ஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது



லச்சுமி, அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று, திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண உடுப்புக்களை எல்லாம் வாயைப் பிளந்தவண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன் சட்டையில்  உள்ள கறைகள், கசங்கல்களை மறைக்க முடியாவிட்டாலும் , தெரியக்கூடிய பெரிய கிழிசல் பொத்தல்களை இடைக்கிடை பார்த்து சுருக்கி மறைத்துக் கொள்கிறாள். மூன்று, நாலு வருடங்களாய் அதுதான் அவள் உடம்பை மூடி மறைத்து வைத்துக்கொண்டு இருக்கிறது.

திடீரெனெத் தன்னை நோக்கி வந்துகொண்டிக்கும், அம்மாள் போல நகை எல்லாம் சாத்தி, அலங்காரம் செய்து, மினுக்கு, மினுக்குச் சீலை உடுத்திருக்கும் ஓர் அக்கா- இல்லை அம்மா வயசுப் பெண்ணை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவரின் உடம்பை ஒருமுறை பார்த்து முடிக்கேவே கழுத்து நொந்து போய்விட்ட்து. சுற்றி பார்க்க வேண்டும் என்றால் வழிகாட்டியுடன் விமானப் பயணம்தான் செய்யவேண்டி இருக்கும்.

**
அமுதா, 25 வருடத்துக்கு முன் வெளிநாடு சென்றவர். இப்போது அங்கு குடும்பத்தோடு ஓஹோ என்று இருக்கிறார்.  வெளி நாடுகளில்,  தான் ஒருமுறை உடுத்த சேலைகளை திரும்பவும் உடுத்து மரியாதை கெடாமல், ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்கு வரும்போது உடுத்த (பழைய) சேலைகள் எல்லாவற்றையும் இங்கு கொண்டுவந்து உறவினர்களுக்குத் தானமாக வழங்குவார்.

"பழைசுகளைக் கொண்டுவந்து பிச்சை போட்டுவிட்டுப் போறாள்" என்று ஒரு நெருங்கிய சிலர் கதைத்தது கேள்விப்பட்டதில் இருந்து சரியான கோபம், இன்னும் அவரின் நெஞ்சுக்குள் ஆத்திரம் கனமாய் பதிந்திருக்கு.

"நன்றி கெட்ட சனம்; கொழுப்புப் பிடிச்சு திரியுதுகள். பாவங்கள் எண்டு  பரிதாபம் பார்த்தால்.........இனிமேல் உதுகளுக்குக் குடுக்கிறதிலும் பார்க்க உண்மையாய்க் கஷ்டப் படுகிறதுகளுக்குத்தான் கொடுக்கிறது"

இது அவர் இந்த வருடம் எடுத்த முடிவு..

**
"இந்தா இது உனக்குத் தான்; உன்ரை அம்மாவிட்டைக்  குடு".

அரைவாசி சேலை வெளியே நாலு பேருக்குத் தெரியக்கூடியதாக வைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டுக்குப் பையை அவளின் கையில் திணித்தார்.

சுற்றி நிற்பவர்களை பார்க்காமல், ஒரு நிழல் பார்வையை  மட்டும் சுழல விட்டு முணு, முணுத்தார்;

"'பார்த்துப் பொறாமைப் படட்டும்"

தான், ஏழைகளின் பங்காளி என்று காட்டிட லச்சுமியின் தலையைத் தடவி,

"இது நாற்பதாயிம் ரூவாச் சீலை; ஒருக்காத்தான் உடுத்தது; இப்ப வித்தாலும் இருவதாயிரம்  ரூவாய்க்கு விக்கலாம்"

லட்சுமிக்கு இந்த இலக்கங்கள் என்னனென்று புரியவே இல்லை.
"இருவதாயிரம் .....எண்டால்?"

அவளுக்கு தான் உண்ணும் உணவையும், போட்டிருக்கும் சட்டையையும் தவிர வேறு ஒன்றும் புரியாது.

"இருவாதியிரம் ரூவாய் எண்டால் எத்தினை சட்டை  வேண்டலாம்?"

"... ... ; நிறைய வேண்டலாம்"

"எத்தினை?"

"அது விலையைப் பொறுத்தது"

"என்ரை இந்தச் சட்டை போலை எத்தினை?"

அமுதாவுக்குக் குப்பென்று சிரிப்பு வந்தது; அதையும் ஒரு சட்டை என்று சொல்லுகின்றாள் என்று. சிரிப்பை அடக்கிக்கொண்டு,

"உந்தச் சட்டை என்ன விலை?"

"இருவது ரூவாய்க்கு வேண்டியது எண்டு அம்மா சொன்னவா"

அமுதா இப்போது சிரித்தே விட்டார்.

"'அப்பிடி எண்டால் ஒரு ஆயிரம் பேருக்கு"

"ஆயிரம்.....?" லச்சுமிக்கு அது என்ன தொகை என்று புரியவில்லை. 

இவளுக்கு பெரிய இலக்கங்களில் சொன்னால் ஒன்றும் விளங்காது என்று அறிந்த அமுதா,

" இஞ்சை பார்; இந்தக் கோயில்லை வீதி முழுக்க, கோயிலுக்கு உள்ளுக்கை இருக்கற எல்லா ஆட்களுக்கும் ஒவ்வொரு சட்டை வேண்டலாம்"

"உவ்வளவு பேருக்குமா?" - வாயைத்திறந்த லச்சுமி ஒரு கணம் சிலையாய் நின்றுவிடடாள். அதன் பெறுமதியை உணர்ந்த அவள் சேலையை கொஞ்சம் இறுக்கமாக நெஞ்சொடு இறுக்கிக் கொண்டாள்.

அமுதா, ஒருவரையும் நிமிர்ந்து பாராது, தன்னுடை இன்னொரு சேலைய கொடுப்பதற்காக வீதியின் அடுத்த மூலைக்குப் பயணமானார். ஒவ்வொரு நாளிலும் இரண்டு சேலை தானம் வழங்க ஆயத்தமாய் வந்தவர்.

லச்சுமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வீட்டை  நோக்கி நடக்கலானாள். முடிவு செய்து போட்டாள்; முதலில் இதை தன் குறிச்சியில் இருக்கும் யாருக்காவது விற்றுப்போட வேண்டும் என்று.

கற்பனை உலகத்தில் பல, பல திட்டங்கள் உருவாகின.

"முதல்ல எனக்கும், அண்ணாவுக்கும் ரெண்டு; இல்லை, இல்லை  மூண்டு, மூண்டு சட்டையள் வேண்ட வேணும்; அம்மா பாவம் ஒரு ஐஞ்சு உடுப்பெண்டாலும் கட்டாயம் வேண்ட வேணும்; குட்டி வரதன் சடடையே போடுறேல்லை; இப்ப தேவை இல்லை. அப்பா இருந்தால் வேண்டிக் கொடுத்திருக்கலாம்; அவர்தான் வரதன் பிறந்ததோட செத்துப்போனாரே. எண்டாலும் ஒண்டை வேண்டி, அவர் படத்துக்கு முன்னால்  வைக்க வேணும்...."

"பிறகு, என்னோடை சுப்பர் வளவிலை விளையாட வாற குமி, சவிதா, குப்பு, கவி, வித்தி, கண்ணன், பாமினி, கட்டச்சி, பிரேமலதா, பொக்கிள், லலி எல்லாருக்கும் ஒவ்வொரு சட்டை வேண்டி குடுக்க வேணும். அந்த வேணி எனக்கு எப்பவும் நுள்ளுறவள்; குடுக்கப் படாது; ஆனாக் குடுக்காட்டில் அழுவள்; சரி பாவம் ஒண்டை வேண்டி கொடுப்போம். சரி, எப்பிடிப் பாத்தாலும் வேப்பமரத்துக்கு கீழை இருந்த ஆக்கள் அளவுதானே வந்தது. மிச்சத்தை என்ன செய்வது....?; பிறகு பார்ப்போம்"

வானத்தில் மிதந்து வந்தாளோ என்னவோ மிகவும் கெதியாகவே தனது குடில் பகுதியை வந்தடைந்தாள்.

