பஞ்சமி [சிறுகதை[

ஆலங்கேணி-ஈச்சந்தீவு அடங்கலாக குஞ்சு குருமான் தொடங்கி ஒவ்வொருவருக்கும் வள்ளி ஆச்சியை தெரியும். அவர்களுக்கு ஆச்சியை மிகவும் பிடிக்கும்.இரக்க சுபாவமும், அன்பும் நிறைந்தவர்.

 

80 -வயது தாண்டினாலும் நோய் நொடியில்லாமல் வாழ்ந்தவர். தனது வீட்டுத் தோட்டத்திலிருந்தே, சகலவகை மரக்கறிகளையும் பயிரிட்டு சமையலுக்குப் பயன்படுத்துவார். ஊர்வன, பறப்பன தொட்டு, நீர் வாழ் நண்டு, இறால், மட்டி என்பவற்றையும் ஒரு பிடி பிடிப்பார். அதனால்தானோ என்னவோ அவருக்கு அப்படி ஒரு திடகாத்திரமான உடல் வாகு. உடனலமில்லை என்று மருத்துவ மனைப் பக்கம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை

 

எது சமைத்தாலும், அக்கம் பக்கத்து வீடுகளில் சாப்பிட்டாச்சா என்று கேட்டுப் பார்த்து விட்டுச் சாப்பிடும் பரோபகார குணம் நிறைந்தவர். குழந்தைகளும், இளஞ் சிறார்களும் ஆச்சியுடன் அந்நியோனியமாய் ஒட்டிக்கொள்வர்.

 

திடீர் என ஒரு நாள் அசப்பு பிசப்பு இல்லாமல் தலை சுற்றி விழுந்து ஆவி அடங்கி விட்டது.அன்று அமாவாசை நாள்,அவரின் சாவு ´பஞ்சமி´ என்று விபரமானவர்கள் ஆளுக்காள் குசு குசுத்துக் கொண்டனர்.

 

ஊராரும் உறவினர்களும் காக்கைக் கூட்டம் போல், ஒன்று குவிந்தனர்.

 

"பஞ்சமியில் சாவாம்-ஆவி, வீட்டைச் சுற்றி சுற்றி திரியுமாம். பூசை, படையல்கள் பெரும் எடுப்பில் செய்ய வேண்டுமாம்".

 

அன்றே ஒரு பசு மாட்டை கொண்டு வந்து கிணற்றடியில், பாக்கு மரத்தில் பிணைத்து கட்டிவிட்டு வைக்கோல், இலை தளிர்களை போட்டனர் .வாளியில் நீரும் நிரப்பி வைத்தனர். பசு, ஆவியைக் கண்டு மிரளுமாம். அப்படி மிரண்டால் நிச்சயமாய் அது பஞ்சமிதான் என்பது உறுதி. இது காலா காலமாக நம்பப்படும் ஐதீகமாம்.

 

ஊராரும், உறவினரும் சாவு வீட்டில் இரவு பகலாக குவிந்திருப்பார்கள். பெரும்பாலும் விழித்திருப்பார்கள். பெண்டுகள் கூட்டம், உளுத்துப் போன ஊர்க் கதைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் குழுக் குழுவாக சீட்டாட்டம் ஆடுவார்கள். எல்லாருமே நெஞ்சிடியுடந்தான் இரவை கழிப்பார்கள். சிலர் வீட்டுக்குள்ளும் முற்றத் திலும் உறங்க முயற்சிப்பார்கள்.

 

நடு நிசி கடக்கும் நேரம்-------

 

வீட்டு நாய், ஊர் நாய்கள் எல்லாம் ஒன்றாய் ஊளையிடத் தொடங்கின. அவை ஒரு அவலமான ஒலியை எழுப்பின. பிணைத்திருந்த பசு மாடும் எதனாலோ மிரண்டு, நிலைகொள்ளாமல் அந்தரப்பட்டுத் திமிறியது. துணிச்சலான ஒருவர்டோச் ´ வெளிச்சத்தை, பசு மாட்டை மேவி சுழற்றிப் பாச்சினார். வெளிச்சத்தைப் பார்த்த பசுவும்,சற்று அமைதியாயிற்று.

 

இவ்வளவுக்குப் பிறகு யாருக்குத்தான் தூக்கம் வரும். வயது முதிர்ந்த சிலர், தேவார திருவாசகங்களை, கந்தர் கவசத்தை குரல் எழுப்பிப் பாடத்தொடங்கினர். சுறு சுறுப்பான சிலர், வெளியில் அடுப்பை மூட்டி தேனீர் வைக்கத் தலைப்பட்டனர். இளம்,விடலைகள் இழுத்து மூடிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தனர்.

 

இப்படியான  களேபரத்தில், இருள் விலகி கிழக்கும் வெளித்தது. பசுவும் நிலத்தில் கிடையாகச் சாய்ந்து உறக்கத்தில் ஆழ்திருந்தது.

