கொரோனாவும் கோவிலும்


சீனாவில் ஆரம்பித்த [covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி ,மதம்  , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே  உயிரிழப்புக்களின் மத்தியில்   ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.

 சீனாவில் இந்நோய் ஆரம்பித்த வேளையில் , எங்கள் மதத்தினை சேர்ந்தவர்களை சீனா செய்த சித்திரவதைக்கு இறைவன் பழிவாங்குகிறான் என்று ஒரு சாராரும் , எங்கள் இனத்தை அழித்ததிற்கு கடவுள் பழிவாங்குகிறான் என வேறொரு சாராரும் , அறியாமையினால் அலட்டிக்கொண்டதையும் தாண்டி ,    உலகம் முழுவதும் சகல இன ,மத மக்களையுமே  பதை பதைக்க வைத்துள்ளது இந்த புதுவகை வைரசு.

உலகில் நோய் பரவலைத் தடுக்கும் நோக்காக ,மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில்   ஆலயங்கள் தேவாலயங்கள் ,பள்ளி வாசல்கள்  கூட தப்பவில்லை என்பது மேற்படி வழிபாட்டு நிலையங்களே கெதி என்று நம்பிவாழும் மக்கள் மத்தியில்   ஆச்சரியங்களும் ,கேள்விகளும் ,ஏமாற்றங்களும் ஏற்படுவதற்கு இவ் வைரசு காரணமாக இருந்துவிட்டது.

என்னதான் சமாதானம் கூறி  ஆலயங்களையும்,அங்கே கடவுள் எனக்குறிப்பிடப்படும் சிலைகளையும் காப்பதற்கு மதவாதிகள் எப்படித்தான் கருத்துக்கள் கூற முனைந்தாலும் கோவில்களைப் பூட்டியதன் மூலம் ,அங்கே கடவுள் வீற்றிருப்பதாகக் கூறப்படும் சிலைகளை விட ,வைரசு பலம் மிக்கது என்பதனை மக்கள் முன், அடைக்கப்பட்ட கோவில்கள்,சிலைகள்  மூலம் வைரசு நிரூபித்துவிட்டதா? என்ற கேள்வியும் மக்களிடம் எழாமலில்லை.

காடுகளில் வழமையான உணவுகளில் மாற்றமின்றி ,இயற்கை உணவுடன் உடல் நலத்துடன் வாழக்கூடிய / வாழ்ந்துவரும் மிருகங்களை  , இறைச்சிக்காக கூண்டுகளில் அடைத்து , மனிதன் தயாரித்த இரசாயனம் கலந்த உணவுகளை ஊட்டி பல் விதமான நோய்களை உருவாக்கி தன் இனத்திற்கே கேடு விளைவித்துக் கொண்டிருப்பவன் மனிதன்.

காலத்திற்கு காலம் தன் உணவுமுறைகளை மாற்றி ,மாற்றி உலகில் எல்லா உயிரினங்களையும் தன்னால் விழுங்க முடியும் என்று சாதித்துக் காட்டியவன் மனிதனே.

ஆன்மிகத்தின் அத்திவாரத்திற்காக ஆரம்பித்த மதங்கள் சில  , புலால் உண்ணலை மறுத்தபோதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப விரதம் என்ற பெயரில் ,ஏனைய  நாட்களில் எதனையும் விழுங்கலாம் என தத்துவம் கூறி பக்தி மார்க்கத்தினை நோயாளி ஆக்கியவனும்  மனிதனே.

மனிதனின் ஆன்மா ஈடேற்றத்திற்காக ஆரம்பித்த மதங்களெல்லாம் , நோக்கத்தினை   மறந்து மதவாதிகளின் ஏற்றத்திற்காக , மக்கள் போராடும் /பலிக்கடாவாகும் நிலைக்கு தள்ளப்பட்டது மனிதகுலத்தின் துர்ரதிஷ்டம் என்றே கூறவேண்டும். மக்களின்  மூளைகள் கவர்ச்சிகரமான வார்த்தைகளால் கழுவப்பட்டு அல்லது பயமுறுத்தப்பட்டு மதவாதிகளினால் , தங்கள் சுய நலம் கருதி மனித குலம் வேறு திசையில் திருப்பப்பட்டதன் விளைவு மக்கள் இன்று பக்தி மார்க்கத்தில் ஏமாற்றத்தினை சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

உலகில் யுத்தகாலத்திலும்  ,இயற்கை அழிவிலும் இறந்து பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அழிந்துபோன ஆலயங்கள் எத்தனை? புரியவில்லையா? இருந்தும் மத மயக்கத்திலேயே பெரும்பாலான மக்கள் இன்னும்  மூழ்கிக் கிடக்கிறார்கள் . புரிந்தாலும் அதிலிருந்து வெளிவர இறைவன் தண்டிப்பான் என்று வேறு கூறுகிறார்கள். அப்படியானால் இறைவன் பொல்லாதவன் என்பது உங்கள் முடிவா? இறைவனை நன்கு புரிந்துகொண்டால் மட்டுமே மனிதனுக்கு விடிவு உண்டு.

சக்தி, இயேசு , அல்லா   என்று பாடிய பாரதியும் , உலகை உணர்ந்தபின்   ''உண்மையின் பேர்தெய்வம் என்போம் '' எனும் பாடலில்

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம். என்கிறார்.

