மாலைக் காற்று மெதுவாய் வீச



"மாலைக் காற்று மெதுவாய் வீச
மார்பு நிறைய அன்பு ஏந்தி
மாண்ட வாழ்வை திருப்பி தர
மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே !"

"பாடும் குயில்கள் பறந்து செல்ல
பாதை நிறைய பாசம் விதைத்து
பாலைவனத்தை சோலை வானம் ஆக்கி
பாடல் ஒன்றை நட்பில் பாடியவளே !"

"வெண் புறா மாடத்தில்  பதுங்க
வெண்நிலா புன் முறுவல் பூக்க
வெற்றி மகளாய் இதயத்தில் பதுங்கி
வெறுமை நீக்கி உத்வேகம் தந்தவளே !"

"வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய்
வாசமிகு மலராய் பாசமிகு உறவாய்
வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து
வாழ வைக்க தன்னையே தந்தவளே !"

"மகரந்த தூளைச் சுமந்து கொண்டு
மனதை மயக்கும் வாசனை உடன்
மழைக் கால காற்றாய் உறவாடி
மகத்தான காதல் சொல்லி தந்தவளே !"

"மல்லிகையை உரசும்  மாலைக் காற்றாய்
மனங்களை வசப்படுத்தும் தென்றல் காற்றாய்
மஞ்சத்தில் கொஞ்சிடும் கூதல் காற்றாய்
மனதை நெருடி மகிழ்ச்சி தந்தவளே !"

"நாதமுனி தந்த திவ்யப்பிரபந்த ஆண்டாளாக
நாணத்தை விட்டு எனக்கு வழிசொல்லாயோ
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நாதமாய் காற்றில் என்னுடன் கலந்துவிடம்மா!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments: