"பெண் வலியின் நீண்ட குரல்" , "பாலியல் வன்கொடுமை"

 


"பெண் வலியின் நீண்ட குரல்"


நெருப்பின் நிழலும் சந்தேக வாளும்

சீதையின் கண்ணீர் தீயில் உருகுது,

ராமனின் சந்தேகம் வாளாய் வீசுது.

கர்ப்பிணி உடல் காட்டில் தள்ளப்படுது,

இன்று பெண்கள் தெருக்களில் தள்ளப்படுது.

"தர்மம்" என்ற பெயரில் அநீதி நிறைந்ததை  இறைசாயமிட்டு இனிதே வளர்த்தோம்,

பாவையர்மேல்  கொடுமைக்கு வழியிட்டோம் 


வஞ்சனை வலியின் பழைய பாடம்

ஆயர் பெண்கள் குளிக்கும் யமுனைத் தீரம்,

கண்ணன் ஆடைகளை மறைத்து சிரிக்கும் மரம்.

அவமானம் அவளுக்கு, வெட்கம் உடலெல்லாம்,

இன்று பெண்ணுடையுரிய  உயர்ந்திடும் கையெல்லாம் கண்ணனின் அவதாரங்களா?

அல்லது கடவுள் கதையென்று கட்டிவிட்ட 

ஆரிய அதிகார சூழ்ச்சியின் விளைவா? 


கொடுமையின் சங்கீதம் இன்றும் ஒலிக்குது

திரௌபதி அரங்கில் உருகும் வஸ்திரம்,

இன்று பெண் குரல் மூழ்கும் சமூக அரங்கம்.

கற்புக்காக தீக்குளிர், காட்டுக்குத் தள்ளல்,

இன்று வீடுகளில் வன்முறை, தெருக்களில் தள்ளல்.

நூல்கள் நியாயப்படுத்தும் அந்தப் பழைய தர்மம்,

பெண் இரத்தம் சிந்தும் போது மௌனமான தர்மம்.


அநீதி நூல்களின் நிழல் இன்று

புராணங்கள் பேசும் "போகப் பொருள்" பெண்,

இன்று வன்முறைக்கு வழிவகுக்கும் பெண்.

சங்கக் கதைகள் சொல்லும் வஞ்சம், துரோகம்,

இன்றைய பாலியல் வேதனைக்கு அடிப்படை யோகம்.

அதிகாரம் செலுத்தும் ஆண் மனம் இன்னும்,

பெண் உரிமைக்கு எதிராய் நிற்கும்.


எழுச்சியின் ஒளி – இனி மௌனம் இல்லை!

இனி இல்லை அந்த நெருப்பு, இருள், சந்தேகம்!

பெண் குரல் உயரும், உடல் உயரும், உரிமை உயரும்!

வன்முறை துண்டிக்கும் வாள் நாம் கையில்,

நியாயத்தின் நதி பொழியும் தமிழ் நெஞ்சில்.

பழைய நூல்களை விமர்சித்து எழுவோம்,

பெண் விடுதலைக்காக போராடுவோம்!

-செ.மனுவேந்தன் 

ፌፌፌፌፌፌፌፌፌፌ


"பாலியல் வன்கொடுமை"


பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே 

பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! 

பாவை பிருந்தாவின் கற்பழிப்புத் தெரியுமா 

பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே!


விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா

மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! 

எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் 

கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே!


காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து 

காதல் பேசும் புராணம் பரவட்டும்! 

காலம் அறிந்து பழையதை எறியுங்கள் 

காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்!    


-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

ፌፌፌፌፌፌፌፌፌፌ

0 comments:

Post a Comment