நினைவாற்றல் இழப்பு/ பகுதி: 02

  [memory loss] -தொடர்கிறது 


நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி பொதுவாக மூப்படைவதால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றே கூறலாம். உதாரணமாக, மக்கள் முதுமையடைய அல்லது வயது போக, அவர்களின் உடலிலும், மூளை உட்பட,  அதற்கு ஏற்ற மாற்றங்கள் தென்படுகின்றன. எனவே புது விடயங்களை படிக்க அல்லது உள்வாங்க சிலருக்கு, முன்னையதை விட கூடுதலான நேரம் எடுக்கலாம். மேலும் சில முன்னைய தரவுகளை, செய்திகளை அல்லது தாம் செய்ததை மறந்து விடலாம். உதாரணமாக எங்கே மூக்கு கண்ணாடி வைத்தது என்று அல்லது அது போன்ற அன்றாட செயல்களை. இது பொதுவான மறதியாகும். இதை  அல்சீமர் நோய் [முதுமறதி / Alzheimer's disease] உடன் குழப்ப வேண்டாம்.

 

அல்சைமர் [முதுமறதி] என்பது மூளையை பாதிக்கும் ஒரு வகை மூளை நோயாகும். இந்த நோய் முதியவர்களிடயே பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபக சக்தி குறைகிறது மற்றும் மிகவும் பலவீனமான நினைவகத்தை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. அல்சைமர் என்பது ஒரு வகை டிமென்ஷியா [மறதி நோய் / dementia] ஆகும்,

 

நடுத்தர வயது உள்ளோர், தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் நினைவாற்றல் இழப்பிற்கு பொதுவாக உள்ளாகிறார்கள். இதை தடுக்க உத்தரவாதமான வழி என்று ஒன்றும் இல்லை என்றாலும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன வழிமுறைகள் கையாளவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் பட்டியல் இட்டு உள்ளார்கள். அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்

 

 

(1) உடற் பயிற்சி அல்லது உடலால் வேலைகள் செய்தல், இரத்த ஒட்டத்தை முழு உடலுக்கும், உதாரணமாக மூளைக்கும் சேர்த்து  அதிகரிக்கிறது. இது உங்க நினைவாற்றலை கூர்மைப்படுத்த கட்டாயம் உதவும்

 

(2) எப்படி உடற் பயிற்சி உங்க உடலை திடமாக, நல்ல வடிவத்தில் வைத்திருக்கிறதோ, அவ்வாறே,  மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், கட்டாயம் உங்கள் மூளையை நல்ல நிலையிலும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். - அதாவது, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும்.

 

(3) சமூக தொடர்பு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு போன்றவற்றை  விரட்ட உதவுகிறது, பொதுவாக இந்த இரண்டும் நினைவாற்றல் இழப்பிற்கு காரணமானவை ஆகும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அல்லது சந்தர்ப்பத்தை நீங்களே உண்டாக்கி, நீங்கள் விரும்புபவர்களுடன், உங்கள் நண்பர்களுடன் மற்றும் எல்லோரிடமும் ஒன்றிப் பழக முயலுங்கள் - குறிப்பாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது.

 

(4) உங்கள் வீடு இரைச்சலாக இருந்தாலும் அல்லது உங்கள் குறிப்புகள் குழப்பத்தில் இருந்தாலும் [if your home is cluttered and your notes are in disarray], நீங்கள் மறப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே எப்பவும் உங்கள் பணிகள், நியமனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் போன்றவற்றை ஒரு பிரத்தியேக குறிப்பு புத்தகத்தில் - காகித அல்லது மின்னணு -  பதியுங்கள் . அது மட்டும் அல்ல, அவ்வற்றை பதியும் பொழுது, வாய் மூலம் அதை திருப்பி சொல்லவும். இது நினைவாற்றலில் அதை ஒட்டிவைக்க பெரிதாக கட்டாயம் உதவும்.  நீங்கள் இப்ப அறிந்ததை / நிகழ்வதை பதியும் பொழுது, முன்னையதையும் ஒருக்கா பாருங்கள். மேலும் உங்கள் பணப்பை, சாவி, கண்ணாடி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ககளை வைத்து எடுப்பதற்கு ஒரு இடத்தை இயன்ற அளவு நிரந்தரமாக ஒதுக்குங்கள். கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் தக்கவைத்துக் கொள்ள அல்லது தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பும் ஒன்றில், முழு கவனத்தையும் செலுத்தி, செயற்பட்டால், கட்டாயம், பின்னொரு நேரம் அவ்வற்றை திருப்பி நினைவூட்டுவது இலகுவாக இருக்கும். அது மட்டும் அல்ல அப்படியான நிகழ்வுகளை அல்லது குறிப்புகளை, நீங்கள் அதிகம் விரும்பும் பாடலுடனோ அல்லது உங்களுக்கு பழக்கப்பட்ட கருத்துக்கள் உடனோ தொடர்பு படுத்துவதும் ஒரு நல்ல வரவேற்கத் தக்க முறையாகும்

 

(5) ஆரோக்கிய வாழ்விற்கு உறக்கம் ஒரு முக்கியமான ஒன்றாகும். இது நினைவாற்றலுக்கும் பொருந்தும். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் [shut down] காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக,  உறக்கத்தின் முக்கிய பாத்திரங்களில் [vital roles] ஒன்று நினைவுகளை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நமக்கு உதவுவதாகும்..உதாரணமாக, ஒவ்வொரு நாளும் எம் மூளை பெருவாரியான தகவல்களை உள்வாங்குகிறது. அவைகளை நேரடியாக பதிவு செய்யப்படுவதை விட , இந்த உண்மைகளும் அனுபவங்களும் [facts and experiences] முதலில் சீரமைப்பு செய்யப்பட்டு சேமிக்க வேண்டும் [need to be processed and stored]. இவைகளின் பெரும் பகுதி, நாம் உறங்கும் பொழுதே நடைபெறுகிறது. எனவே வயது வந்தோர் குறைந்தது ஏழு மணித்தியாலம் தொடங்கி ஒன்பது மணித்தியாலம் வரை துயில்வது மிக நன்றாகும்.