 

மரணவீடும் விழித்தெழுந்து களை கட்டியது. விடிய விடிய விழித்திருந்த கிழடு கட்டைகள், இரவு நடந்தவற்றை ஒன்றுக்குப் பத்தாய் அபி நயத்துடன், கதையளக்கத் தொடங்கினர்.

 

சம்பிரதாயம் தெரிந்தவர்கள், செய்ய வேண்டியவற்றை சட்டுப் புட்டென்று செய்யத் தொடங்கினர். ஐயர் ஒருவரும் வந்து, சமய சம்பிரதாயப்படி கருமங்களை முடித்து விட்டுப் போய் விட்டார்.

 

சவ அடக்கமும் ஊரே கூடி சிறப்பாக நடத்தி முடித்ததனர்.

 

அடுத்து நடக்க வேண்டியது துடக்குக் கழிவுதான்.....

 

நாலு நாள் கழிந்து, செய்ய ஏற்பாடாகி யிருந்தது. ஆச்சி வாழ்ந்த காலத்தில், ,என்னென்ன உணவுகளை விரும்பிச் சாப்பிட்டாவோ, அவற்றை ஒன்றுவிடாமல் தேடிப் பிடித்து சமைத்தனர். பல் சுவைப் பலகார பண்டங்கள், பழ வகைகளும் உணவுப் பட்டியலில் அடக்கம். சமையலில் கை தேர்ந்தவர்களால் உணவுகள் தயாராயின. பத்து வீடுகளுக்கு அப்பாலும், .சமையலில் கம கம மணம் காற்றில் பரவி வாயூற வைத்தது.

 

இரவில் தினமும் சாவீட்டில் தூங்கிய முத்தன், லிங்கன் இருவரும் நுணுக்கமாக யாவற்றையும் நோட்டமிட்டுக் கொண்டனர். தங்களுக்குள் சாடை காட்டிக் கொண்டனர். ஏதோ திட்டம் அவர்களிடையே உருவாகிக் கொண்டிருந்தது.

 

அவர்களுக்கு இவற்றில் துளியும் நம்பிக்கை கிடையவே கிடையது. பத்தாம்பசலி நம்பிக்கைகள் என்பது அவர்களின் வியாக்கியானம். அவர்களுடன் துரையன், மகா இருவரும் கூட்டு.....

 

முத்தன், கூட்டாளிகளுக்கு உணவுப் பட்டியலை நாவூற விபரித்தான். பக்கத்தில் இருந்த பள்ளிக் கூடத்தில் சந்தித்து திட்டமிட்டனர்.

 

அதாவது, எட்டு வீட்டு சாப்பாட்டுப் பெட்டியை பக்குவமாய் தூக்குவது என்பதே அவர்களது திட்டம். எல்லோருமே துணிந்த கட்டைகள். இது அவர்களுக்கு, இரண்டாவது முறை. படையல் சாப்பாடுகளின் சுவை அவர்களுக்குத்தான். தெரியும். அப்படியான சாப்பாட்டை ஒட்டு மொத்தமாய், வாழ்க்கையில் கண்டே இருக்கமாட்டார்கள். அதுவும், பஞ்சமிக்கு படைக்கும் விசேட உணவுகள்.... அப்பப்பா.. சிறப்பைச் சொல்லி மாளாது.

 

திட்டம் முடிந்த முடிவாகியது. பாடசாலையிலிருந்து பார்த்தால், சாவு வீட்டில் நடப்பது அத்தனையுமே துல்லியமாக தெரியும்.

 

நேரமும் நெருங்கியது; இருள்ளும் கவியத் தொடங்கியது.

 

இருவர் பாடசாலையிலும், மற்றுமிருவர் சுடலையிலும் நிலை கொண்டனர்

 

.பாடசாலையில் இருந்து நோட்டம் பார்ப்பவர்கள், படையல் பெட்டி கிளம்புவதைப் பார்த்து சுடலையில் நிற்பவர்களுக்கு´சிக்னல்´ கொடுக்கவேண்டும். அவர்கள் உசாராகுவார்கள். தெரு நாய்களிடமிருந்து சாப்பாடுப் பெட்டியை சேதமில்லாமல் காப்பாற்றியாக வேண்டும்.

 

ஒரு முறை, இவர்களுக்கு முன்னால் நாய்கள் முந்திவிட்டன. திட்டம், தோல்வியில் சொதப்பிற்றுது. வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டார்கள்

 

நேரம்,நெருங்க சாவு வீடு பரபரத்தது....

 

படையலுக்கான யாவும் பனையோலைக் கடகத்தை நிறைத்திருந்தன. உணவு வகைகளின் நறுமணம் எல்லோரது நாவிலும் உமிழ்நீரை சுரக்கச்செய்தது.

