தமிழ் மொழி இறவாது இருக்க...


.
நான் அறிஞனும் இல்லை. மொழி வல்லுஞனும் இல்லை. என்றாலும், நாளாந்தம் மனதில் தோன்றும் தமிழ் மொழி பற்றிய சில விவரங்களைச் சொல்லிக் கொட்டலாம் என்று விழைந்தேன்.

தமிழ் எழுத்துகளுக்கு மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யவேண்டி இருந்தும் அதைச் செய்யாது, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழியாம் தமிழ் என்றும், முச்சங்கம் வளர்த்த பெருமை நிறைந்த தமிழ் என்றும் கூறிக்கொண்டு, பெருகி வரும் புதிய சொற்பதங்களின் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல், எழுத்து முறைகளை அப்படியே பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்! எது தமிழ்? மாற்றப்படாது என்று அடம்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துகள் என்றால் என்ன? இவைகள் என்ன சங்க காலம் தொட்டு இன்று வரை மாற்றப்படாது பேணிப் பாதுகாத்துக்கொண்டா வந்திருக்கிறார்கள்? இல்லை!


நமது முதன்மையான 'தமிழ்' தெய்வப்புதல்வர், 'தமிழில்' ஓலையில் எழுதிய   குறளின் அசல் வடிவத்தைப் பாருங்கள்:
 

இது வேறொரு மொழியல்ல! பழைய தமிழ்! விளங்கியதா? அதாவது

அன்று அப்போதைய தமிழில்  எழுதியதை நாம் இப்போதைய தமிழ் எழுத்தில் (மொழிபெயர்த்து) எழுகிறோம்.


2000 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத்துகளின் வடிவம் இதுதான். இவை தமிழ் பிராமி எழுத்துகள். காலம் செல்லச் செல்ல, இவை உருமாறி, பெருத்து, வட்டெழுத்து வடிவத்தினை எடுத்தன. பின்வரும் அட்டவணைகளில், என்னமாதிரி உயிர் எழுத்துகளும், குற்றெழுத்துகளும் 2 நூற்றாண்டு காலமாக வடிவம் மாறிக்கொண்டு வந்திருக்கின்றன என்று பாருங்கள்:
 


 
ஆகவே, பல புதிய தொழில்நுட்ப, வேற்றுமொழி சொற்களைத் தமிழில் இலகுவாக எழுதுவதற்கும், தட்டச்சில் விரைவாகத் தட்டுவதற்கும் மாற்றங்கள் பல நம் தமிழ் எழுத்துகளுக்குச் செய்யப்பட வேண்டும்.

1 . எழுத்தின் அளவு சிறிதாக்கப் படவேண்டும். (அடிதான் விழும்). ஒரே விடயத்தை தமிழில் எழுதிப் பிறமொழிகளிலும் எழுதிவிட்டுப் பார்த்தால் தமிழுக்கு எப்போதும் கூடிய இடம் தேவைப்படுவது தெரிய வரும். பழைய பிராமி எழுத்துகளே பரவாய் இல்லை.

2 . 'னா' 'னை' சீர்திருத்தம் செய்யப்பட்டது போல ஈகார, ஊகார சார் உயிர்மெய் எழுத்தெல்லாம் ஒரேமாதிரியான விசிறி, சுழியினையே பாவிக்க வேண்டும்.

3 . அரவுக்குப் பதில் ஒரு சின்னப் புள்ளி, குறில் எழுத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.

4 . தமிழில் இல்லாத b , f , g , h , sh , z ஒலிகளுக்குப் புதிய எழுத்துகள் வேண்டும். தமிழில் இருந்து உருவான பிறமொழிகளில் இன்னும் பலவிதமான ஒலிகளுக்கு எழுத்துகள் உள்ளன. தமிழில் உள்ள , , , போன்ற எழுத்துகளுக்கே ஒரு சில குறியை இணைப்பதன்மூலம் இந்தப் புதிய ஒலிகளை உண்டாக்கலாம்.

5 . குற்றெழுத்துகள், முதலெழுத்தாக வராத எழுத்தகள், வழங்காத எழுத்துகள்(ஞூ, ஙி  போன்றவை) எல்லாமே சொற்களின் முதலில் வரலாம்.

2700 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்காப்பியருக்குத் தற்போதைய மொழிவளர்ச்சித் தேவைபற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. பிராமி எழுத்து வடிவத்திலிருந்து தமிழ் மட்டுமல்ல, பல தென்னாசிய மொழிகளும் அதிலிருந்துதான் தோன்றி முற்றிலும் புதிய ஒருமொழியாக் உருவாகவில்லையா?


ஆகவே தமிழ் இறவாது இருக்கப் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அன்புடன், செல்வத்துரை சந்திரகாசன்.

5 comments:

 1. ---- 2 நூற்றாண்டு காலமாக என்பதை 2 ஆயிரம் வருட காலமாக எனத் திருத்தி வாசிக்கவும்.
  -செ.ச.

  ReplyDelete
 2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, January 17, 2013

  எந்த ஒரு மொழியும் ஓசைகளில் ஒழுங்குதான்; ஓசைகளின் அமைப்புத்தான்.

  ஒரு மொழியின் எழுத்து வடிவத்தை இப்படி கூறலாம்

  ஒலி வடிவம் (ஒலிப்பது)

  வரி வடிவம் (எழுதப்படுவது). எழுத்து என்றால், எழுதப்படுவது என்று மட்டும் பொருள் அன்று. எழுப்பப்படும் ஒலி என்று பொருள்.

