பாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்

அண்மையில் 400 கிலோமீற்றர் தூரத்தில் மலையில் அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயத்திற்கு பலரும் இணைந்து ஒரு பேருந்து ஒழுங்குபண்ணி சென்றிருந்தோம்..பேருந்து ஆலய அருகில் செல்லும் வசதிகள் அங்கு இல்லாதபடியால் கோவிலிருந்து 2கிலோ மீற்றர் தூரத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட்து. நடக்க இயலாதவ முதியவர்களுக்காக  அங்கு சிறு வாகன வசதி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
நாங்கள் குழுவாக நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எம்முடன் மிகவும் நடக்கமுடியாத ஒரு வயோதிப மாதுவும் தேவாரத்தினை முணுமுணுத்தபடி நடக்க ஆரம்பித்தார்.அவரால் எம்முடன் இணைந்து நடக்கமுடியாமல் சிரமப்படுவதனை கண்ட எனது நண்பர் அவரிடம் கேட்ட கேள்விக்கு தான் முருகனிடம் நடந்து வருவதாக வேண்டிக்கொண்டதாக கூறிக்கொண்டார் .அதற்கு என் நண்பன் அப்படியானால் நீங்கள் பேருந்தில் வராது 400 கிலோமீற்றரும் நடந்து வந்திருக்கவேண்டும்,நீங்கள் முருகனை ஏமாற்றுகிறீர்கள் என்று கடித்துக்கொண்டான்.
பலமுறையும் எம்மை தாண்டிச் செல்லும் சிறு வாகனத்தில் அம்மாதுவை எப்படியும் ஏற்றவேண்டும் என எண்ணிய நான் அம்மாதுவை அணுகி அம்மா திருமூலர்  சொல்லியிருக்கிறார்

உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே

நீங்கள் தேவாரம் படிச்சுக்கொண்டு, உங்கள் உடம்பான கோவிலை  உடைக்கிறியள் . சிவலிங்கம் ஆகிய சீவனை காவிக்கொண்டு ,கடவுளை தேடி இருக்கும் இடத்தை மறந்து கடவுள் இல்லாத இடம் தேடி அலைந்து அவன் ஆலயமான உங்கள் உடம்பினைச் சேதம் செய்யிறியள். நீங்கள் கோவில் என்று சொல்லி மீண்டும் மீண்டும் தப்புச் செய்யிறியள் என ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தேன்.

அம் மாதுவால் அதற்குப் பிறகும் எம்பேச்சினைத் தட்டிக்கொள்ள முடியவில்லை.

 இப்படித்தான் எம்மில் பலரும் தேவாரம் பாடிக்கொண்டு  விரதம்,நேர்த்தி என்று தம் உடலை அழித்தும் கோவில்,கோவில் என்று தம் பணத்தையும்,நேரத்தையும் கொட்டி செலவழித்து ஆன்மீக வாழ்க்கையின் அருகில்கூட நெருங்க இயலாதவர்களாக  இருக்கிறார்கள்.

🎺🎺🎺🎺🎺தொகுப்பு:செ.மனுவேந்தன் 🎺🎺🎺🎺🎺

0 comments:

Post a Comment