கொரோனாவும் சாத்திரிமாரும்
இந்தக் கொரோனா வந்ததும் வந்தது, சாத்திரிமாரும் தாங்கள் ஏற்கனவே துல்லியமாகக் இதன் வரவைக்  கணித்துச் சொல்லியிப்பதாக பெயர் எடுக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சாத்திரம் என்பது ஊகிக்கும் திறமையே ஒழிய இதுவரை ஒருவர்தானும் சரியாக எந்த விடயத்தையும் முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

இதற்கு முன்னர் என்ன நடந்தது; இப்பொழுது என்ன நடக்கிறது; எனவே நாளை என்ன நடக்கச் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஒரு குத்துமதிப்பில், மேலெழுந்தவாரியாகச் சொற்பதங்களைப் பாவித்து ஜோசியம் கூறிவிட்டுச் சென்று விடுவார்கள்.

2020 வருடம் பிறக்கும் முதல், பல இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற 2020 வருடத்திற்கான பலன்களைப் பற்றி, ஜோதிட பண்டித சிகாமணிகள் பலரும் ஒன்றாகக் கூறிய விடயம்:

"மிகச் சிறந்த ஒளிமயமான, பிரமாண்டமான, ஐஸ்வரியம் நிறைந்த, அற்புதமான, குதூகலம், பொருளாதாரம், விவசாயம் ஓங்கிய, கொடிய நோய், நொடி ஒன்றுமே அற்ற, இயற்கைக் சீற்றம், பேரழிவு ஒன்றும் இல்லாத அற்புத ஆண்டு"

புயல், வெள்ளம், என்று சமீபத்தில்தானே வந்தது; கிரக நிலைகளும் நல்ல விதமாகத்தானே சொல்கின்றன; அப்படி ஒரு பெரு நோயும் இந்த வருடம் வராது என்று  தப்புக் கணக்கு  போட்டு விட்டனர். சொன்னது எல்லாமே வெறும் பொய் மூட்டைகளே!

வெறும் தப்புத் தப்பாய் சொன்ன ஜோதிடர்கள் எல்லாம் ஒழித்து விடுவார்கள்; மௌனிக்கப்பட்டுவிடுவார்கள். எவர், எவர் குத்து மதிப்பாக ஒரு சில சொற்களை, நடக்கும் சம்பவத்தோடு தொடர்பு படுத்தி, இணைக்கக்கூடியதாக சொல்லி இருந்தார்களோ, அவர்கள் வெளியில் வந்துவிடுவார்கள். பிரபல்யப் படுத்தப்பட்டு விடுவார்கள்.

உதாரணமாக, 2021 பற்றி ஒரு 100 ஜோதிடர்மாரிடம் கேட்டால், 100 விதமான பதில்கள்  கிடைக்கும்.
ஒரு ஜோதிடர் சொல்வார்: தை  மாசம்  வானில் சேதம் என்று.
2 ஆவது ஜோதிடர் சொல்வார்:  பெரு வெள்ளம் வரும் 
3 ஆவது ஜோதி:  ஒரு புது நாடு உருவாகும்.
4 ஆவது ஜோ: பெரும் வியாதி தாக்கும்
5 ஆவது :பொருளாதாரம் 15% ஆல்  உயரும்.
6.ஆவது இயற்கைப் பேரழிவு இருக்காது.
.......
68 ஆவது: மனிதன் உருவாக்கிய சாதனத்தால் பேரழிவு.
........
100 ஆவது: உலக யுத்தம்.

இப்படியே 100 பேரும் 100 விதமாகக்  'கணித்து' கூறுவர்.

சரி, இப்பொழுது 2021 இல், ஒரு பேச்சுக்கு, வட கொரிய ஏவுகணை அமெரிக்காவில் வெடித்து 10,000 பேர் இறந்தால், அல்லது கப்பல் ஒன்று மூழ்கி பிரேசிலில் 4,000 பேர் முடிந்தால், அல்லது மின் அணு நிலையம் வெடித்து 20,000 பேர் ரஸ்சியாவில் உருக்குலைந்தால், அல்லது அணை ஒன்று உடைந்து ஓர் இந்திய நகரத்தையே மூழ்கடித்தால் என்ன நடக்கும்? 

ஒட்டு, மொத்த 99 சாத்திரிமார்கள் எவரையும் பற்றி ஒருவரும் கதைக்க மாட்டார்கள். சொன்னாரே சாடை, மாடையாய்  அந்த 68 ஆவது நபர், 'மனிதன் உருவாக்கிய  சாதனத்தால் பேரழிவு '  என்று  அவர்தான் ஜோதிடத்தின் ஹீரோ என்று ஆக்கிப் போடுவார்கள். அவரும் முன்னே வந்து பல வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொள்ளுவார்.

இப்படித்தான் கொக்கத்தடி போட்டு வலிய இழுத்து, வில்லங்கத்திற்கு ஒட்டவைத்து, இல்லாத ஒன்றை 'இதைத்தான் அவர் அப்படிச் சொன்னார்' என்று நம்பிவிடுவார்கள்.

சிலர் சில விடயங்கள் தங்கள் வீட்டிலே நடைபெறுமா என்று கேட்டு  ஜோதிடரிடம் போவார்கள். அவரும் சொல்லுவார், நீங்கள் இத்தனை நாட்கள், இப்படி விரதம், இவருக்கு இருந்தால் வருட முடிவில் பலன் கிடைக்கும் என்பார். அனால், ஒன்றும் நடக்காது. அடுத்த வருடம் இன்னொரு ஜோதிடரிடம் போவார்கள், அவர் இன்னொரு பரிகாரம் சொல்வார். செய்வார்கள்; பலனில்லை. மூன்றாம் வருடம் இன்னொருவர்; விளக்கெரித்தல், பலனில்லை. 4 ஆவது ஜோதிடர், சீரடி பாபா, 5 ஆவது: சத்திய சாய், அம்மன், 6 ஆவது ஜோதிடர் வியாழன் பூசை, இடையில் மாதா, ஜேசு, கந்த சஷ்டி, எண்ணெய் சட்டி, பால் செம்பு  என்று எல்லாம் நடக்கும்.

கடைசியில் 12 ஆவது வருடம் அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது என்றால், சரியாகத் துல்லியமாகக் கணித்து பரிகார வழிமுறை பகர்ந்த  ஜோதிட பண்டிதர், அந்த 11 ஆவது சாத்திரியார்தான்! அவர்தான் சொன்னவர் பிரேம குமாரியிடம் ஏழு கிழமை சென்றால் 8 ஆவது கிழமை சரிவரும் என்று. ஆதலால், இந்தச் சாத்திரமும், அந்தக் கடவுளுக்குத்தான் உண்மையானவை என்று நம்பிவிடுவார்கள்.

இவ்வளவும், கொரோனா பற்றி எதிர்வு கூறிய அந்த இந்தியச் சிறுவன்  சாத்திரியார் பற்றிச் சற்றுக் கூறுவதற்காகத்தான்!

இந்தச் சிறுவன், ஏதோ அப்படியே சரியாகச் சொல்லிவிட்டதாக அவனும் உரைக்க, மக்களும், சமூக, தொடர்பு  சாதனங்கள் மூலம் பிரமாண்டமான அளவில் பரப்புரை செய்து அவனை ஒரு பெரிய மேதை ஆக்கிவிடடார்கள்.

அவன், ஆகஸ்ட் மாதம் 2019 இல் வெளியிட்ட காணொளி ஒன்றில், பெரிய ஒரு வெண்பலகையிலே, WW 3 (மூன்றாவது உலக மகாயுத்தம்) என்று பெரிய கொட்டை  எழுத்தில் எழுதிவைத்துக்கொண்டு, அப்படி ஒரு யுத்தம் வரும் என்ற எதிர்பார்ப்பில் பலவிடயங்களைக் கதைத்துள்ளான்.

அமெரிக்கா, சீனாவுடன் முறுக்கிக்கொண்டு, ஈரான் மீது பாய்ந்துகொண்டு, வடகொரியாவால்  சங்கடப் பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் எதிர்பார்த்தது ஒரு உலக யுத்தம் மட்டும்தான். பாவம், விடயம் வேறு விதமாகப் போய்விட்ட்து.

அவன் 'எதிர்வு' கூறியதாகச் சொல்லப்பட்ட விடயங்கள், அவன் கூறிய அதே வசனங்களின்படி:

"நவம்பர் 2019 - ஏப்ரல் 2020 காலத்தில், முழு உலகத்திற்கும் ஒரு பேரழிவு வரும்; சீனா மிகவும் பாதிக்கப்படும்; போக்கு வரத்து, முக்கியமாக விமான நிறுவனங்கள் பாரிய தாக்கத்தை எதிர்கொள்ளும்; எண்ணெய் வளம் மற்றும் பண வளம் படைத்த நாடுகள் இந்த 'யுத்தத்தினால்' கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். உலகை இந்த நிலையில் இருந்து காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் ”

இதில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது பெரும் நோய் ஒன்று வந்து உலகமெல்லாம் பரவும் என்று? உலக யுத்தம் ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு தோற்றுப்போன ஜோதிடம் ஒன்றுதான் இது. இதில் ஆச்சரியப்பட ஒரு சின்ன விடயமும் இல்லை.

அதே பையன், தான் சொன்னது அப்படியே நடந்துகொண்டு இருக்கிறது என்று நியாயப்படுத்த வெளியிட்ட காணொளியில், ஏப்ரல் 2020 வரை என்பதை மறந்து, மார்ச் கடைசியில் இந்த நோய் உச்சம் கண்டு, பின்னர் உக்கிரம் குறைந்து போய், மே கடைசியில் ஒழிக்கப்பட்டுவிடும் என்று கூறுகிறான்.  ஜூன் மாசம் திரும்பவும் வந்து சொல்வான், அந்தக் கிரகம், இந்தக் கிரகத்தைப் பார்த்ததால் இன்னும் ஆறு மாசம் செல்லும் என்று.

நடப்புகளை கவனித்து எவ்வளவு காலம் செல்லும் என்று கூற எவராலும் முடியும், இதற்கு ஒரு ஜோதிட பண்டிதர் தேவையே இல்லை.

ஆதலால், இந்த சாத்திரிமார் உழைக்க அவர்கள் வாடிக்கையாளர்கள் செல்கிறார்களோ இல்லையோ, இவர்கள் போடும் யூ ட்யூப் வீடியோக்களை இலட்ஷக்கணக்கான மக்கள் பார்ப்பதால், யூ ட்யூப் நிறுவனம் தாராளமான தொகையை சன்மானமாக இவர்களுக்கு வழங்கும் என்பது உண்மை.

கோரோனோவை வைத்து சில நிபுண ஜோதிடர்கள் பணம் சம்பாதிக்க, பல ஜோதிடர்கள் மௌனமாக இருக்கவேண்டி வந்துவிட்டதே!
அவர்களைப் பொறுத்தவரையில் வந்த வைரஸின் கவலையை விட, அருமையான ஒரு சந்தர்ப்பத்தினை தவறவிட்ட கவலைதான் அவர்களுக்கு அதிகமாக இருக்கப்போகிறது.

✍செல்வதுரை,சந்திரகாசன்

1 comments:

  1. எங்கயாடா காணவில்லை, புகழ்மிகு சாத்திரியாரின் அடுத்த update?

    ReplyDelete