புழுவின் மரபணுக்களை விரிவாக ஆராய்ந்துவருகின்றனர். பலவிதமான பாதக நிலைமைகளையும் இந்தப் புழு எப்படித் தாங்கி நிற்கிறது என்பதை அறிந்துகொண்டால், எதிர்காலத்தில் மனிதன் நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொண்டால், அதற்கு உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

கீட்சே என்னும் ஜெர்மன் விஞ்ஞானி 1773-ம் ஆண்டில் முதன் முதலில் இந்தப் புழு பற்றிக் கண்டுபிடித்துக் கூறினார். பின்னர் புழு பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்தப் புழு இனம் மலை உச்சிகளிலும் காணப்படுகிறது. கடல்களில் மிக ஆழத்திலும் இதைக் காணமுடியும். சேற்று எரிமலைகளிலும் இது ஜீவிக்கிறது. வெப்ப மண்டலக் காடுகளிலும் உள்ளது. பனிக்கட்டிகளால் மூடப்பட்ட அண்டார்டிகாவிலும் இது உள்ளது.

 

டார்டிக்ரேட் புழு முழுதாக வளர்ந்த நிலையில் அரை மில்லி மீட்டர் நீளமே உள்ளது. இதற்கு எட்டுக் கால்கள் உண்டு. இந்தப் புழு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது மைனஸ் 272 டிகிரி (செல்சியஸ்) குளிரையும் தாங்கி நிற்கும். 150 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்தைச் சில நிமிட நேரம் தாங்கி நிற்கும். கடல்களில் மிக ஆழத்தில் இருக்கிற கடும் அழுத்தத்திலும் இது பிழைத்து நிற்கும்.

 

நீர் இல்லாத நிலையில் இது காய்ந்து வெறும் பொடிபோலாகி விடும். அப்போதும் சரி, இது உயிரிழந்து விடுவதில்லை. 30 ஆண்டுகள் இப்படிச் செயலற்ற நிலையில் இருந்து விட்டுப் பின்னர் உகந்த சூழ்நிலைகள் ஏற்பட்டதும் மறுபடி பிழைத்துக் கொள்ளும்

 

கடும் கதிர்வீச்சு தாக்கினால் உயிரினங்களில் பெரும்பாலானவை மடிந்துவிடும். ஆனால் டார்டிகிரேட் புழு அதையும் தாங்கி நிற்க வல்லது. டார்டிகிரேடின் இந்தத் திறனைச் சோதிப்பதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 2008-ம் ஆண்டில் டார்டிகிரேட் புழுக்களை ஆளில்லா விண்கலம் ஒன்றில் வைத்து ராக்கெட் மூலம் உயரே செலுத்தியது. புழுக்கள் 12 நாட்களுக்கு விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு நிலைக்கு உள்ளாக்கப்பட்டன. பின்னர் கலம் பூமிக்குத் திரும்பியது. புழுக்களை நிபுணர்கள் ஆராய்ந்தபோது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சினால் அவை பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

 

விண்வெளியில் உயிரினத்துக்குத் தீங்கான வகையைச் சேர்ந்த புற ஊதாக் கதிர்கள், அவற்றை விட ஆபத்தான எக்ஸ் கதிர்கள், மிகுந்த ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர்கள் முதலியவை உள்ளன. டார்டிகிரேட் புழுக்கள் காமா கதிர்களையும் எதிர்த்து நிற்கும் திறன் கொண்டவை.

 

இந்தப் புழுக்கள் பின்னர் 2011-ம் ஆண்டிலும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

 

டார்டிகிரேட்  புழுக்கள் ஒன்றைக் காட்டுகின்றன. பூமியில் சாதகமான நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஜீவிக்கும் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளன. அதே சமயத்தில் விபரீத நிலைமைகளையும் தாங்கி நிற்கும் உயிரினமும் பூமியில் உள்ளது. ஏனெனில் பூமியானது உயிரினத்தின் சொர்க்கம்.

 

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர்:தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

0 comments:

Post a Comment