"தமிழ் புத்தாண்டு"[பகுதி:02]

இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல், தொல்காப்பியம்,ஆகும் இது கி.மு 300க்கும் முன்னால் எழுதப் பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது.அதில் திணைகளைப் பற்றி கூறப் பட்டுள்ளது.திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறி என்பதைக் குறிக்கும். ஒழுகுதல் என்பது நன்னெறிகளோடு வாழ்தல் - living in conformity with the laws and normal behaviour - ஆகும்.இந்த திணைகள்- முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் - நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு எனினும்,இது பொதுவாக மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.அடுத்து ஒவ்வொரு திணைக்கும் உரிய பொழுதுகள் கூறப்படுகின்றன. பொழுது என்பது காலக் கணக்கு.இன்று  ஓர் ஆண்டை நான்கு பருவங்களாகப் பகுக்கின்றனர்.அவை,கோடை, இலையுதிர், குளிர், வசந்தம்  - Summer, Autumn, Winter, Spring - என்ற நான்கு பருவங்கள் ஆகும்.எனவே, ஒவ்வொரு பருவத்துக்கும் மூன்று மாத காலம் உண்டு. நம் முன்னோர்களும் ஓர் ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், பனிக்காலம், வேனில்காலம் எனப் பகுத்தனர். ஆனால், தமிழகப் பகுதியில் கார்காலம் எனப்படும் மழைக்காலமும், கூதிர்காலம் எனப்படும் குளிர்காலமும் வெகுசில மாதங்களே நீடிக்க, பனிக்காலமும், வேனில் காலமும் நீண்ட காலம் தொடர்வதைக் கண்ட அவர்கள், பனிக்காலத்தை முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என இரண்டாகவும், வேனில்காலத்தை, இளவேனில் காலம், முதுவேனில் காலம் என இரண்டாகவும் பிரித்தனர். இந்த, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு காலங்களையும் பெரும் பொழுது எனக் கூறினர்.இவை ஆறும், ஆவணி தொடங்கி, ஒவ்வொன்றும் முறையே இரண்டு மாதங்கள் கொண்டவை ஆகும்.இனி தொல்காப்பியர் தொகுத்த திணை,பெரும் பொழுதை[காலத்தை] பார்ப்போம்.  
Thiruvathira: Thiruvathira Festival - Learn About Festivals in Kerala 
"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
காரும் மாலையும் முல்லை. 
குறிஞ்சி,கூதிர் யாமம் என்மனார் புலவர்." 

ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்![இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல - தமிழர் மரபு என்பது புரியும்.அதாவது,
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!
Image result for tamil culture and traditionsஎனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டுத் தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை?இது திணை வரிசை மட்டுமே!  ஆனால் இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆவணி, புரட்டாசி பொதுவாக கார்காலம் என்பர். ஆகவே, நச்சினார்க்கினியரின் உரையின் படி,கார்காலம் அல்லது சிங்க ஓரை(ஆவணி) முதல் மாதம் என்றும், திங்களுக்கு உரிய கடக ஓரை(ஆடி) இறுதி என்று நாம்  வெளிப்படையாக கருதலாம்?இங்கு தையும் இல்லை சித்திரையும் இல்லை என்பதை கவனிக்க.அதே போல,சோழப்பேரரசு காலத்தில், கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டு களில்,  உருவாக்கப் பட்ட, நிகண்டுகளிலும்[thesauruses], சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு போன்றவற்றில்  ஆவணியே முதல் தமிழ் மாதமாக கூறுகிறது.உதாரணமாக,' காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு  இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண் டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.' என்று திவாகர நிகண்டு பாடுகிறது.இப்பாடல் கார் முதலிய ஆறு பருவங்களையும் முதலில் குறிப்பிட்டு, பிறகு இப்பருவங்கட்கு உரியன வாக ஆவணி முதலாக இரண்டிரண்டு திங்கள்களாக எண்ணிச் சேர்த்துக் கொள்க-என்று கூறுகிறது.திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில்  இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க,தேவாரம் பாடும் பொழுது,முதல் பாட்டில், "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.",நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில்[ஆவணி/பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று தொடங்கி,"ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்"[ஐப்பசி ஓணம்],"தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்." [கார்த்திகை விளக்கீடு],என பாடி,...........,இறுதியாக "பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்." [பெருஞ்சாந்தி/நீர்முழுக்கு] என்று முடிக்கிறார்.இங்கும் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார்.குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திலும் இதையே நாம் கண்டோம் .எனவே, இங்கே கார்ப்பருவமாகிய ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக் கிறது என நாம் ஊகிக்கலாம்?  பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ? 
மேலும் எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தை திங்களும் தை நீராடலும்  கூறப்பட்டு இருக்கிறது ஆனால் எந்த ஒரு இடத்திலும் தை தான் வருடத்தின்[ஆண்டின் ] தொடக்கம் என  நேரடியாக எங்கும் கூறவில்லை? எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில்.....மிகச் சிறப்பாக /மிக அதிகமாகப் பேசப்படும் /போற்றப்படும் மாதமாக  = தை!  அல்லது "தைஇத் திங்கள்" இருக்கிறது.  
“வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........” ,
பனி பெய்து   நனைந்த முதுகுடன் நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது என்கிறது நற்றிணை :22
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்பெருந்தோள் குறுமகள்“ ,
தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல என்கிறது நற்றிணை :80
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்“ ,
தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய, குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும்'' என்கிறது குறுந்தொகை :196 

