குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 08



மனித சமுதாய வரலாற்றின் படி பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நாகரிகம் பல படிகளைக் கடந்த பின்னரே வந்திருக்கிறது. இது ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒரே நிலையை, கற்பு வளையமாக மாற்றி விட்ட  நெறியில் இருந்து, படிப்படியாக உள்வாங்க பட்டதாகும்.

 

மகாபாரதம் ஆதி பருவத்தில், ரிஷி தீர்க்கதமஸ் பற்றிய ஒரு கதை வருகிறது. இவர் பிறவியிலேயே பார்வையற்றவர். பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. என்றாலும் ப்ரத்வேஷீ என்ற பெண், அவருடைய வேத அறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்தார். ரிஷி தீர்க்கதமஸ் எப்போதும் மனைவியுடன் இன்பம் துய்ப்பதில் ஒரே கண்ணும் கருத்துமாக இருந்தார், இதனால், கவுதமர் உட்பட பல குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் பெற்றாள். எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. எனவே அவரை விட்டகல அல்லது அவரை அகற்ற முடிவு செய்தாள். அப்போது ரிஷி தீர்க்கதமஸ் “இன்றிலிருந்து ஒரு பெண்ணுக்கு, கணவனாகிய ஒரே ஆண்தான் எல்லாமும். அவன் உயிருடன் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவள் மாற்றானை நாடலாகாது. இந்த விதியை அவள் மீறினால், குலத்தில் இருந்து விலக்கப் படுவாள்’’ என்று ஒரு விதி செய்தார் எனப்படுகிறது. அதாவது கணவன்-மனைவி என்ற உறவில், ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தான் ஆக   வேண்டும். இல்லையேல் சபிக்கப்படுவது உறுதி என்ற ஒரு புராண நீதியை இங்கு காண்கிறோம்.  அது மட்டும் அல்ல, சங்க காலத்தில் அல்லது சங்கமருவிய காலத்தில் கூட  ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலை இருந்ததையும் [உதாரணம் கோவலன், கண்ணகி மாதவி / முருகன், வள்ளி, தெய்வானை] ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை [widowhood] நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.

 

 

விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக் கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வாரிசின் அல்லது குடும்ப நீட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோர வேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், ஒருத்திக்கு ஒருவன் என்ற ரீதியில் மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப் பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.

உங்கள் வயிறு நிரம்பட்டும்,

உங்கள் உடைகள் சுத்தமா இருக்கட்டும்,

உங்கள் உடல், தலை நீராடட்டும், 

இரவும் பகலும் மகிழுங்கள்,

ஆடி பாடி மகிழுங்கள்;

உங்கள் கையைப் பிடிக்கும் குழந்தையைப் பாருங்கள்,

உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழ்ச்சியடையட்டும் !

இதுதான் மனிதர்களின் விதி”

[“Let your belly be full,

your clothes clean,

your body and head washed;

enjoy yourself day and night,

dance, sing and have fun;

look upon the child who holds your hand,

and let your wife delight in your lap!

This is the destiny of mortals.”]

ஆறாம் நூற்றாண்டு காரைக்காலம்மையின் [இயற் பெயர் புனிதவதி] வரலாற்றை நாம் பார்ப்போமாயின், இவர் சிறுவயது முதலே சிவனை வழி படுவதிலும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாப் பதிலும் ஆர்வம் உடையவராக விளங்கினார். இவர் மணப் பருவம் எய்தியதும் மிகப் பெரிய வணிகராகிய தனதத்தன் மகன் பரமதத்தனுக்கு, இவரை மணம் செய்து கொடுத்தனர் பெற்றோர்கள். ஒரு முறை தான் மனைவியிடம் ஒருவர் மூலம் அனுப்பிவைத்த இரு மாங்கனிகளில் ஒன்றை உண்ட பரமதத்தன் சுவை மிகுதி காரணமாக மற்ற மாங்கனியையும் உண்ணக் கேட்கின்றான். ஆனால் அதை ஏற்கனவே காரைக்காலம்மை சிவனடியாருக்குத் கொடுத்து விட்டார். தம் கணவனிடம் உண்மையைக் கூறத் தயங்கிய காரைக்காலம்மை, [எந்த ஒரு சிறு காரியமும் கணவன் சொற் கேளாமல், அவள் செய்யலாகாது என்ற உறுத்தலோ?  - இங்கு ஒரு குடும்பத்தில் மனைவியின் நிலையை காண்கிறோம்]  இறைவனிடம் வேண்டி, மாங்கனி ஒன்று பெற்று கணவரிடம் கொடுக்கிறார். என்றாலும் உண்மை கணவருக்கு பின் தெரிய வருகிறது. அதன் பின் கணவன் அவளை விட்டு மதுரைக்குச் சென்று, வேறு ஒரு பெண்ணை மணந்து, புதிய வாணிபம் தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது. கணவன் வெறுத்தாலும், மனைவி அவனை விட்டு விலகலாமா, எனவே அவளைக் கணவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் அந்தக் கணவன் அவளைத் தன் மனைவியாக, தனக்கு அடங்க வேண்டியவளாகக் கருதவில்லை. அவள் காலில் தன் புது மனைவி மகளோடு விழுந்து வணங்கினான்.  சிவபக்தி, அவளுக்கு உலகில் திருமண வாழ்க்கை இல்லை என்று நிர்ணயித்து விட்டதை காண்கிறோம். பூமியில் ஓராடவனுக்குத் திருமண விதிப்படி உரிமையான பிறகு, அந்தப் பெண், ஆண்டவனுக்கும் கூடத் தன் உடலை, உள்ளத்தை  உரிமையாக்க முடியாது என்ற கற்பியல் மிக அழுத்தமாக இந்த வரலாற்றில் அறிவுறுத்தப் படுகிறது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 09 தொடரும்... Theebam.com: குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகு...9:

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் - Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01: 

0 comments:

Post a Comment