"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"/2

 

[பாடல் - 2 / உயிர்  எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]

அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் 

அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில்    

அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக

அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"

 

"ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே

ஆடை அணிகளை அளவோடு உடுத்து

ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே

ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"

 

"இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே 

இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ?

இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே

இடுகாடு போய் உறங்குவது எனோ ?"

 

"ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி

ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் 

ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ

ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"

 

"உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் 

உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ?

உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம்

உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"

 

"ஊடல் கொண்டு சென்ற மனைவியால்   

ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே

ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ

ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"

 

"எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் 

 எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே

எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது

எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"

 

"ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் 

ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ

ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம்

ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"

 

"ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி

ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே

ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே

ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"

 

"ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து   

ஒழுங்காக தினம் செயல்கள் செய்து 

ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே 

ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"

 

"ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை   

ஓலம்பாட என்னை வைத்தது எனோ?

ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து

ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?" 

 

"ஔவை வாக்கை மருந்தாக கொண்டு  

ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே 

ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே?

ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[ஈறிலி - கடவுள்

எரிவனம் - சுடுகாடு

ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை

ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன்

ஓலாட்டு - தாலாட்டு

ஔதாரியம் - பெருந்தன்மை

ஔரசன் - உரிமை மகன்

ஔடதம் - மருந்து]

0 comments:

Post a Comment