  முதலில் ஒலி வடிவம். பிறகுதான் வரிவடிவம். ஒலி வடிவம் மாறாது; வரிவடிவம் மாறும்.[ ஐ - என்பது அய் என்றுதானே ஒலிக்கிறது?]

  இதே போல:

  மழை>மழய்,கோதை>கோதய்..

  நாம் விரும்பியவாறெல்லாம் எழுத்துகளைக் கூட்டலாம் என்றால் மொழியே கண்டபடி சிதைந்துவிடும்.

  சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாளம் என்ற மொழியாக உருவம் பெற்றது.

  ஒரு மலையாள கட்டுரையின் பகுதியை கீழே மணிப்பிரவாள நடையில் தருகிறேன்.உங்களுக்குப் புரிகிறதா ?

  "காவிரிப்பட்டணத்திலெ ஒரு தனிகவ்யாபாரியுடெ மகனாய கோவலன் அதிஸுந்தரியாய கண்ணகி எந்ந யுவதியெ விவாஹம் செய்து. காவேரிபூம்பட்டணம் எந்ந நகரத்தில் இருவரும் ஸஸுகம் ஜீவிக்கவே கோவலன் மாதவி எந்ந நர்த்தகியெ கண்டுமுட்டுகயும் அவரில் ப்ரணயாஸக்தனாவுகயும் செய்து."

  ஒரு மொழியின் வரி வடிவம் அது தோன்றிய காலத்தில் இருந்தது போலவே என்றும் மாறாமலேயே இருத்தல் வேண்டும் என்று எண்ணும் தேக்க மனப்பான்மை

  மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை,இது வையத்தின் விதி!

  தந்தை பெரியார் -வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே- "ண,ல,ள,ற,ன" என்ற ஐந்து எழுத்துகளும் "ஆ,ஐ.ஒ,ஓ," என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ, லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப் படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.

  இப்ப சில அறிஞர்கள்[அய்யா முனைவர் வா.செ.குழந்தைசாமி ] "இ,ஈ,உ,ஊ" எழுத்துகளில்- நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தி- மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர்."இது தான் சந்திரகாசன் கூறும் மாற்றமும்" . பல தமிழ் அறிஞர்கள்[முனைவர் மு.இளங்கோவன் ,முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன்,பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார், ] இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

  ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் .எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது.எல்லா மொழிகளும் தங்களிடத்தே ஏதோ ஒரு பிரச்சனையை உள்ளடக்கியே உள்ளன.தேவையான மாற்றம், தேவையற்ற மாற்றம் என்றும் உள்ளன. தேவையில்லாத மாற்றங்கள் ஏற்படும் பொழுது தான் சிதைவுகளும் அதன் முடிவில் அழிவுகளும் நடக்கின்றன.

  "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
  மெத்த வளருது மேற்கே - அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
  சொல்லவும் கூடுவதில்லை - அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
  மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
  என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
  இந்த வசை எனக்கெய்திடலாமோ?
  சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
  செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"-- மகாகவி.பாரதி

  வேற்று மொழியில் உள்ள நல்ல கலை நுட்பங்களை தமிழ்மொழியில் சேர்த்து அதை வளப்படுத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கனவு. அப்படிச் செய்தால் நீலகண்ட சாஸ்திரி சொன்ன பழிச்சொல் நீங்கி என்றும் பூமியில் தமிழ் நிலைத்திருக்கும், என்றே மகாகவி மேலே சொன்னார்.

  இதில்[எழுத்துச் சீர்திருத்தம்] எப்பவாவது ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆய்வு மேற்கொள்ளப் பட்டதா ?பல்லாயிரக்கணக்கான வடிவங்களைக் கொண்டு தங்கள் மொழியை வாசிக்கும் சீனாவைப் பற்றி நான் உங்களிடம் பேச வேண்டியதில்லை?

  "வறியவன் அல்லது குரங்கு கையில் கிடைத்த அணிகலன்" போலத்[புறநானூறு 378] தமிழ்மொழி போகக்குடாது!!

  "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு"


  வா.செ.குழந்தைசாமியின் காணொளியைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.
  http://video.google.com/videoplay?docid=-8385206829230975052#

  ReplyDelete
  Replies
  1. தமிழ் சீர்திருத்தம் எனும் பெயரில் அதை சிதைக்க நினைக்கும் திராவிட , பிராமணிய , இந்திவாதிகள் அதிகம். தமிழர் இவ்வளவு காலம் ஏமாந்தது போதும் .இனி இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

   Delete
 3. மாண்புமிகு செல்வத்துரை அவர்களே, தமிழ் மொழிக்கு சீர்திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று நீங்கள் கூறுவது வரவேற்கத்தக்கது. எனது கருத்தும் அதுவே. திருத்தங்கள் கொண்டுவர நாம் தயங்கினால் தமிழின் தொடர்வளர்ச்சிக்கு தடங்கல் எற்படும். இதையெல்லாம் மனதில் கொண்டு நான் ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அது விரைவில் வெளிவரும். அதைப்பற்றி கீழ்வரும் link-ல். நீங்கள் பார்க்கலாம்.
  http://robert-b-grubh.blogspot.in/

  ReplyDelete