 

இப்படியான காரியங்களுக்கு, கந்தையா, கதிர்காமர் இருவருந்தான் துணிச்சலுடன் முன் வருவார்கள். அவர்கள்தான் துணிச்சலுடன் சுடலைவரை சென்று கச்சிதமாய் காரியத்தை முடித்து வருவார்கள். இருவருமே அண்ணன், தம்பிகள். அவர்களை விட்டால் வேறு ஆட்களே கிடையாது. எல்லாருமே பயந்தாங் கொள்ளிகள். சுடலைக்குப் போகாமல், தெரு முனையிலேயே பயத்தால், படையலை வைத்து விட்டு புரடியில் கால் அடிபடபட ஓடிவந்துவிடுவார்கள்.

 

அவர்கள் முன்னிலை வகிப்பதுக்கும் காரணம் உண்டு. கதிர்காமர், சுடலை வைரவரின் கலை கொண்டவராம். ஆலங்கேணியில், அவரைத் தவிர வேறு யாரிடமும் சுடலை வைரவர் கலை கொண்டு சாமி ஆடுவதில்லை. கந்தையர் மந்திரம் கற்றவர் .இதுவே அவர்களின் சிறப்பு. அவர்களுக்கு விசேட கவனிப்பும் உண்டு.

 

நேரம் தீர்மானிக்கப்பட்டதும், கந்தையரும், கதிர்காமரும் படையல் நிறைந்த கடகப் பெட்டியுடன் ,தீ பந்தமும் எடுத்துக் கொண்டு, தேவார, திருவாசகங்கள், காவடிப் பாட்டுகளை பெரும் குரலெழுப்பிப் பாடியபடி சுடலையை நோக்கி சென்றனர்.

 

அதே நேரம், முத்தன் குழுவினர் தலைமறைவானதையும் யாருமே கவனிக்கவில்லை.

 

படையல் கடகத்துடன் போனவர்கள், சுடலையின் மையப் பகுதிக்குப் போகவில்லை. நிலவு வெளிச்சம் பால் போல் ஒளிர்ந்து கொண்டிருந்ததது.

 

நுழைவுப் பகுதியை அண்டியதும், கடகத்தை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டு படையலிலிருந்த சாராயத்தை பகிர்ந்து குடித்தனர். கந்தையர் குரல் எழுப்பி தேவாரங்களை கட கடவெனப் பாடினார்.

 

.முடியும் தறுவாயில் கதிர்காமர், அண்மையில் புதருக்குள் சரசரத்த அரவம் கேட்கவும் பயத்துடன், "அண்ணா! மாறுவம்.." என்று குசு குசுத்தார்.

 

மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, பஞ்சமியின் நினைவில் இருந்தவர்களுக்கு சரசரப்பு கிலியை எழுப்பியதில் எதுவித சந்தேகமுமில்லை

 

"சரிடா... தம்பி! ஓடுவம்.." என்று கந்தையர் சொல்லி, இரண்டு எட்டு காலடி எடுத்து வைக்கவும், தம்பிக்கு கற்பூரம் கொழுத்தாதது ஞாபகம் வந்தது.

 

"அண்ணா! கற்பூரம் கொழுத்த மறந்திற்றன்.. " என்றார் படபடப்பாக.

 

"சரி ! வா..கொழுத்து..தீப்பெட்டி ..உன்னிட்டத்தானே..." என்ற கந்தையர், படையல் கடகம் வைத்த இடத்தை நோக்கினார். கடகம் மாயமாகிவி ட்டிருந்தது, நிலவு ஒளியில் துல்லியமாக தெரிந்தது.

 

மணல் தறையில் பெட்டி இழுபட்ட அடையாளம் தீப்பந்த ஒளியில் துல்லியமாய் தெரிந்தது. இருவருக்கும் நெஞ்சு திக்கென்றது

 

" டேய்..தம்பி..! பேய்..பெட்டியை இழுத்திற்றுதுடா.... ஓடுவம்டா.." என்று பதட்டத்துடன் கூறிய கந்தையர் முந்தி ஓடினார். கதிர்காமர் அவரை முந்தி ஓடினார்.

 

மூச்சிரைக்க ஓடிவந்த அண்ணன், தம்பியின் நிலையைப் பார்த்து, சாவு வீடு அச்சத்தில் அரண்டு சலசலத்தது.

 

இனியும் கேட்கவா வேண்டும் சாவு வீட்டில், இதுவே அச்சத்துடன் பலரது வாயிலும் நர்த்தனம் ஆடியது.

 

அதே நேரம், கடத்தல் கூட்டத்தினர், கடகத்தை பாடசாலைக் கட்டடத்தை நோக்கி, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டும், புளுகத்துடன் வாய் ஊறிக்கொண்டும் விரைந்தனர்.

-மயில்.மகாலிங்கம் ...(யேர்மனி)

0 comments:

Post a Comment