'தளதள ததும்பும் இளமை பருவமே'


"தளதள ததும்பும் இளமை பருவமே
தகதக மின்னும் அழகிய மேனியே
நறநறவென பல்லைக் கடித்து நின்று
திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?"

"சல்சல் என சலங்கை ஒலிக்க
சிலுசிலு எனக் காற்று வீச
கமகம என முல்லை மணக்க
தடதடவென கதவை தட்டுவது ஏனோ ?"

"திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க
திடுதிடு இன அறையில் நுழைந்து
தரதர என்று என்னை இழுத்து
விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?"

"தொளதொள சட்டையில் வனப்பை காட்டி
சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு
துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி
கிளுகிளுப்பு தந்து மடியில் சாய்வதேனோ ?"

"கலகல பேச்சு நெஞ்சை பறிக்க
படபட என இமைகள் கொட்ட
கிசுகிசு காதல்  காதில் சொல்லி
சரசரவென்று துள்ளி ஓடுவது ஏனோ ?"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிMonday, April 13, 2020


    இரட்டை மொழியில் இரட்டிப்பு இன்பம் தந்த கவிதை இனிக்கிறது. ஆனால்...
    கல கல பேச்சு நெஞ்சை பறிக்க, சர சர என்று துள்ளி ஓடுவது ஏன்.
    நான் பதில் எழுதுகிறேன். இன்பம் தந்த இனியவளே! இனிக வைத்த இருதயத்தை இரக்கம் இன்றி அழ வைத்து, அழுத என் மனதை அழுக்காக்கி, அடுத்து என்ன செய்ய என்று ஏங்கும் என் மனதை புண்ணாக்கி, என்னையும் புழுவாக்கி, புதிய உலகம் உருவாக்க நினைத்த என்னை சிலையாக்கி, சிதைத்து விட்டு இன்னும் நீ கல கல என சிரிப்பது ஏனோ! உண்மையில் எங்கே வசனத்தை தொடக்கி னேன் என்று மறந்து போச்சு....... ம்...

    ReplyDelete