"முதல்ல  கனகக்காவிட்டைத்தான் கேக்க வேணும்; மணியண்ணைதான் ஊரிலையே பெரீய வேலை செய்யிறவர். பெரியசாமி ஐயா வீட்டிலை வீட்டு வேலைக்குப் போய் வாறவர்"

ஆயிரங்கள் என்றாலே என்னவென்று புரியாத ஒரு சிறு ஜென்மம் ஏதோ சுண்டக்காய் விற்க்குமாப்போல வியாபாரம் செய்யப் புறப்பட்டு விட்டா!

"கனகக்கா!"

திரும்பவும் கூப்பிடத் தேவையும் இல்லை; அனுமதி எதிர்பார்த்து நிற்கவும் தேவை இல்லை. நேராக உள்ளேயே போய் விட்டாள்.

லெச்சுமியைக் கண்ட கனகா,

"என்ன லச்சுமி அம்மா என்னவும் சொல்லக் சொன்னவாவே? உது என்ன கையிலை  சாமான்?"

"ஒண்டும் இல்லை அக்கா; இந்தச் சீலை எனக்கு கோயில்லை கிடைச்சது; நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; இருபதாயிரம் ரூவாய் எண்டு சொன்னவா; அதுதான் நீங்கள் இதை வேண்டுவியளோ எண்டு கேக்கத்தான்......"

ஒரு நூறு ரூபாவையே கண்ணால் கண்டாளோ என்னவோ ஆயிரங்கள் பற்றி பேசுகின்றாள்.

தன்னை இவ்வளவுக்கு இவள் பணக்காரியாய் நினைத்து வைத்திருக்கிறாள் என்று கனகா ஆச்சரியப் பட்டாள். எல்லோருக்கும் மகா கஞ்சன் என்று தெரிந்த ஒருவரிடம், ஒரு நாள் முழுக்க வேலை செய்துவிட்டுக் கொண்டுவரும் பணத்தில் எதோ ஒரு அளவுக்கு வயிற்றை நிரப்பிக் கொண்டு இருப்பது அவளுக்கு எப்படித் தெரிய வரும்?. எதற்கும் அவளை எடுத்தெறிந்து பேசாது,

"லச்சுமி இது என்னால வேண்ட முடியாது; வேறை ஆரையனையும் கேட்டுப் பாரேன்"

லச்சுமி ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

"விலையை குறைச்சு சொல்லிப் பார்" - கனகா அறிவுறுத்தினாள்.

லச்சுமி திரும்பித் தலையை ஆட்டி விட்டு அடுத்த குடிசையை நோக்கிப் போனாள்.

வாசலில் சைக்கிள் கடை தருமன் நல்ல தூக்கம். அவரை விலத்தி வீட்டுக்குள் சென்று, எரியாத அடுப்பையே பார்த்து கொண்டிருக்கும் பூமணியின் முன்னே நின்றாள். அவளைக் கண்ட பூமணி,

"என்ன லச்சுமி, இந்தப் பக்கம்?"

"இல்லை அக்கா, இந்தச் சீலையை நீங்கள் வேண்டுவியளோ.....?" தயக்கத்துடன் கேட்டாள்.

"சீலை வேண்டிற நிலையிலையே நான் இருக்கிறன்; என்ன விலையாம்?" எதற்கும் கேட்டு வைத்தாள்.

"இந்தச் சீலை எனக்கு கோயில்லை கிடைச்சது; நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; இருபதாயிரம் ரூவாய் எண்டு சொன்னவை; ஆனால் பத்தாயிரம் தந்தாலே போதும்"

தன்னை ஒரு பிரபல தொழில் ஸ்தாபன அதிபர் மனைவி என்று நினைக்கின்றாள் என்று சங்கடம் கொண்டாள். என்ன அந்தக் குறிச்சிக்குள் இருக்கும் ஓர் ஐம்பது சைக்கிளில் ஏதாவது இன்றைக்குப் பழுதாகாதோ என்று பார்த்து, தூங்கிக் கொண்டு இருப்பவரின் மனைவி அவர்.

