குடும்ப உறவுகளை மெருகேற்ற...



 இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்!

அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.

நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

பொதுவாக பெற்றோர்கள் என்று எடுத்துக் கொண்டால் என்னத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்தாலும் எல்லாக் குழந்தைகளும் அப்பெற்றோரின் அன்பை புரிந்து நடப்பதில்லை. அதனாலேயே சில வீடுகளில் பிள்ளைகளாலே பிரச்சனைகள் சூழ்ந்துக் கொண்டு குடும்பமே அவதிக்குள்ளாவதும் உண்டு.அவ்வாறில்லாமல் பெற்றொரும் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளுதல் அவசியம் அதைப் போல் பிள்ளைகளும் வளர்ந்து ஆளானதும் பெற்றொர் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ அவற்றை பெரிதுபடுத்தி சண்டையிடாமல் அவர்கள் மனம் வருந்தும்படியான காரியங்கள் செய்வதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

இன்னும் சில குடும்பத்தில் புகுந்த வீடாரின் மூலமாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும் அவ்வாறன தருணங்களில் அவர்களிடம் மனம்விட்டு பேச முயற்சி செய்வது நல்லது. இல்லாவிடில் கடிதம் மூலமாகக் கூட நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் இதனால் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டு செயல்பட வழிவகுக்கும். இல்லாவிடில் பகைமை வளர்ந்து வளர்ந்துப் பெரிதாகி பிரச்சனைகள் தான் வளரும்.

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.
குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:
1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.
2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.
அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.
3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.
4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.
5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.
6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.
7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம்.

அனுப்பியவர்:ஜெய்காந்த்

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:14

பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....




இன்றைய மனிதர்கள் முக்தி என்பது இறந்த பின் மோட்சம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என இந்த உலகங்களை அடைவது தான் முக்தி அடைதல், என்ற நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கு இறைவனை வணங்கி வந்தால், கடவுள் உபாசனை செய்து வந்தால், முக்தி கிடைக்கும் என்று எண்ணி வாழ்ந்து வருகின்றார்கள். சிலர் இறப்பது தான் முக்தி என்றும் கூறிவருகின்றார்கள். இதுபோன்ற மனிதர்களை பார்த்து என்குரு அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.


"நாடு மெச்ச நரகம் என்பார் சொர்க்க மென்பார்
 நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்" 

-என்கிறார். 

மற்றவர்கள் தன்னைப்பற்றி பெருமையாக எண்ண வேண்டி நரகம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என எல்லாம் தெளிந்த ஞானி போல் பேசுவார்கள் ஆனால் தன் வாழ்வில் தனக்கு எது நல்லது, கெட்டது, தன் செயல்களில் எது நல்லது, கெட்டது என அறிந்து கொள்ளாத மூடர்கள் என்கிறார்.
                 இந்த பூமியில் நாம் உயிருடன் வாழும் காலத்திலேயே சுகம், போகம், செல்வம், புகழ், பதவி என அனைத்தையும் அடைந்து, தன்னை உருவாக்கிய தாய், தந்தையையும், தான் உருவாக்கிய மனைவி, குழந்தை, குடும்பத்தாரை சந்தோஷமாக வாழ செய்து, பெற்றோருக்கு நல்லமகனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ்ந்து, தானும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து "இல்லை" என்ற சொல்லே வாழ்வில் "இல்லை" என்று வாழ்ந்து வருவது தான் வாழ்வில் முக்தியை அடைந்த நிலையாகும்.
                 முக்தி என்பது கல்லூரி படிப்பை போன்றது உயர்நிலை பள்ளியில் தன்னிடம் உள்ள திறமை, ஞானம் அறிந்து தான் கற்ற கல்வியை மேலும், மேலும், விருத்தி செய்து அதில் நிபுணத்துவம் பெற்று, பக்குவம் அடைந்து, வெற்றியை அடையும் பருவம். பிறர் தன்னை திறமை உடையவன் என்று ஒப்புக் கொண்டநிலை. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் கற்றவன் கல்லூரி படிப்பில் பொறியாளர் ஆக உருவாகின்றான். விஞ்ஞானம் படித்தவன் விஞ்ஞானி, மருத்துவனாக முழுமை பெறுகின்றான். கலை கல்வி படித்தவன் அந்த கலையில் திறமையை நிரூபிக்கின்றான். இது போன்று தன் திறமையை முழுமையாக செயல்படுத்தும் சக்தியை அடைதலே, "முக்தி நிலை" என்று கூறலாம். வாழ்வில் பிறரை சார்ந்து வாழாமல், தன்னையறிந்து, முழுமை பெற்று, தன் திறமையால் புகழ், பொருள், பதவி என அனைத்தையும் அடையும் தகுதியை பெற்று, வாழ்வில் உயர்நிலையை அடைபவன் முக்தி நிலை அடைந்தவன் ஆவான். இதுவே மனிதன் முக்தி அடைதல் ஆகும்.

