விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02



நாம் முதலில் கருத்தில் கொண்ட இரு வெவ்வேறு சூழ்நிலைகளில், முதலாவது  மாதிரியை கவனத்தில் எடுத்தால், அதில் பொதுவாக எல்லோரும் ஒரே மொழி பேசும் இனத்தவர்கள், ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம், வாழ்க்கை முறை அல்லது பாணி பலதரப்பட்டவை. எனவே இந்த வேறுபாடுகளை எமது ஆய்விற்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட போர் சூழலில் இளம் பிராயத்தனர் பலர் தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தி, தமது பாதுகாப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுமட்டும் அல்ல வெளிநாடு வந்த பின்பும் தமது வாழ்வை நிலைநிறுத்தவும், தம்மை அனுப்ப பெற்றோர்கள் செலவழித்த பணத்தை ஈடு செய்யவும் மற்றும் பல காரணங்களால், அவர்கள் உடனடியாக வேலைக்கு போகவேண்டிய நிர்ப்பந்தமும் வந்தது, அதனால் இங்கும் படிப்பை அவர்கள் தொடர முடியவில்லை. இன்று அவர்கள் வசதிகள், பணங்கள், செல்வாக்குகள் போன்றவைகளை பொறுத்தவரையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையின் தாக்கத்தாலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் வாழ்ந்த காரணங்களாலும், மற்றும் பிற காரணிகளாலும், செயற்கையாக பிறரினும் விஞ்சி இருக்கும் நிலை ஒன்றில் [an artificial bubble of superiority] தமது வாழ்வை அமைத்து விட்டார்கள். அது மட்டும் அல்ல நிறைய விடயங்களை தமக்கு எட்டியவாறு கோட்பாடு செய்து, அதை நீங்கள் நம்ப வேண்டும் என உங்களுக்கு தமது உரையாடலில் அல்லது விவாதத்தில் புகுத்துகிறார்கள். என்றாலும் இவைகளை அவர்கள் பொதுவாக புத்தக வாயிலாகவோ [consult a good book] அல்லது மற்றவர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமாகவோ [constructive feedback] சரிபார்ப்பதில்லை. மற்றது எப்படி ஒரு ஆக்கபூர்வமான உரையாடலில் அல்லது சிந்தனையை தூண்டக்கூடிய விவாதத்தில் [intellectual conversation, nor a thoughtful debate ] ஈடுபடுவது என்பது அவர்களுக்கு தெரியாததும் ஒரு குறையாகும். "இவர்களின் நிலையை பார்க்கும் பொழுது கிரேக்கத் தத்துவஞானியான  பிளேட்டோ [Plato] "சொல்லுவதற்கு தங்களிடம் சில இருப்பதால் அறிஞர்கள் சொல்லுகிறார்கள், ஆனால் முட்டாள்கள் தாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதால் சொல்கிறார்கள்" [Wise men speak because they have something to say; Fools because they have to say something] என கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல நிறை குடம் தளும்பாது. குறை குடம் கூத்தாடும் [filled vessels doesn't make sound, empty vessel does] என்ற தமிழ்ப் பழமொழியையும் இங்கு சேர்க்கலாம்.

இவை [மேலே கூறியவை] முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் பொது அறிவாளிகள் என்றும் சொல்லமுடியாது, உதாரணமாக சிலர் ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy] உள்ளத்தில் கொண்டுள்ளார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை படித்துள்ளார்கள், அனால் அதில் அறிவியல் மனநிலை [scientific temper] இல்லாமல். உதாரணமாக, வானியலைப் பற்றி படிப்பிக்கும் ஆசிரியர் அதை வகுப்பு அறையோட முழுக்கு போட்டு விட்டு, சூரிய சந்திர கிரகணத்தின் போது குளத்தில் புனித நீராடுகிறார். எனினும் பொதுவாக அவர்கள் தங்கள் தங்கள் துறையில் அறிவாளிகள், அனுபவசாலிகள். அதை நாம் மறுக்கவில்லை. அத்துடன் சிலவேளை அறிவு அல்லது  செல்வம் அல்லது  உடல் வலு [தசை சக்தி] ஆகியவற்றுடன் அகம்பாவமும், நியாயமற்ற தன்மையும் சிலரிடம் வருகிறது [Sometimes, arrogance and unreasonableness comes with knowledge, wealth and muscle power]. உதாரணமாக ஒருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணும் பொழுது ,அவர் மற்றவர்களின் கருத்துக்களை, அவை நியாயபூர்வமாக இருந்தாலும், அதை ஏற்க மறுக்கிறார். "தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு" [known handful, Unknown global] என்பதை இவர்கள் உணர்வதில்லை. 