"அய்யோ லச்சுமி, அவ்வளவு காசு இருந்தால் ஒரு பெட்டிக் கடை போடமாட்டோமே, இப்படி ஏன் நாங்கள் கஷடப்பட  வேணும்? அவர் பேசுவர். நீ வேறை எங்கையும் கேளன்"

அட, இதுவும் தோல்வியாய்ப் போய் விட்டது என்று கவலை கொண்டாலும் மிச்சக் காசில் என்ன செய்யலாம் என்று யோசனை கிடைத்து விட்டது.

"பெட்டிக் கடை ஒன்று போடலாம்".

பாவம், அவளின் அம்மா வரதனையும் தூக்கிக்கொண்டு வயல், வயலாய்த் திரிந்து புல்லு, கீரை என்று பிடிங்கி, விற்று எவ்வளவு கஷ்டப் படுகின்றா. வீட்டில் ஒரு கறள் பிடித்த பழைய சிங்கர் தையல் மெஷின் இருக்கின்றது  இப்போது யார்தான் தைக்க வருகின்றார்கள்? எப்பாவது, யாராவது கையால் தைக்க முடியாத பொத்தல்களை சீர் செய்யக் கொண்டு வந்தால் ஒரு சிறிய தொகை கிடைக்கும்.

லச்சுமி சளைக்கவில்லை.

"சோதி அக்காவீடடையும் கேட்டுப் பார்ப்போம்; அண்ணை அடிக்கடி டவுனுக்குப் போய் உழைக்கிறவர்"

அவர் வீட்டுக்குள் நுழைந்து,

"சோதி அக்கா, சோதி அக்கா; உள்ளுக்கு இருக்கிறீயளே?"

சோதி வந்தபடியே,
"என்ன, லச்சுமியே? என்ன விஷயம்?"

லச்சுமி தயக்கத்துடன்,
"இல்லை அக்கா; இந்தச் சீலை எனக்கு கோயில்லை கிடைச்சது; நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; இருபதாயிரம் ரூவாய் எண்டு சொன்னவா; பத்தாயிரம் சொன்னன்னான்; இப்ப ஐன்சாயிரம் எண்டாலும் போதும்; வேண்டுவியளோ அக்கா?"

சோதிக்கு ஜோசித்தே பார்க்க முடியாத இந்தத் தொகையை சொன்ன லச்சுமியின் அப்பாவித்தனத்தை நினைத்து சங்கடமுற்று,

"நீ ஒரு பக்கம்; இந்த ஒழுகிற கூரையைத் திருத்த கொஞ்சம் கிடுகு வேண்ட ஒரு ஐந்நூறு இல்லாமல் இருக்கிறம்; நீ ஐன்சாயிரம் கதைக்கிறாய். வேறை எங்கையும் கேளன்.இந்தமாரி விலையில பெரிய சாமி ஐயா குடும்பம்தான் வேண்ட முடியும்"

அந்தப் பெரிய சாமியை நினைத்தாலே அவளுக்குப் பயம். ஊரிலேயே ஒரு மாதிரிப் பிறப்பு. எதற்கும் இன்னும் சில வீடுகளைக் கேட்டுப் பார்ப்போம் என்று புறப்பட்டாள். என்றாலும் மிஞ்சும் காசில் என்னசெய்யலாம் என்று தெரிந்து விட்டது.

"ஒழுகுகிற வீட்டுக்கு ஓலை வேண்டலாம்!"

மேலும் ஒழுங்கையில் இருக்கும் ஓரளவுக்கு வசதியான 'வீடு'கள் எல்லாம் 'ஏறி', 'இறங்கி', விலையையும் நாலு, மூன்று, இரண்டு என்று என்று குறைத்தும் சரி வரவில்லை. களைத்துப் போய் விட்டாள்.  ஊரின் எல்லைக்கே வந்து விட்டாள்.

