குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 09மேற்கத்திய நாடுகளை நாம் நோக்குவோமாயின்,  முறையான திருமண ஒப்பந்தங்கள் மற்றும் ஆணாதிக்கம், கிறிஸ்தவத்தின் தாக்கத்தாலும் சட்டத்தாலும் வலுவூட்டப் பட்டது. அது மட்டும் அல்ல, இந்த ஆண் பெண் இணைப்பு பாவத்தின் விளைவாக ஏற்பட்டது என்ற கருத்தால் [Marriage was allowed, but commonly seen as a union created as the result of original sin], திருமணங்கள் தேவாலயத்துக்கு வெளியே நடை பெற்றதுடன், திருமண பாலியல் மற்றும் குழந்தைப்பேறு [marital sex and childbearing] ஒரு  தூய்மையற்ற உணர்வு அல்லது செயல் என் கருதப் பட்டது. இதனால், குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றை ஓரங்கட்டுதல் அங்கு இயல்பாக நடந்தது. எனவே இந்த கருத்துக்களால் அல்லது செயல்களால், தேவாலயத்தின் செல்வங்கள் அல்லது சொத்துக்கள்  மேம்படுத்தப் பட்டது. அதாவது பலர் தம் செல்வங்களை, அவர்கள் திருமணம் செய்யாததாலும், சமயத்தின் தாக்கத்தாலும் தமது உறவினர்களுக்கு கொடுக்காமல், தேவாலயத்துக்கு கொடுத்தார்கள். என்றாலும், கி பி 1200 க்கு பின், இந்த கோட்பாட்டின் தலைகீழ் மாற்றம் நடை பெற தொடங்கியது. அதை தொடர்ந்து சில நூறு ஆண்டுகளுக்குள் திருமணம் புனித மதச்சடங்காகவும் மற்றும் திருமணம் கலைக்க முடியாததாகவும் தேவாலயம் ஏற்றுக் கொண்டது [declared marriage a sacrament of the Christian Church and an union]. 

 

 

ஒரு சில தசாப்தங்களின் இடைப் பட்ட காலத்தில், பெற்றோர் பிள்ளைகளுடன் பாட்டி, தாத்தா, அத்தை, மாமாக்கள் என பாரம்பரிய நீட்டிக்கப் பட்ட குடும்பம் [traditional extended family] இருந்தது. இன்று அது சுருங்கி தனிக் குடும்பமாகவும் சிலவேளை ஒற்றை பெற்றோர் குடும்பமாகவும் குறைந்து விட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணம் செய்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் ஒரு குடும்பம் என பழைய வரையறை கூறுகிறது. அவர்களுடன் சில வேளை பாட்டன் பாட்டியும் அடங்கும். என்றாலும், அந்த வரையறை பல ஆண்டுகளுக்கு முன், அதிகமாக வழக்கொழிந்து விட்டது. இன்று காலத்தின் மாறுதலையும் கவனத்தில் கொண்டு குடும்பம் என்பதற்கு ஓரளவு விட்டுக் கொடுப்புகளுடன் புதிய வரையறை செய்யப் பட்டுள்ளது. அதாவது குடும்பம் என்பது எந்த பாலினத்தையும் கொண்ட, திருமணம் செய்த அல்லது செய்யாத இரு பெற்றோர்களை அல்லது சிலவேளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட  பெற்றோர்களை கொண்டதாகவும், இருவருக்கும் அல்லது ஒருவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும், அல்லது அவர்களில் எவருக்கும் பிறக்காத தத்து எடுத்த பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.

 

 

பொதுவாக, திருமணம் சார்ந்த குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடித்தளமாகும். இதை எமக்கு வரலாறு போதித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஒன்று தான் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நல்ல தருணம் என்றும், அதை பாரம்பரிய குடும்ப மாதிரி [traditional model of family] ஒன்றே இலகுவாக மிகத் திறமையாக கொடுக்க வல்லது என்றும் குறிப்பிடத் தக்க ஆராய்ச்சிகள் ஆதரவு வழங்குகின்றன. சில குடும்ப சூழ்நிலைகள் துரதிருஷ்டவசமாக இதை நிர்வகிக்க முடியாது இருப்பதுடன், ஒற்றை பெற்றோர் [single parent] தங்களால் முடிந்தவரை சிறந்ததை செய்ய இன்று போராடுகிறார்கள். நல்ல திருமணம் மற்றும் நிலையான குடும்பங்கள் இல்லாமல், ஒரு வலுவான சமுதாயம் இருக்க முடியாது என்று வரலாறு எமக்கு பாடம் படிப்பிக்கிறது. எனவே தான், திருமணங்களுக்கு ஊக்கமளிக்கவும் பாதுகாக்கவும், சமுதாயம் சட்டங்கள் இயற்றி அவ்வற்றை நடைமுறைப் படுத்தின.

 

 

ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெசொப்பொத்தேமியா பெண்களின் வாழ்க்கையை அங்கு காணப் பட்ட பெண் தெய்வம் குலாவிற்கான [goddes Gula] துதிப் பாடல் ஒன்று "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத்தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"] என கூறுவதன் மூலம் தெரிய படுத்துகிறது. எனவே பெண்கள் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக் கோரிக்கை / முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு, இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. இப்படிதான் அங்கு குடும்ப வாழ்க்கை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இருந்தது என்பதையும், அங்கு அவை உறுதி செய்யப் பட்ட ஒரு கல்யாணத்தில் முடிந்தது என்பதையும் காண்கிறோம்.  

 

 

குடும்பங்கள், சமூகவியல் செயல் பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ, என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.

 

 

அதீத தொழில் நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையதளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம்  எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம். உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும். பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்: 

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."

 

அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 10 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் -Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01

0 comments:

Post a Comment