"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"

 

[ஒரு குழந்தைப்  பாட்டு]

 


"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது

காலை வேளையில் வடை சுடுறாள்

காத்து இருக்குது பூவரசம் வேலியில்

கானா பாட்டுப்  பாடி ஆடுறாள்  !"


"கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது

காரிருளில் இரு கண்கள் மிளுருது

காரை கொஞ்சம் விரைவா செலுத்து

காத தூரம் போக வேண்டும்  !"

 

"கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது

காடை கோழி எட்டிப்  பார்க்குது

காளான் பூஞ்சையை கொத்திச்  சாப்பிடுது

காட்டுப் பக்கம் அறுந்து போகுது  !"

 

"கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது

காங்கேயம் காளை துள்ளி வருகுது

காவற் கடவுளைக்  கூவிக்  கூப்பிடு

கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்  !"

 

"கார்த்திக் கார்த்திக் பிறந்தநாள் இன்று

காலம் போனது எமக்கு புரியலை ?

காய் பழங்கள் துள்ளிப்  பிடுங்கிறாய்

காலால் பாய்ந்து ஒலிம்பிக் பார்க்கிறாய் !"

 


"கார்த்திக் கார்த்திக் தாத்தாவின் பாராட்டு

காதோரம் சொல்லும் அகவை வாழ்த்து

காற்று வெளியில் பறந்து வருவேன்

கார்த்திக் குட்டியைத்  தூக்கவருவேன் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. மனுவேந்தன்Monday, August 23, 2021

    ஒரு குழந்தைப் பாடல் மூலம் எமது முன்னைய சுற்றாடலை அழகாக வர்ணித்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்

    ReplyDelete