சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பகுதி/13



சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு

ஞானம்/C/தொடர்ச்சி
                  இந்த பூரண ஞானம் பெற்றவர்கள் உலகில் இயற்கையை ஆராய்ந்து, நமக்கு பல நல்லகருத்துகளை, ஞான மொழியாக கூறியுள்ளார்கள். இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே, உலகில் பிறக்கும் உயிர்கள், உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையினால் படைக்கப்பட்டு, அதன் பிறகு தான் மனிதரும், விலங்கினமும், தாவரமும் தோன்றியது. உலக உயிர்கள் சுவாசிக்க காற்று, பசிக்கு தானியம், தாகத்திற்கு தண்ணீர், வெளிச்சம், நோய் தீர்க்கும் மூலிகைகள், தங்கம் வெள்ளி, வைரம், பாறை, மலை, என இன்னும் எவ்வளவோ படைக்கப்பட்டுவிட்டன. இவைகளை அடைந்து அனுபவிக்க உயிர்களுக்கு கை, கால், மூளை, அறிவு என சாரீரம் அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன் சரியான அறிவு, முயற்சி கொண்டு, இவைகளை எவ்வளவு வேண்டும் என்றாலும் அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் கிடையாது. இவைகள் ஒருவருக்காக படைக்கப்படவில்லை என்பதை உணர்தல் அவசியம். இதை விடுத்து கடவுளை வணங்கினால் எல்லாம் கிடைத்து விடும் என்று வாழ்வது அறியாமை, ஞானமற்ற மனித நிலையாகும். பூமி தோன்றிய போது இயற்கையால் படைக்கப்பட்ட பொருட்களை தவிர புதிதாக ஒரு பொருளை எந்த ஒரு சக்தியாலும் பூமியில் உருவாக்கமுடியாது என்பதை அறிதலே மூல ஞானம். நிர்ணயிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது என்பதை அறிதலே ஞானம்.
                    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்வும் எப்படி அமைந்துள்ளது. எதனை அடிப்படையாக கொண்டு பிறப்பு உண்டாகின்றது என்பதை என் குரு கூறுவதை கேளுங்கள்.

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்

 அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
 எவரெவர்க் குதவினார் எவரெவர்க் குதவிலர்
 தகையவர் நினைவது தமையுணர் வதுவே.           என்று கூறுகின்றார்.         


                    இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும், முன்னோர்களால் வம்சத்தில் உண்டான பாவ, சாப, புண்ணியங்களை அனுபவித்து தீர்க்க, ஊழ்வினையை கழிக்க, இந்த பூமியில் பிறக்கின்றனர். அந்த ஊழ்வினைகளின் கணக்கின்படிதான், இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தடை, கஷ்டம், நோய் என, பலவிதமான அனுபவ நிகழ்வுகள் கொண்ட வாழ்க்கை அமைகின்றது. தன் ஊழ்வினையின்படியே பலன்களை வாழ்கையில் அனுபவித்து வருகின்றார்கள்.
                   எனவே இந்த பூமியில் பிறந்த ஒரு மனிதனோ, அல்லது தெய்வமோ, பூசை, ஹோமம், யாகம், மந்திரம், மணி வழிபாடு, விரதம், தானம், தர்மம், என எந்த ஒரு கிரியை செயல்களை செய்தாலும், இந்த ஊழ்வினை படி நாம் அனுபவிக்க வேண்டிய "பிராப்த விதியை" தடுத்து விடமுடியாது. பரிகாரம் என்ற பெயரில் செய்யும் சடங்கு, சம்பிரதாய, சாஸ்திர செயல்களால் ஊழ்வினை விதியை மாற்ற முடியாது. மற்ற எவரும் உதவி செய்து நம் ஊழ்வினையை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஞானத்தினால் தன்னையறிந்து, ஞான நிலையுடன் வாழ்ந்தால் ஊழ்வினையை அறிந்து தடுத்துக் கொள்ள முடியும் "தன்னையறிதலே ஞானம்". இதுவே விதியை தடுக்கும் சக்தி.
                  ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே இந்த பிறவியில் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஊழ்வினையின் படி, விதி பயன் நிர்ணயித்த பின் தான் பிறக்கின்றான். இதனை "பிராப்த விதி" என்பார்கள். இந்த நிர்ணயித்த விதியை, தன்னை யறிந்தவன் தடுத்து நல் வாழ்வை அடைய முடியும். தன் விதியை தடுத்து கொள்ளும் வழியை அறிதலே ஞானம் என்கிறார்.

  தத்துவ குப்பையை தள்ளுங்கடி வேத

  சாத்திர பொத்தலை மூடுங்கடி
  முக்தி தருஞான வத்துவை வாவென்று
  மூட்டி கும்மியடி யுங்கடி.


🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖

0 comments:

Post a Comment