மார்பக புற்றுநோய்- "தேனீக்களின் விஷம்" - கண்டுபிடிப்பு



தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.

ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவை, மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தேனீக்களின் விஷத்தில் மெலனோமா போன்ற சில புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான குணம் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம், நேச்சர் பிரசிஷன் ஆன்காலஜி என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?

300க்கும் மேற்பட்ட தேனீக்கள் மற்றும் பெரு வண்டுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

"தேனீக்களில் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய 25 வயது ஆய்வாளரான சியாரா டஃபி.
நஞ்சின் ஒரு செறிவு, வெறும் ஒரு மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவையாக இருந்தது. அதுவும் அவை மற்ற செல்களுக்கு பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நஞ்சு அதிக அளவில் கொடுக்கப்படும் போது, அதன் விஷத்தன்மை அதிகரித்தது.

மேலும் மெலிட்டின் என்ற பொருள், புற்று நோய் செல்கள் வளர்வதை தடுப்பதிலும், அவற்றை அழிக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாவே தேனீக்களின் விஷத்தில், இந்த மெலிட்டின் காணப்படும் அல்லது அதனை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.

மார்பக புற்றுநோய்களில் மிகவும் மோசமானது ட்ரிப்பிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தலாமா?

இந்த ஆய்வை "பிரமிக்கத்தக்கது" என்று விவரித்துள்ளார் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

"புற்றுநோய் செல்கள் பரவி வளர்வதை மெலிட்டின் எப்படி தடுக்கிறது என்பதை இந்த ஆய்வு காண்பிக்கிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எவ்வாறு மனித நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது" என்று பேராசிரியர் பீட்டர் தெரிவித்தார்.

ஆனால், இதனை பெரிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்க உதவும் என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி:பி.பி.சி தமிழ் 

எங்கட தமிழ் ஆட்கள்-பறுவதம்பாட்டி


(இது ஒரு நடப்பு நிகழ்வுகளின் அலசல்)
அன்று பாடசாலையின் விடுமுறை என்பதால் விடிந்து நெடுநேரமாகியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பாக இருக்கவேண்டும்.  பாட்டி அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது புரிந்தது. பாட்டி போனை ஸ்பீக்கரில்விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக தெளிவாகக்கேட்டது.

அண்ணாமலைத்தாத்தாதான்பேசிக்கொண்டிருந்தார்.

"ஏன் இவையள் இப்படி?" என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார். 

"ஆரைச்  சொல்லுறியள்".

"எங்கட தமிழ் ஆட்கள் தான்"

"எதை வச்சுக்கொண்டு  அப்பிடிக் கதைக்கிறியள்?"

"ஒண்டா இரண்டா. இவன் மேன் வீடு வாங்கினதிலிருந்து எத்தினை தமிழாட்களை  வீட்டில கூரை,சுவர்,நிலம்,ஜன்னல்,washroom வேலைகள் என்று பலமுறையும் தமிழாட்களை ௬ப்பிட்டு ஒவ்வொருவரும் ஏமாற்றி தானே போகினம். அவனும் தமிழாட்கள் என்று நம்பித்தானே ௬ப்பிட்டவன். அவையும் தமிழாட்கள் தானே என்டுவிட்டுத் தமிழாட்களிலை  தானே வேலை பழக வாறது. ஆனால் கதைக்க விட்டுப் பார்க்கவேணும். தங்களை விட்டால் கனடாவிலை திறமா வேலை செய்ய ஆர் இருக்கினம் எண்டு விலாசம் பேசுவினம். வீட்டு ரிநோவேசன் வேலையில தமக்கு தெரியாதவை எதுவுமில்லை தம்பட்டம் அடிப்பினம். ஆனா எதுவும் தெரியாது.கழிவிடங்களில சும்மா பொறுக்கின பழைய ஆயுதங்களோட விலாசமாய் வந்து இறங்குவினம். செய்வதெல்லாம் குப்பை வேலைகள்”.

பாட்டியும்  தொடர்ந்தாள்.