மோட்சம் வேண்டார்கள்   -    அகப்பேய்
முக்தியும் வேண்டார்கள
 தீட்சை வேண்டார்கள்   -  அகப்பேய்
   சின்மயமானவர்கள்           

                  -  என்கிறார்.
                  என்குரு தன்னையறிந்து ஞானம் பெற்ற மனிதர்கள், தன் வாழ்வில் இறந்தபின் மோட்சம் அடைய வேண்டும். முக்தி நிலையை அடைய வேண்டும் என எண்ண மாட்டார்கள் ஏன் என்றால் இந்த மோட்சமும், சொர்க்கமும் பொய்யானது என்று அவர்களுக்கு தெரியும். இந்த மோட்சம், சொர்க்கம், முக்தி இவைகளை அடைய கடவுள் பக்தியும், பூசை, ஹோமம், தீட்சை மந்திரங்கள் உதவி செய்யாது என தெளிவாக உணர்ந்து உள்ளதால் இவர்கள் இன்றைய போலி குருமார்களை நம்பி ஏமாறமாட்டார்கள். அவர்களிடம் சென்று தீட்சை பெற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் கூறும் தீட்சை மந்திரங்களையும் கூறி, செபம் செய்து செபித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தன் ஞானத்தினால் உலகில் உண்மை, பொய் இவைகளை தானே அறிந்து மாயை நீக்கி, வாழ்வை மேன்மையானதாக கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைவார்கள். அனுபவிப்பார்கள்.
                   
மூலமில்லையடி -   அகப்பேய்
முப்பொருளில்லையடி.
மூல முண்டானால் -  அகப்பேய்  
முக்தியுண்டாமே. 
                                 
                     இந்த உலகம் உருவாக காரணம் கடவுள் தான், இறைவன் தான் இந்த பூமியை உண்டாக்கி, சகல உயிர்களையும் படைத்தான் என்று கூறுவது பொய்யான வாதம் ஆகும். படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, அளிக்கும் கடவுள் சிவன் என்று கூறுவார்கள். இது பொய், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் என்ற மூவர் தெய்வ தத்துவம் பொய்யானது. இதை நம்பி அலைவதைவிட்டு விட்டு, உன் பிறப்பின் மூலத்தை அறிந்து உடல், உயிர், ஆன்மாவாக உள்ள நீ உனக்கு நிர்ணயிக்கப்பட்ட மூலத்தை, உன் விதியை, உன்னையே நீ அறிந்து வாழ்ந்து வந்தால் உனக்கு வாழும் போதே முக்தி உண்டாகும் என்கிறார்.

மூல வேற றிந்து கொண்டால் மூன்றுலகமும்

முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம்

சாலவேர றிந்தாலே தான் பயனுன்டோ

சகத்தைபொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே.
                     