“தைஇத் திங்கள் தண்கயம் போல்கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்“ ,
தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ......கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்! என்கிறது  புறநானுறு :70 
“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்தைஇத் திங்கள் தண்கயம் போல“ ,
உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள்.ஏனென்றால், தைமாத நோன்பிருக்கும் மணம் பொருந்திய மலர்களையும் கூந்தலையும் கொண்ட மகளீர் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா?அப்படி உன்னுடைய மார்பு,பலபெண்கள் தோய்ந்து, துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா!  என்கிறது  ஐங்குறுநூறு :84
 "வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ  தையில் நீராடி தவம் தலைப் படுவையோ?” ,
நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ ? என்று கேட் கிறது கலித்தொகை :59:12-13 
"பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? ,
விளையாட்டுத்தனமான நோன்பாகிய சடங்குகள் நீ கடை பிடித்ததாலும், பிறர் மனையின்கண்ணே நீ பாடியதாலும்  பெற்ற பலன்  உனக்கு பயன் தருவதொன்றோ?என்று கேட் கிறது கலித்தொகை :59:16-17
‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ ,
தவம் செய்பவர் போலக் காணப்பட்டதாலும், தாய்மார் அருகில் நின்றதாலும், வையையில் நிகழ்ந்த மகளிர் ஆட்டம் தைந்நீராடல் போல் காணப்பட்டது என்கிறது பரிபாடல் :11;91-92.
அதே சங்கத் தமிழ் மரபில், பின்னால் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாதம்!
நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில் "திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக,விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து," [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம்.இது,திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு,விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும்.[தலை = முதல்! (தலையாய = முதன்மையான)].சூரியன் மேஷத்தில் புகுவது,சித்திரை மாதம் ஆகும். இங்கு,நக்கீரர் மேஷம்[ஆடு/Aries ] தான் முதல் என்று கூறுகிறார் .அதாவது  ராசி மண்டலத்துக்கு முதல்!"வீங்கு செலல் மண்டிலத்து" என்கிறார் .ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை ?மேலும் மேஷம் புகுவதே , "ஆண்டின் தொடக்கம் " என்பதற்கு என்ன ஆதாரம்?
சிலப்பதிகாரம், இந்திர விழா வைப் பற்றி கூறும் பொழுது,"நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க"- என சொல்கிறது.இது சித்திரை திங்களில்,அதாவது  இளவேனில் காலத்தில்[வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது.அவ்வளவுதான்.அது  காமவேள் விழா/ காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது .ஆனால்  அதைப் "புத்தாண்டு" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று  சொல்லவில்லை?  
Image result for மாட்டு வண்டில் போட்டிமேலும்,அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும்.....அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் ?

எனவே,தமிழ்ப் புத்தாண்டு நாள்  பண்டை இலக்கியங்களில் கிடையாது! அவை பிற் கால சேர்க்கையே .அதனால் தான் அவை பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படவில்லை போலும்.

எப்படி ஆயினும்,பல வருடங்களாக  வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மற்றும்  பிற இடங்களிலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.  வீட்டு வாசலில் கோலம் போட்டு விருந்து படைத்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
சூரியன் மேட வீட்டிற்கு [மேஷ ராசிக்கு/இளவேனில் கால தொடக்கத்தை ]போவதை, இந்து மாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட தமிழர்கள் தமது புதுவருட ஆரம்பமாக கருதுகிறார்கள்.இது தமிழ் மாதம் சித்திரை தொடக்கத்தில் நிகழ்கிறது. 
சாத்தனார் என்பவர் ஆக்கிய, கூத்துக் கலை பற்றிய இலக்கண நூலான,முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டை சேர்ந்த,  கூத்த நூல், ஒவ் ஒரு மாதத்துடனும் தொடர்புடைய மேகங்களை விபரிக்கும் பொழுது,ஒரு வருடத்தில் உள்ள மாதங்களை  ,வரிசை முறை படி சித்திரை திங்கள் தொடக்கி  பங்குனி திங்கள் முடியும் வரை கூறுகிறார் .அவ்வளவு தான்.எந்த இடத்திலும் இது ஆண்டின் தொடக்கம் என கூறவில்லை? 
கை விஷேடத்துடன் ,இலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை ,சித்திரை ஒன்றில் கொண்டாடுகிறார்கள்."எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம்(கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம்  நிலத்தைக் முதலாவதாக கிளறிப் புது பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மற்றும் நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் "மருத்து நீர்" தேய்த்து குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள்.போர்த் தேங்காய் உடைத்தாலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்ட்டத்தை மெருகேற்றும்.அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடை பெரும். என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ ,சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

Image result for tamil new year celebrations paintingsபொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது.சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால்,ஏன் "சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்" என வழக்கில் இல்லாமல் இருக்கிறது?இது ஜோசிக்க வேண்டிய ஒன்று? 
பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும், ஆடி முதல் மார்கழி வரை தென்செலவு மாகும். அந்த வகையில், கதிரவன் வட செலவைத் [பயணம்]  தையில் தான் தொடங்குகிறது.மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள்.அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது. எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஆடியில் இருக்க வேண்டும் ,அல்லது தையில் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா?எப்படி ஆயினும் இன்று நாம் புது வருடத்தை கொண்டாடுவோம் .உங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்! tamil newyear

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முடிவுற்றது

0 comments:

Post a Comment