"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”

சபரிமலை பக்தர்களுக்கு ச்சமர்ப்பணம்

எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில் , பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும்  உள்ளன.

பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் வரும் காலம் என்றும், அதனால் அவர்கள் ஐயப்பனை நேரில் வந்து வழிபடுவதை விரும்பவில்லையாம் ?  ஏனென்றால் அப்படி வழிபட வரும்பொழுது ஒருவேளை அவர்களுக்கு மாதவிடாய் வந்து விடுமோ என்ற பயமாம் ? யாருக்கு இந்த தீட்டும் அருவருப்பும் ? - ஐயப்பனுக்கா, நிர்வாகத்திற்கா அல்லது ஆண் பக்தர்களுக்கா ??

முதலில் ஐயப்பனை பார்ப்போம், அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அவரின் தங்கை மகிசீ என்பவர் அதற்கு காரணமான தேவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தாள். எனவே பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றி, அதனால் பிரம்மா மகிழந்து, சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு வரம் கொடுத்தாராம். அப்படி  ஆண் ஓரினச்சேர்க்கை மூலம், அதாவது ஹோமோ செக்சில் பிறந்தவரே ஐயப்பன் ஆவார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, அதற்கு வழமைபோல் பிராமணர்களின் ஒரு புராணக் கதையே உண்டு. ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ அல்லது ஒரு சிறு காவல் தெய்வ வழிபாடு ஆகும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல.

எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவிக்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கூறப்பட்டதோ,அதே சிவன் தான் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படி என்றால் பெண் பங்கு தேவையில்லை என்று ஒரு நாடகம் ஆடி மறுத்தளிப்பு செய்வாரா ?  கொஞ்சம் யோசியுங்கள் சபரிமலை பக்தர்களே ? 
மற்றது படைத்தல் தொழில் செய்யும் பிரமனுக்கு ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணும் பெண்ணும் அவசியம் என்பது தெரியாமல் போய்விட்டதா ? அல்லது தன தொழிலையே மறந்து போய் அல்லது சிவனையோ அல்லது  திருமாலையோ பெண் என்று நினைத்தாரா ?  எப்படி  'சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தை' என்று சொன்னார் ?  யாராவது ஒரு பக்தராவது சிந்தித்தீர்களா ?  இல்லை உங்களுக்காவது அறிவு, அனுபவம் இல்லையா ?

ஆனால் பெண்களைதீட்டுஎன்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக அன்றே கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு அல்லது எத்தனை  சபரிமலை பக்தர்களுக்கு தெரியும்? தாம் மலையாளி தமிழ் தெரியாது என்று சொல்ல முடியாது? ஏனென்றால், திருமூலர் காலத்தில் ,சங்க காலத்தில் ,ஏன் இந்த புராண ஐயப்பன் காலத்தில், நீங்கள் தமிழ் சேர நாட்டு மக்கள் என்பதும் தெரியாதா ? அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர் அன்றைய சேர நாட்டு ,ஆனால் இன்றைய ஐயப்பன் பக்தர்களை நோக்கி ?

"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."

இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.

"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."

அதே போல,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனதுபுலவர் புராணம்நூலில்,

வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”

அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார். அப்படி என்றால் எப்படி ஐயப்பனுக்கு தீட்டு வரும் ?, கொஞ்சம் யோசியுங்கள் தாம் ஐயப்பன் பக்தர் என்று கூறுபவர்கள் ??

மற்றது ஐயப்பனை 'மாளிகை புரத்தம்மா' என்ற அழகி மணம் செய்ய விரும்பிய பொழுதும் அதை உதறி தள்ளி,ஒரு பிரம்மச்சரியத்தை தொடர்ந்து கடைபிடித்தவராம். என்றாலும் எப்பொழுது முதல் தரம் வரும் பக்தர்கள் இல்லாது ஒழியுதோ (devotee visiting Sabarimala for first time) அன்று உன்னை மணப்பேன் என்று அவளுக்கு உறுதி கொடுத்தார், அந்த காதல் தேவி அதை ஏற்று இன்னும் அந்த சபரிமலையிலேயே காத்திருக்கிறாளாம் என்று நம்புவதுடன்,அவரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவளும் ஒரு மணப்பெண் என்பது குறிப்பிடத் தக்கது, இது இன்னும் இந்த பக்தர்களுக்கு தெரியாதா ? அவளை ஏன் இன்னும் சபரிமலையில் இருந்து துரத்தவில்லை ? அவளை எப்படி சபரிமலையில் வைத்து வழிபடமுடியும் ?, சிலர் பெண்கள் சபரிமலைக்கு போவது பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஐயப்பனுக்கு இடைஞ்சல் என்கிறார்கள் ,அப்படி என்றால் அவர் அவ்வளவு மனக் கட்டுப்பாடு இல்லாதவரா ? அனுமானும் பிரம்மச்சரி தான்,ஆனால் எந்த பெண்களும் போகலாம் வழிபடலாம் ,அது எவ்வாறு அல்லது அனுமான் ஐயப்பனை மாதிரி இல்லாமல், உறுதியான மனக் கட்டுப்பாடு உள்ளவர் என்று ஐயப்பனை குறைத்து கூறுகிறீர்களா??

சிலர் பெண்களின் சுகாதார மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு மலை ஏறி வழிபடுவதை தடுத்து கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், இது இந்த நவீன வசதிகள் படைத்த இன்றைய உலகில் ஒரு முற்றிலும் பொருந்தா வாதமாகும்? ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும் என்பதை தயவு செய்து உணருங்கள். இல்லாவிடில் பெண்கள் முடிவு எடுத்தால்  மதமாற்றங்களின்  வேகம் இன்னும் தீவிரமாகி உங்கள் பிழைப்புக்கு ஆண்கள் வருகையே அற்றுப்போய்விடும்.

"எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
''பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா ?'' வாசிக்க கீழே உள்ள தலைப்பினை  இணை  அழுத்துங்கள் ...


1 comments:

  1. இந்துக்கோவில்களும் , அவ்வழி வந்த மக்களும் மனிதத்தினையோ, மனிதா பிமானத்தினையோ மதித்ததில்லை. கருவறைக்குள் குறிப்பிடடவர்களை அனுமதியாமை, காலஞ்சென்றவரின் அல்லது குழந்தை பிறந்தால் உறவுகளை ஆலயத்துள் அனுமதியாமை, இவையெல்லாம் அவர்களை மேலும் மனமுடைய செய்வது மட்டுமல்ல , ஒரு இழவு வீட்டுக்கு வரும் விரதம் கடைப்பிடிக்கும் உறவு அவ்வீட்டில் எதனையும் அருந்தாது ,உண்ணாது அவற்றினைப் பெற்றால் அபச்சாரம் என்ற தோரணையில் அவர்கள் ஒதுக்குப்படடவர்கள் என்ற பாங்கில் அவர்கள் மனதை நோவடிப்பதுவும் , ஐயப்ப மாலை போடடவர் ஒரு உறவு வீட்டில் இழவு நடந்தால் மாலை போடடவர் என்ற காரணம் காட்டி அங்கு சென்று வருவதனை தவிர்த்தல் என்பது ஜீரணிக்க முடியாத கொடுமையான துரோகத்தனம்.இதை எல்லாம் வழிபாடு என்று கூறி வழிபாட்டின் நோக்கத்தியை புரிந்து கொள்ளாத /கொள்ள முடியாத மனிதர்களை வைத்து ஆலையங்கள் தங்கள் நோக்கம் மட்டும் இன்று நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete