திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../03/

 

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

 

வெண்பா:11

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், தெளியாதான்

கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்

ஊர் எலாம் நோவது உடைத்து.         

 

விளக்கம்:அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும் சொற்களும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், இம்மூன்றும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.

 

வெண்பா:12

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;

கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்

கேள் ஆக வாழ்தல் இனிது.    

 

விளக்கம்:முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

 

வெண்பா:13

சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்

குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி

மாண்ட குணத்தான் தவசி; - என மூவர்

யாண்டும் பெறற்கு அரியார்.  

 

விளக்கம்:பிறர் குணம் அறிந்து நடக்கும் உறவினன், குடிகளைக் காக்கும் அரசன், சிறந்த துறவி இம்மூவரும் பெறுதற்கு அரியர் ஆவார்

 

வெண்பா:14

இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை

சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்

செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும்

குறுகார், அறிவுடையார்.         

 

விளக்கம்:இளமையில் தவறு செய்வது இயல்பு என்றாலும் தவறாகும். அறிவுடையோரால் விலக்கப்பட்டதைச் சொல்லுதல் அறியாமை. எப்போதும் சினத்தோடு நிற்றல் ஈனத்தன்மையாகும். இவற்றைக் கொண்டவரிடம் அறிவுடையார் நட்பு கொள்ளமாட்டார்.

 

வெண்பா:15

பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து

தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்

ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர்

நட்கப் படாஅதவர்.       

 

விளக்கம்:பொய் பேசி வாழும் செல்வந்தன், தனக்கு மேலானவன் தாழ்ந்த போது போற்றாதவன், விதியால் நண்பன் துன்பப்படும்போது பயனை எதிர் பார்ப்பவன், இம்மூவரும் யாராலும் நட்பு கொள்ளத் தகாதவராவார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூவர், திரிகடுகம், என்பான், நட்பு, கீழ்க்கணக்கு, பதினெண், அறிவுடையார், சொல்லுதல், பொய், வாழும், இம்மூவரும், பிறர், சங்க, மூன்றும், அரசன், யாண்டும்

0 comments:

Post a Comment