                    ஒரு மனிதன் தான் பிறந்ததின் மூல காரணத்தை, தன் விதியை, ஊழ்வினையை தன் ஞானத்தால் தன்னையறிந்து கொண்டு, தான் வாழ வேண்டிய வழி முறையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், வாழும் போதே மூன்று உலகமும் அடைந்து முக்தி நிலையை கொண்டவன் ஆவான். இப்படி தான்வாழும் கலை அறிந்த ஞானி தினம், தினம் முக்தி அடைந்த வாழ்வை பெறுவான். இதை விடுத்து இந்த பூமியில் சில பொய்யர்கள் கூறும், இறந்த பின் முக்தி நிலை என்ற பொய்யான பேச்சுகளை  கேட்டு கடவுள், பூசை, ஹோமம், தானம், தர்மம் என்று நம்பி அலைந்து கொண்டு, தன் வாழ்வினை இவைகள் உயர்த்திவிடும், முக்தியை தந்து விடும், என்று நம்பி அலைந்து கொண்டு இருந்தால் எந்த பயனும் கிட்டாது. எனவே இந்த பூமியில் கூறும் பொய்யான, கட்டு கதைகளை புரிந்து கொண்டு தன்னையறிந்து வாழ்தலே முக்தியை தரும்.

தொடரும்..

ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..T

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

ஒரு சிறுமியின் சிறுகதை

பேருந்தில்  மூதாட்டி

செய்ந்நன்றி 

இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர் வாழ்ந்துவந்தார்.  
கன்னியா வெந்நீர் கிணறுகளில்  குளிக்க வருபவர்களுக்கு   சிறுவயதில் இருந்தே விளாம்பழம் விற்கும் தொழில் செய்யும்  வழக்கத்தினைக்  கொண்டிருந்தார்  காமாட்சி. அவருடைய கணவன்   யானை மிதித்து இளம் வயதினிலேயே  இறந்துவிட்டாலும்கூட  மூதாட்டி தனது  ஒரேயொரு மகள் சீதாலட்சுமியுடன் பன்குளத்தில் வசிக்காது கன்னியாவில் இருந்து தன் தொழிலைத் தொடர்ந்து  செய்து வந்தார்.

நீண்ட நாட்களாக தனது மகளையும், பேரப்பிள்ளைகளையும் சந்திக்காததால், காண விரும்பிய அவள் அவர்களை சந்தித்து ப்பேசிவர  பருப்பு வடை சுட்டு , கையிலிருந்த நூற்றிஐம்பது ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கு செல்லப்  புறப்படடார். பேருந்துக்கு வீதியில் காத்திருந்த வேளையில் அங்கு வந்த பேருந்துக்கு தன் கையினைக்  காட்டி அதில் ஏறிக் கொண்டபோதுபேருந்தில்  அதிக கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இருப்பதற்கு ஆசனம் இல்லையே என்று தடுமாறிய காமாட்சி ஆசனத்தில் அமர்ந்து இருப்போரை ஏக்கத்துடன் பார்த்தார். யாருமே அவளைக்  கண்டு கொள்வதாக தெரியவில்லை என உணர்ந்து சலித்துக்கொண்டார்.

பேருந்து நடத்துனர் மூதாட்டியின் பயணத்துக்குரிய பற்றுச் சீட்டினை  வழங்கி விட்டுப்  பணத்தை கேட்டபோது, தன் இடுப்பில் செருகி இருந்த பணப்பையை காணாது திகைத்துப்போன  மூதாட்டியை நடத்துனர் கண்டபடி ஏசி பேருந்தில் இருந்து இறங்குமாறு கூச்சலிட்டார். என்ன செய்வது என்று திகைத்து நின்றார் மூதாட்டி. அப்போது  சிங்களமொழி பேசும் நடுத்தர வயது நபர் ஒருவர் அவருக்குரிய பற்றுச்  சீட்டுக்கான பணத்தினை வழங்கினார்.  மூதாட்டி பார்வையால் அவருக்கு நன்றி கூறினார்.

 பன்குளம் சந்தியில் மூதாட்டியைப்  பின்தொடர்ந்து இறங்கிய அந்த நபரிடம் ''நீங்கள் பன்குளமா?'' எனக் கேட்டபோது    அந்த நபர் ''இல்லை பாட்டி நான் வவுனியாவுக்கு செல்கிறேன் உங்களுடன் கதைக்கவே நானும் இறங்கினேன்'' என கூறிய அந் நபரை  ஆச்சரியத்துடன் பார்த்த மூதாட்டியிடம் '' உங்களுக்கு என்னை தெரியவில்லையா,  10 வருடங்களுக்கு முன் கன்னியா வெந்நீர் ஊற்று பார்ப்பதற்காக வேனில் வந்த எமது குடும்பத்தை யானை தாக்க வந்தது. அப்போது சிதறி ஓடிய எங்களுக்கு உங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து தேநீரும் வழங்கி உதவிகள் செய்தீர்கள் ''  என சிங்களத்தில் கூறினர்.