திடீரென எதிரே பெரிய சாமி அய்யாவின் மகள் பூஜா புதுச் சைக்கிளில்
பள்ளிக்கூடத்தில் இருந்து வந்து கொண்டு இருந்தாள். பெரிய படிப்பு படிக்கின்றாள்; ஆறாம் வகுப்பு. எதற்கும் இவளையும்  கேட்டால்  என்ன என்று யோசிக்க முன்பேயே கைய நீட்டி மறித்தாள்.

"இது என்ன என்னை மறிக்கிது?" ஆச்சரியத்துடன் நிற்பாட்டினாள். இவர்களுக்கு இவள்கள் எல்லாம் இதுகள் தான்.

"அக்கா. அக்கா ஒரு நல்ல சீலை உங்கட அம்மாவுக்குத்தான் சரி; நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; இருபதாயிரம் ரூவாய் எண்டு சொன்னவை; அதுதான் நீங்கள் இதை வேண்டுவியளோ எண்டு கேக்கத்தான்......"

பெரிய இடம்; திட்டம் இட்டு விலையை மேலே இருந்து தொடங்கினாள். சிலவேளை க்ளிக் பண்ணும்.

பூஜா சீலையை வேண்டிப் பார்த்தாள்; நல்லாய்த் தான் அம்மாவுக்கு இருக்கும். எப்படியும் இதை வேண்டிப் போடவேண்டும் என்று நினைத்து,

'"இது அவ்வளவு நல்லதில்லை; அவ்வளவு விலை எண்டு ஆரோ பொய் சொல்லிப் போட்டினம். எங்களுக்கு வேண்டாம்"

"அக்கா, அக்கா சரி விலையைக் குறைச்செண்டாலும்  உங்கட அம்மாவுக்கு வேன்டுங்கோவன்; அவவுக்கு வடிவாய் இருக்கும்"

கொஞ்சம் விட்டுப் பிடிக்க, பூஜா
"வேண்டாம், என்னை விடு"

"இல்லை அக்கா உங்களிட்டை எவ்வளவு இருக்கு; தந்து வேண்டிக் கொண்டு போங்கோவன்"

ஏதோ ஆயிரங்கள் என்றால் சடடைப் பைக்குனுள் வைத்துகொன்டு திரியும் அளவுக்கு என்று அவளின் நினைவு.

இது வழிக்கு வந்துவிட்ட்து என்று உணர்ந்து,
"சரி பின்னேரம் வீடடை வா; அம்மாவிட்டைச் சொல்லி வேண்ட சொல்லுறன்"

'அப்பாடா' என்ற பெரும் நிம்மதியோடு லச்சுமி,

"சரி அக்கா; மெத்த நன்றி"

பூஜா மீண்டு உறுதி படுத்தினாள்,
"'இஞ்சை, உது வெறும் பிழையான விலை; உது வெறும் மலிஞ்ச  சீலை, குறையத்தான் தருவம்''

'சரி அக்கா'

லச்சுமிக்கு கொஞ்ச நிம்மதி; எதோ கொஞ்ச விலைக்கு என்றாலும் விற்கக் கூடியதாய் வந்துவிட்டதே என்று சந்தோசப் பட்டாள். அந்த கொஞ்ச விலை வெறும் நாற்பது ரூபாய்தான் பூஜாவின் திட்டம் என்று அந்த அப்பாவி மனசுக்கு எப்படித் தெரியும்?  புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?

அப்படியே தொடர்ந்து சென்றவள் முடிவில் பெரிய தெருவுக்கு வந்துவிடடாள். அது தெருவில் எப்போவாவது ஒரு சில கார்கள் வரும், போகும். அப்போதும் திடீரென ஒரு காரை நிறுத்தி ஓர் அம்மாவும், இரு பெண் பிள்ளைகளும் இறங்கி இவளை நோக்கி வந்தனர். பளிச்சென்று ஒரு மகிழ்ச்சி; இவர்கள்தான் தனது சீலையை வேண்டப்போகிறார்களோ என்று ஒரு சந்தோசம்.

ஆனால், வந்தவர்கள் இந்த ஒழுங்கை எந்த ஊருக்குப் போகின்றது என்று கேட்டு அறிந்துவிட்டுத் திரும்ப வெளிக்கிடவே, லச்சுமி தாமதியாது,

"அம்மா...."