"ஏன்,இங்கை மேள் நெடுகச் சொல்லுவாள்.கார் ஒண்டை திருத்துவதற்காக கொம்பனிக்கு கொண்டுபோனா அதை உயர்த்தி  கணணி இயந்திரங்கள் மூலம் CHECKபண்ணி 2,3 மணித்தியாலங்களில் தான் என்ன பிழை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் தமிழாட்கள் சரியான கெட்டிக்காரர்கள்.தாங்களே ஒருமுறை குனிஞ்சு பார்த்துவிட்டு படக்கெண்டு என்ன பிழை எண்டு  சொல்லி PARTS  எங்கள் காசில வேண்டிப் போட்டு அது எப்பிடி எண்டு பழகிக் கொள்வார்கள்.ஆனால் பிழைகள் தொடரும்.தெரியாத விசயங்களுக்கெல்லாம் ஏன் தலையிட்டு பேரினைக் கெடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது".

"ஒரு வளர்ந்துவிட்ட நாட்டில வாழ்ந்துகொண்டு இன்னும் நாம் திருந்தவில்லை. ஒருவனை ஏமாற்றினால் அவன் தன்னோட பழகிற உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லாமல் விடமாட்டான். இவர்கள் எத்தினை பத்திரிகைகள்,வானொலிகளுக்கு விளம்பரம் கொடுக்கட்டும்.ஆனால்  அவை எல்லாவற்றிலும் வலிமையானது வாடிக்கையாளரின் பிரச்சாரம் என்பது எங்கட ஆட்களுக்கு  இன்னும் புரியாதது ஏன் என்று  விளங்கவில்லைஎன்றார் அண்ணாமலைத்தாத்தா.

முடிவாகப் பாட்டியும், தமிழரிட்டை போகக் கூடாது என்பது பிள்ளையளின்ட நோக்கமில்லை.அவர்கள் தான் தமிழரை ஏமாத்தக் கூடாது என்று முடிவேடுக்கவேணும். அந்த எண்ணம் எங்கடயளிண்ட நெஞ்சில எப்ப முடிவாகுதோ அப்பத்தான் எங்கடயலும் இந்த நாட்டில வளர்ந்துவிட்ட இனங்களுக்கு சமமாக வளர்ந்துவிட முடியும்.

பாட்டியின் இவ் முடிவுரையினை நான் நற்சிந்தனையாக  உள்வாங்கிக்கொண்டேன்.


ஆக்கம்: பேரன் செ.மனுவேந்தன்

பகவத் கீதை என்ன சொல்கிறது?




பகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது.

போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனனை தைரியமூட்டிப் போர் புரிய வைக்க, கண்ணனால் எடுத்துக் கூறப்பட்ட பல நியாயங்களை உள்ளடக்கிய ஒரு போதனை நூலாகும்.

"போர்க்களத்தில் எதிரில் நிற்போர் எல்லாம் யார், யார்?. எனது வணக்கத்திற்கு உரிய பெரியோர்கள், குருமார்கள், ரிஷிகள், ஆசிரியர்கள், ஒரே இரத்த உறவிலான பெற்றோர்கள், சகோதரர்கள், பிள்ளைகள், ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள், அத்தோடு எதிரணியில் உள்ள, உனக்கே (கண்ணபிரானுக்கே) சொந்தமான சேனைகள்! 
இவர்களை எல்லாம் கொல்வது மகா பாவம் கண்ணா. என்னை விட்டுவிடு. எனக்கு அரசும் வேண்டாம், பதவியும் வேண்டாம். நான் இந்தப் பாவத்தைச் செய்ய விரும்பவில்லை"

இப்படி மறுத்து நிற்கும் அர்ச்சுனனுக்கு  கூறப்படுபவை, ஓர் உயர் அதிகாரியால், சிற்றூழியர்களுக்கு வழங்கப்படும் கோட்பாடுகளைக் கொண்ட கடுமையான கட்டளைகளாகும். சுயமாய்ச் சிந்திக்காவோ, மீறிச் செயல் படவோ உரிமை இல்லை.

"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்பதுதான் மூல சுலோகம். கேள்வி கேட்காதே, சொன்னதை மட்டும் செய்!

ஏனென்றால்,

"அவரவர் குணம் மற்றும் ஈட்டிய கர்மாவின் பலன்களின்படி நான்கு விதமான சாதி அமைப்பு என்னால் (கடவுளால்) உருவாக்கப்பட்டது".

"பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள், என்பன. ஒவ்வொரு சாதியினருக்கும் அவரவர் கடமைகள் என்று விதிக்கப்பட்டிருக்கின்றன. அக்கடமைகளைத் தவறாது அவர்கள் செய்து முடிக்க வேண்டியது கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது. அதை ஒருபோது உங்களால் மாற்றமுடியாது".

"க்ஷத்ரியர்கள் போர் புரியப் பிறந்தவர்கள். போர் புரிவது உனது கடமை. உயிர்களைக் கொல்வது பாவம் என்று நீ நினைப்பது வர்ண தர்மம் ஆகாது.  மக்களின் வாழ்க்கை சுருக்கமானது. அவை மரண சுழற்சியிலும் பிறப்பு சுழற்சியிலும் உள்ளன. ஆகவே, எப்படியும் அவர்கள் எப்படியாவது இறந்துவிடுவார்கள். கடமையின் ஒரு பகுதியாக நீ மக்களைக் கொன்றால் பரவாயில்லை. அவர்களின் இறப்புக்கு நீ ஒரு கருவியே ஒழிய அதை நீ செய்யவில்லை"

இவ்வாறான மனச்சாட்சிக்கு ஒவ்வாத, நியாயமற்ற, கொடூரத்தனமான கொலைகளைச் செய்யுமாறு  (கடவுள்) கிருஷ்ணன், அருச்சுனனை மூளைச் சலவை செய்து பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார்.

இவ்வளவு பேரையும் அநியாயமாகக் கொல்லாது பிரச்சனையைத் தீர்க்க சுலபமான வழியொன்றும் இந்தக் கடவுளுக்கு தோன்றவில்லையே!

யுத்த முடிவில் சகல எதிர் தரப்பினரும் கொல்லப்பட்டனர், கிருஷ்ணனின் சேனையில் எல்லோரும் தப்பினர்.
எல்லாப் பெரிசுகளையும், உறவுகளையும் கொன்று குவித்து 'கடமை வீரனாக' அர்ச்சுனன்  மிளிர்ந்தான்.

இப்படியாக, சில வினாடிகளுக்குள் யுத்தகளத்தில் வைத்துச் சொல்லப்படட பகவத் கீதைக்கு பொருள் கூறிப் பிரசங்கங்கள் செய்வோர், ஒரு மாசம்,இரண்டு மாசங்கள் என்று போதாது, வருடக்கணக்கில் தேவைப் படும் என்று சொல்லிக் கொள்வார்கள்.

முடிவில், இந்த வைணவ நூல், சாதாரண மனிதனுக்கு என்ன சொல்கிறது?:

* மற்ற சில மதங்கள் தங்கள் கடவுளை வணங்காதவனை மட்டும்தான் கொல்லும்படி கூற, இவர்கள் ஒரே மதத்தில் உள்ள தம் சுற்றத்தினரையே கொல்லும்படி போதிக்கிறது.

* சொந்த மூளையை பாவிக்காது சொன்னதைச் செய்யும் அடிமையாய் இரு என்று மட்டம் தட்டுகிறது.

* சாதிக் கொடுமைக்குள் இருந்துகொண்டே இரு, அதுதான் தெய்வ கட்டளை என்கிறது.

இந்த மகா நூல், ஒரு தீவிர வாதத்தையும், அடிமைத்தனத்தையும், சாதி பாகுபாடுகளையும் ஆதரித்துப்  போதிக்கும் ஒரு சாசனம்.

இதில், மனுஷனுக்கு விளங்காத தத்துவங்கள் பல இருப்பதாக ஆன்மிக வாதிகள் பறை சாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அப்படிச் சொன்னால்தான் அவர்களை நாலு பேர் 'அறிவாளிகள்' என்று நினைத்துக் கொள்வார்கள்.

மனிதனுக்கு விளங்காதவை இருந்துதான் என்ன, தொலைந்து போனால்தான் என்ன?

மொத்தத்தில், பகவத்கீதை மனிதனுக்கான ஒரு நீதி நூல் அல்ல! சமய நூலும் அல்ல!

அது ஓர் இருட்சி நூல்.

✍செல்வதுரை,சந்திரகாசன்