 பாட்டிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மகள் வீட்டுக்கு அவரையும் அழைத்துச் சென்றார் பாட்டி. அங்கு நடந்தவற்றை கூறி அவருக்கு கொஞ்சம் பருப்பு வடை சாப்பிட கொடுத்து தோட்டத்தில் விளைந்த சோளம் பொத்திகள்  சிலவற்றை கொடுத்து வழியனுப்பி வைத்தார்  காமாட்சி பாட்டி.

எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.-[திருக்குறள்]

:சுபஜி ,ஜெயரூபன்
 தரம்5 டி
 ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி
  திருகோணமலை 

✍: සුබාජි, ජයරුපන්
  ත්රිකුණාමලය
👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩

சிரித்து நலம் பெற....



நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? / பகுதி:2B

[சீரழியும் தமிழ் சமுதாயம்]

சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு மலர்கள் ஒன்றிணைந்து ஒரு மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு ஒரு கூட்டமாய் வாழ்வதே சமுதாயம். அதாவது, தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆண் பெண் கூட்டு சேர்ந்து தம் சந்ததிகளை உருவாக்கிப், பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து, மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு அது வித்திட்டது எனலாம். சமூகங்கள் தோன்றுவதும், வாழ்வதும், அழிவதுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர். சங்க கால மக்கள் சமுதாயம் எப்படி இருந்தன என்பதை இலக்கியங்கள் பாடல்கள் மூலம் கூறுகின்றன. உதாரணமாக உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுதல் அவர்களின் சமுதாயத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதை காண்கிறோம். இன்றைய நவீன உலகில், மனிதநேயம் அருகிவருகிறது. அன்பு ,கருணை, இரக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது, இவைகளை போதிக்கவென்றே தோன்றிய சமயங்கள் கூட தமக்குள் மதம் கொண்டு மோதுகின்றன, ஏன் கொலை கூட செய்கின்றன, உதாரணமாக 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' ,அதாவது, புத்தியால் பகுத்து ஆராய்ந்து, அதன் மூலம் அறியும் அறிவில் சரணடையுங்கள், அதே போல சத்தியத்தில் சரண் புகுங்கள், சங்கத்தின் பண்புகளை உங்களில் வளர்த்து, அந்த பண்புகளில் சரணடையுங்கள் என்கிறது. ஆனால் இலங்கையில் நடப்பது என்ன ? எத்தனை புத்த பிக்குகள் ,அல்லது புத்தர் போதனையை பின்பருப்பவர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவார்கள் இதை உணர்ந்து உள்ளார்கள் ? இன்றைய மற்றும் கடந்த கால இலங்கை வரலாறு இதற்க்கு சான்று கூறும். அதேவேளை தமிழரின் சங்க இலக்கியம் அகநானுறு 4, அடி, 8 - 12 இல், அவன் குதிரை பூட்டிய தேரில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான், ஏனென்றால் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்கவாம் என,

"குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்"

என்று மனிதநேயத்தின் உச்ச நிலையாக அஃறிணைக்கும் துன்பப் படாது பாதுகாத்த செயலை காணும் பொழுது, இன்று எப்படி சமுதாயம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதை இலகுவாக காணக்கூடியதாக உள்ளது.

சங்க காலத்திலும் அதற்கு அடுத்த பிற்காலத்திலும் கல்வியும், கைத்தொழிலும், வணிகமும் மிகவும் சிறந்த நிலையில் தமிழர்கள் மத்தியில் இருந்ததை காண்கிறோம். புறநானூறு - 183 இல் “கற்றல் நன்றே.....”  என்ற வரியை காண்கிறோம். தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு தான் ‘திருக்குறள்’ எனும் உலகப் பொது மறையும் , 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டும் அல்ல வாழ்க்கை நெறிகளால் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 'அன்பே சிவம்' என்றனர். பகையை வெல்லும் ஆற்றல், தீயோரை நல்லோராக்கும் வண்மை ஆகியவை அன்பால் இயலும் என்பதை, தங்கள் பண்பாட்டு நெறியாகத் தமிழர் போற்றினர். ஆனால் இன்று நடப்பது என்ன ? ஔவையார் புறநானூறு 187 இல்

"நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!"