அவர்கள் கேள்விக்குறியுடன் திரும்பவே, லச்சுமி,
"அம்மா, இது நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; இருபதாயிரம் ரூவாய் எண்டு சொன்னவை; அதுதான் நீங்கள் இதை வேண்டுவியளோ எண்டு கேக்கத்தான்......"

அவர்கள் சற்று வந்து தொட்டுப் பார்த்து,
"களவெடுத்த சீலை ஒருத்தரும் வேண்டமாட்டினம்; வேணுமெண்டால் ஒரு பத்து ரூவாய் தாறோம், தந்துவிட்டுப் போ"

லச்சுமி தலையை ஆட்டினாள்.

"ஒரு இருவது ரூவா?"

லச்சுமி முறைச்சுப் பார்க்க,
"ஒரு முப்பது? ஐம்பது?" - சலனம் இல்லை.

"கடைசி விலை நூறு" -  மீண்டும் இல்லை.

;நீயே வைச்சிரு' என்று கூறி வீட்டுக் காரினுள் ஏறினர்.

காரை எடுத்துச் சில தூரம் போய் நிறுத்தி,
"இஞ்சை பிள்ளை, அதுக்கு இதுக்கு மேலே தர ஏலாது; உன்னைப் பாக்காப் பாவமாய் இருக்கு; இருநூறுதான் கடைசி விலை" - லச்சுமி அசையவில்லை.

பின்னர் காரை முன்னே கொண்டு சென்று, பின்னே திரும்பி,
"'முன்னூறு சரியோ" என்றும் கேட்க, லச்சுமி மசியவில்லை.

பின்னர் காரை ஓடிக்கொண்டே சும்மா "ஐந்நூறு" என்று சொல்லிக்கொண்டு சென்றுவிட்ட்னர்.

இவர்கள் நல்லாய் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று லச்சுமிக்குத் நன்றாகத் தெரிந்து விட்டது.

"வேண்டாம் விடுங்கோ; எனக்கு வேறை ஆக்கள் இருக்கினம், இதை வேண்ட"
என்று சத்தம் போட்டுச் சொன்னாள்.

நல்ல காலம், ஏற்கனவே பூஜாவின் வாக்குறுதி இருப்பதால் நிம்மதி அடைந்தாள். பெரிய சாமி ஐயா வீடுதான் ஒரே கதி என்று தன் குடிசையை நோக்கி நடக்கலானாள்.

வீட்டினுள் அம்மா இன்னும் வயலுக்கால் வரவில்லை. பசி எடுத்ததால் வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தாள். வியாபார விடயமாக அலைந்து திரிந்தால் ஒரே களைப்பு. தூக்கம் வரவே ஒரு பாயில் படுத்துக்க கொண்டாள், தனது சீலைப் பையையும் மழைக்கு நனையாமல் பாய்க்கு கீழே வைத்து விட்டு,

"எழும்பியவுடன் பெரிய சாமி அம்மா வீட்டை போக வேணும், அம்மாவும் வந்தால் காசை எண்ண வசதியாய் இருக்கும். கட்டாயம் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போக வேணும்"

அடித்துப் போட்டது  போல தூங்கிவிட்டாள்.

**
மாலையில் துடித்து விழித்தவுடன் முக்கிய வேலை இருப்பதை அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று பாய்க்கு கீழே வைத்த சீலைப் பையை எடுக்கப் பார்த்தால் அதை காணவில்லை. பாயை சுருட்டி எடுத்து உதறித் தேடியும் காணவில்லை.

"அம்மாவைக் கேப்போம், எடுத்திருப்பா"

"அம்மா, அம்மா"

"என்ன லச்சுமி  எழும்பிவிட்டியோ? வா, சாப்பிட"

"அம்மா, இதிலை வைச்ச பை எங்கையம்மா?''

'என்ன பை, அதுவே, நான் தான் எடுத்தனான், நல்ல பிள்ளை; சீலை ஒண்டு  இல்லாமல் இருந்தான் கொண்டுவந்து விட்டாய், எங்கை கிடைச்சது?"