 

(6) படுக்கைக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உறக்கத்தை சிறப்பிக்கலாம் அல்லது கெடுக்கலாம். சில குறிப்பிட்ட உணவுகள் மூளையை அமைதிப்படுத்துவதாகவும் மற்றும் உறக்கத்தை ஊக்கிவிப்பதாகவும் [calm the brain and help promote sleep] அறியப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உறக்கத்திற்கு மாலையில் சரியானவற்றை சாப்பிடுவது கட்டாயம் அவசியமாகும். உறக்கத்திற்கு முன், பெரிய அளவு உணவுகள் சாப்பிடக் கூடாது, ஏன் என்றால், இது உபாதைகள் மற்றும் அஜீரணத்திற்கு [discomfort and indigestion] வழிவகுக்கும். ஆனால், சிறிய சிற்றுண்டி பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில ஆய்வுகள், குறிப்பிட்ட சில  ஊட்டச்சத்துக்கள் [nutrients] , உறக்கத்திற்கு ஒரு அடிப்படை பங்கை வகிக்கிறது என சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு நீண்ட நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உணவில் [தக்காளி, ...] காணப்படும் லைகோபீன் [இலைக்கொப்பீன் / lycopene], கார்போஹைட்ரேட்டுகள் [ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, ...  / மாசத்து / carbohydrates], வைட்டமின் சி [கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி,  ... / vitamin C], செலினியம் [கொட்டைகள், இறைச்சி மற்றும் மட்டி / selenium], லுடீன் / நிறமி வகை [பச்சை, இலை காய்கறிகள் / lutein  / zeaxanthin ] உணவுகள் முக்கியமாகும்.

 

இரவில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதும் மற்றும் .உறங்க செல்வதற்கு முன் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றை அருந்துவதும் உறக்கமின்மைக்கு பொதுவான காரணம்  ஆகும். இரவு உறங்க செல்லும் முன் இளஞ்சூடான பால், முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட கோழி, சுண்டல் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் உறக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும். அதேநேரத்தில் இத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இரவு உணவு உண்டதும் உடனடியாக  உறங்கச்செல்ல வேண்டாம், அதேநேரம்  பசியோடும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டும் உறங்கச் செல்லவும் கூடாது. இரண்டுமே உறக்கத்தைக் கெடுக்கும்

 

ஆரோக்கியமான உணவு மூளைக்கும் இதயத்துக்கும் நல்லது ஆகும். அதிகமாக கூடுதலான பழங்கள், மரக்கறிகள், முழு தானிய உணவுகள் நன்மை பயக்கக் கூடியவை. அது மட்டும் அல்ல குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை தெரிந்து எடுங்கள். உதாரணமாக, மீன், பீன்ஸ் [அவரை], தோல் அற்ற வெள்ளை இறைச்சி கோழி, போன்றவை ஆகும். அத்துடன்  நிறைவுற்ற கொழுப்புகளான [saturated fats] மாட்டிறைச்சி, சீஸ் [பால் கட்டி], வெண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் குடிக்கும் பானங்களும் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கூடுதலாக மது அருந்துதல், தடுமாற்றத்தையும் நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தலாம். அதே மாதிரி போதை பொருள்களும் ஆகும்.

 

இறுதியாக, நீங்கள் ஏற்கனவே மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் [உயர் கொழுப்பு], நீரிழிவு நோய், கூடிய உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்] மற்றும் காது கேளாமை [depression high blood pressure high cholesterol diabetes, obesity, and hearing loss] போன்ற குறைபாடுகளுக்கு மருத்துவர் ஆலோசனையில் இருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் உங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அப்படி என்றால் தான் உங்க நினைவாற்றல் இழப்பு  பெரிதாக பாதிக்கப் படாமல் காப்பாற்ற முடியும். மேலும் ஒழுங்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, உங்கள் மருந்துகளை மதிப்பாய்வு செய்யுங்கள். பலதரப்பட்ட மருந்துகள் கூட நினைவாற்றலை பாதிக்கலாம்.

 

மனித உடலில் கொழுப்புச் சத்து என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இருக்க வேண்டிய அளவு எவ்வளவு, அதை நாம் எந்த மாதிரியான உணவுகளில் இருந்து பெறுகிறோம் என்பது தான் முக்கியம். நம்முடைய உடலில் கொழுப்புச் சத்து என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான, நமக்கு ஆற்றலை வழங்குகிற நல்ல கொழுப்பு, மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற மோசமான, ஆபத்தான கொழுப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

 

 

[மூலம்: ஆங்கிலத்தில், கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்-/-தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

-முற்றிற்று-

0 comments:

Post a Comment