என்று கூறியது போல, அதாவது, நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம் என்பது போல, மனிதர்களின் கூட்டால்  உண்டாக்கிய சமுதாயமும், மனிதர்கள் முறையாக அங்கு இருக்கிறார்களோ அந்த சமுதாயம் வாழ்வதற்கு உரிய நல்ல சமுதாயமாகிறது என்பது எனது திட நம்பிக்கை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 03  தொடரும்
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03A
Translate message to: English | Never translate from: Tamil
Kandiah Thillai
Fri 2019-08-30 8:06 PM

நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03A

கணியன் பூங்குன்றனார், 2300 ஆண்டுகளுக்கு முன் தன் புறநானூறு பாடல் 192 இல் "நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியது மில்லை, வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு பெருகி வரும் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம் போல நமது வாழ்க்கை என்கிறார். அப்படித்தான் நமது வாழ்வும், இன்று பலவித கேடுதல்களை, தீமைகளை புரட்டிக் கொண்டு இன்னும் இந்த நவீன, நான்காவது தொழில்துறை புரட்சியாக பெருகி வரும் மின்னணு யுகத்தில் மிதந்து கொண்டு அதன் வழி போகிறோம். ஆனால் எவ்வளவு நாளுக்கு அது தனது பக்க விளைவாக விட்டு செல்லும் சீரழிவிற்கு இடையில் நாம் மிதந்து போக முடியும்? இது தான் இன்றய முதன்மை கேள்வியும்
கூட.   

மனித இனத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்கு உரியது. மாற்றத்திற்கு முக்கிய காரணம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. மாற்றங்களை பொதுவாக எவரும் விரும்புவர். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். ஆனால் அவை வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை தரக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று வரலாற்று ரீதியாக எவரும் கூறலாம், பெருமை படலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இன்று எமக்கு உள்ள பிரச்சனை. "சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்"  என்று திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக்க காண்கிறோம். சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் என்கிறது. அதாவது, சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும் என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதே போல பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான். நாமும் அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று இன்று வீட்டிலிருந்த படியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக வழி சமைத்தோம். இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது. இதனால், முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது. இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞர்கள் வழி தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது. எனவே எதிர்காலத்தின் சிறப்பும் பெற்று, புதியதோர் உலகமும் பெற்றதோடு நிற்காமல் பக்க விளைவாக சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளையும் பெற்று விட்டோம் என்பதே இன்றைய உண்மையும் பலரின் குமுறல் ஆகும். 

இன்றைய நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற மரத்தின் நுனியில் அதாவது அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் பண்பாடு போன்ற விடயங்களில் மிக மிக பின் தள்ளி  காணப்படுகிறது. நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. இதனால் அதிகமாக, இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கி விட்டது மனித இனம். வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம் தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பாடசாலைகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர்.

 "தெருவோர மதகில் இருந்து,
ஒருவெட்டி வேதாந்தம் பேசி,
உருப்படியாய் ஒன்றும் செய்யா,
கருங்காலி தறுதலை நான்
 ...... 
ஊருக்கு கடவுள் நான்,
பாருக்கு வழிகாட்டி நான்,
பேருக்கு புகழ் நான்,
பெருமதிப்பு கொலையாளி நான்
 ......
குருவிற்கு குரு நான்,
குருடருக்கு கண் நான்,
திருடருக்கு பங்காளி நான்,
கருவிழியார் மன்மதன் நான்."


என ஒரு முறை நான் கவிதை எழுதியது ஞாபகம் வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. நற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் நல்ல கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம். விஷமா, அமிர்தமா? எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