"கோயில்ல ஒரு அம்மா தந்தவா, எடுத்துக் கொண்டு பெரிய சாமி அம்மா வீட்டுக்குப் போவோம்"

"ஏன் இப்ப அதை அங்கை கொண்டு போக வேணும் என்று சொல்லுறாய்?"?"

"இது நாற்பதாயிரம் ரூவாய்ச் சீலை; ஒருக்காத்தான் உடுத்தது, இப்ப இருபதாயிரம் ரூவாய்க்கு விக்கலாம் எண்டு அவா சொன்னவா. நான் பூஜா அக்கா விட்டை கேக்க, அவா அம்மா வேண்டுவா;  வீட்டை கொண்டு வா எண்டு சொன்னவா"

அம்மா முழித்துக்கொண்டு இருந்தார்.

" அம்மா, வாற காசிலை எல்லாருக்கும் நாலைஞ்சு சட்டையள் தைச்சு, வீட்டையும் திருத்தி, ஒரு பெட்டி கடையும் போடலாம் எண்டு  சொன்னவை"

அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. நிசப்தமாய் நின்றார்.

"'கெதியாய் வாவன் அம்மா போவோம்; பூஜாக்கா வரச் சொன்னவா. பிந்திப் போனால் விக்க முடியாம போயிடும்"

மீண்டும் நிசப்தம்.என்ன சொல்லலாம் இவளுக்கு என்று சிலையாய் நின்றார்.

"என்ன, போவேமே அம்மா?"

அம்மா சுதாகரித்துக் கொண்டு,
"அந்த வீட்டிலை ஒருக்காவும் உதை வேண்ட மாட்டினம்"

"வேண்டுவினம் எண்டு சொல்லினவா அம்மா"

"வேண்டுவினம்; ஆனால் காசு தரமாட்டினம் லச்சுமி, என்ரை கீரைக் காசே வடிவாய் இன்னும் அவை தரேல்லை"

"எதுக்கும் வரதனையும்  தூக்கிக் கொண்டு போயிட்டு வருவோம்" என்று அவனைத் தூக்கப் போனவள் மின்சாரம் தாக்கியவள் போல் திகைத்து நின்றாள்,

சாணைச் சீலைகளாகக் கிழிக்கப்பட்டிருக்கும் புத்தம், புது  துண்டுகளின் நடுவில், ஆயிரம் ரூபா பெறுமதியான கண் கவர் ஜட்டியும் கம்பீரமாக அணிந்து கொண்டு, தன பிஞ்சுக் கால்களையும் கைகளையும் மேலும் கீழும் அடித்தபடி, புதிய உடை தனக்கு கிடைத்த மகிழ்ச்சியால் 'பா...ப். பா.. ப்.. தாத் ...தாத்.. ' என்று லச்சுமிக்கு  நன்றி கூறி, தன் பொக்கை வாயால் சிரித்து வரவேற்றான் வரதன்.

"அம்மா..." கதறினாள் லச்சுமி.

."நான் தான் கிழிச்சது. உனக்கும் அண்ணாவுக்கு சட்டை தைக்கவும் பிறிம்பாய்க் கிழிச்சு வைச்சிருக்கிறன்; பிறகு தைச்சுத் தாறன்"

"இல்லை அம்மா, கிழிக்காமல் நீயே உடுத்திருக்கலாம் தானே?"

"லச்சுமி, இதை நான் எங்கை உடுக்கலாம்? வயலுக்குப் போற எனக்கு இதை என்னத்துக்கு? இப்ப பிள்ளைக்கும் பழந்துணி தேவை; அதுக்குத்தான் எடுத்தனான்"

அம்மாவின் உடனடித் தேவையாவது பூர்த்தியானதே என்ற நிம்மதியில்  அவவைக்  கட்டிப் பிடித்துத் தேம்பி அழுதாள் லச்சுமி.

✍✍✍✍✍ ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்✍✍✍✍✍ 

0 comments:

Post a Comment