மற்றது ஒரு கருத்து என்றும் உலகளாவிய ரீதியில் பிரபலமாக இருப்பதில்லை [never universally popular]. ஒருவருக்கு முக்கியமாக அல்லது தொடர்புடையதாக இருப்பது மற்றவருக்கு அப்படி இருக்காமல் விடலாம். உதாரணமாக மகாத்மா காந்தியைப் பற்றிய பெரும்பாலான மக்களின் நம்பிக்கையையும், ஆதாரபூர்வமான அருந்ததி ராயின் [Arundhati Roy] அண்மைய கருத்தையும் ஒப்பிடுக.
மேலும், சிலர் தம் குரல் கேட்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள், அதற்கு கிடைக்கும் பொது வரவேற்பு அவர்களின் தனி மதிப்பை உயர்த்தும் என்று நம்புகிறார்கள். எனவே தம் குரல் கேட்கவேண்டும் என்பதற்காக மட்டும் சிலர் கதைக்கிறார்கள். ஆனால் பரந்த விடயங்களில் எல்லாம் கதைக்க முயலும் பொழுது அவையின் தரமும் குறைகிறது [the larger the quantity, the more diluted the quality]

பண்டைய மநு நீதி நூல் அல்லது தர்ம சாஸ்திரம், இரண்டாம் அத்தியாயத்தில், 110 ஆவது வசனத்தில் ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விடயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன்) போல இரு [Unless one be asked, one must not explain (anything) to anybody, nor (must one answer) a person who asks improperly; let a wise man, though he knows (the answer), behave among men as (if he were) an idiot.] என்கிறது. அதே போல பைபிளும் நீதிமொழிகள் 4:24 இல்  "வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து" [ Put Away Perversity From Your Mouth; Keep Corrupt Talk Far From Your Lips] என்கிறது. வீண் வாதம் வீண் விளைவைத் தரும். எனவே மேலே கூறியவாறு புத்திசாலித்தனமாக விலத்துவதே ஒரே வழி என்று எண்ணுகிறேன். எவ்வளவு விளக்கினாலும் விடாமல் விதண்டா வாதம் செய்பவர்கள். அவர்கள் கேள்விக்கு ஒரு முறை பதிலளிப்பதையே நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட்டதை போல கொக்கரிப்பவர்கள். இவர்களுக்கு தேவை உண்மையோ விளக்கமோ அல்ல. அவர்களின் கருத்துக்கு வெளிச்சம் மட்டுமே ஆகும்.

இனி நாம் இரண்டாவது மாதிரியை பார்ப்போம் ,இங்கு பலதரப் பட்ட இனத்தவர்கள் இருந்தாலும், அவர் பங்குபற்றிய உரையாடல் கூட்டம் அதிகமாக சக ஊழியர்களாகத்தான் இருந்திருப்பார்கள். எனவே அவர்களின் அறிவு அனுபவத்தில் ஓரளாவது ஒற்றுமை கட்டாயம் இருந்து இருக்கும், எனவே அங்கு உரையாடல் அல்லது விவாதம் அறிவு பூர்வமாக அமைய வாய்ப்புகள் அதிகம் என நாம் இலகுவாக ஊகிக்கலாம்.

நாம் இதுவரை அலசியத்தில் இருந்து, நாம் கற்றுக் கொண்டது  பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். பேச்சினை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்று கணித்துவிட இயலும். பேச்சே ஒருவரின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகிறது பணம் அல்ல என்பது ஆகும். சுருக்கமாக வாயிலிருந்து வெளிப்படாத வார்த்தைகள் விலைமதிப்பு மிக்கவை. அதனால் பேசும்போது கவனமுடன் பேசுவோம்.

பேச்சினை எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்த கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். உதாரணமாக எதிலும், எதற்கும் பொருந்தாததாகவே, எதிலும் புரிந்து கொள்ளாமலேயே, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்து கொண்டே இருப்பவர்களை ‘‘வச்சாக் குடுமி, செரச்சா மொட்டை’’ என்பதைப் போலப் பேசுகிறான் என்பர். முடிவெட்டினால் சிலர் குடுமிவைப்பதைப் போல் வெட்டி வைத்துக் கொள்வர். இல்லை எனில்  முடி முழுவதையும் எடுத்து மொட்டையடித்துக் கொள்வர். இதுபோன்றே சிலர் பேசும்போது சரி என்றால், தவறைக் கூடச் சரி என்று ஒப்புக் கொள்வர். தவறு என்று கூற நினைத்தால் தவறு என்றே கூறிச் சாதிப்பர். இவர்களின் பண்பாடற்ற பேச்சினையே மேற்குறிப்பிட்ட பழமொழி எடுத்துரைக்கின்றது. இதை சரியாக புரிந்து அதற்க்கு ஏற்றவாறு அவர்களை விலத்தியோ அல்லது நாம் விலகியோ இருக்க பழகவேண்டும் என்பதே என் அறிவிற்கு எட்டிய முடிவாகும்.
 முடிவுற்றது🔊🔊🔊🔊🔊🔊 
                       [ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]✍✍✍✍


0 comments:

Post a Comment