மேலும், சித்தர்களும் அந் நிலை அடையமுன் ஆலயங்களை நோக்கிப் பாடியவர்கள்தான். சித்தர்நிலையில் இறைவனை உணர்ந்து பாடிய பாடல்களில் 

 நட்ட கல்லை சுற்றி வந்து
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொ ணென்று
சொல்லும் மந்தரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளி ருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ!
என ப்பல பாடல்களின் மூலம் உணர்ந்து  பாடியவர்  சித்தர் சிவவாக்கியர்

சித்தர்களின் கருத்துப்படி அடுத்தவன் கூறியோ ,அல்லது புத்தகத்தில் படித்தோ ,இரவல் அறிவில் இறைவனை நீ உணரமுடியாது.அல்லது   அற்புதங்களையோ  ,சித்து ,மாயாஜால விளையாட்டுகளையோ செய்பவன் இறைவனாக முடியாது. இவையெல்லாம் மதமாற்றத்திற்காகவும் , இலாப நோக்கத்திற்காகவும் மதங்களுக்குள் மதவாதிகளினால் பிணைக்கப்படடவை ஆகும்.

 இந்தியாவுக்கு வெளியே மந்திர,தந்திர வித்தைகள் தெரிந்தவர்கள் வித்தைக்காரர்களாகவே நோக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கடவுளாக்கப்படுகிறார்கள்.  கடவுளிடம் இருந்து அருளைப்பெற சுலபமான வழியாக பிராமணர்களையும், சுவாமிமார் எனப்படுவோரும் நல்ல தரகர்களாக இருப்பதாக நம்பியதால்    மக்கள் இறைவனைத் தேட முயற்சிக்கவும் இல்லை, உணரவும் இல்லை. எனவே பக்தி மார்க்கம் பூச்சிய நிலையை அடைந்தது. 

உங்களுக்குள் ஒருவன் அனாதையாக இருக்கிறான்.அவனை நீங்கள் மதிப்பதில்லை. அவன் கட்டளை களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஒரு மதவாதி /பூசாரி  சொல்வதனை மட்டும் கவனமாக செவிமடுப்பீர்கள். அதற்காக எங்கெங்கு எல்லாம் அலைகிறீர்கள்!  வழிபாடு, நேர்த்தி என்ற பெயரில் என்னவோ எல்லாம் புதுசு புதுசாய், விதம் விதமாய்  செய்கிறீர்கள்!

ஆலயம் எது? இறைவன் எங்கு? என திருமூலரும் தனது பாடலில்
 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
                                                -ஆசான் திருமூலர்
என அழகாகக் கூறுகிறார்.

 உங்கள் உள்ளத்தினையும் , உடம்பினையும் , வாயினையும் தூய்மையுடன்,உனக்குள் இருப்பவனை நீ உணர்ந்து அறிந்து , சீவனை இறைவனாய் உலகில் ஒவ்வொருவனும் உணர்ந்திருந்தால் உலகம் அமைதி பூங்காவாக மலர்ந்திருக்கும் என்பது மட்டுமல்ல இந்த கொரோனா என்ற பெயருக்கே உலக வரலாற்றில் இடமிருந்திருக்காது.

✍செ.மனுவேந்தன்


7 comments:

 1. குகதாசன் இணுவில்Tuesday, March 17, 2020

  மறைமுகமாக நீங்கள் அருவ வழிபாடினையே கூறியுள்ளீர்கள் . அருமை

  ReplyDelete
 2. K.கணேசன்Tuesday, March 17, 2020

  இன்று ஆலயங்களில் இடம்பெறும் குத்துக்கரணங்களை நோக்கும் போது அங்கே கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில்தான் பூசாரிகளும், கோவில் முதலாளிகளும் இந்த ஆட்டம் ஆடுறாங்கள். இது மக்களுக்கு எங்கே புரியப்போகிறது?

  ReplyDelete
 3. Nageswary UruthirasingamTuesday, March 17, 2020

  சமய வழிபாட்டு முறைகள் பற்றிய நிறை சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருப்பது உண்மைதான். எனினும் இப் பிணைப்பில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒரு செயல் தான்.இந்த கலியுகத்தில் இறைவழிபாட்டிக்கு எதிரான அறிவிற்கு சவாலான நிறைய விஷயங்கள் வரும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேவார திருப்பதிகங்களில் எவ்வளவோ கருத்தாளம் மிக்க கருத்துகள் பொதிந்து கிடக்கிறது. திருமூலரின் திருமந்திரத்தில் இறைவர்கொரு பச்சிலை. ....
  பல சில நிகழ்வுகள் கடவுள் என்ற நிலையின் நம்பிக்கைக்கு அப்பால் பட்டதாகவே உள்ளது. தீ மிதித்தல் ஆணிப் பாதணியில் நடத்தல் தீச் சட்டி .......இப்படி....நிறைய.நான் சிவாகமம் என்ற ஒரு நூலை படித்துக் கொண்டிருந்தேன். அதன் 75 வீதம் வாசித்துக் கொண்டிருக்க 7 கடல்கள் பற்றிய பகுதி வந்து. அதாவது பால் கடல் , நெய் கடல் ...இப்படி. நான் நினைத்தேன் பாலில் இருந்து தான் நெய் எடுக்கப் படுகிறது. அப்படி இருக்க இதென்ன நெய் கடல் ! அந்தப் புத்தகத்தை அதற்கு மேல் வாசித்தால் தாங்காது என்று மூடி வைத்து விட்டேன். பின் திருமந்திரப் புத்தகத்தை எடுத்து 30வீதம் வாசித்து கொண்டு வர சில அந்தரங்கமான விபரங்கள் பற்றி இருந்தது .ஒரு முறை புத்தகத்தை புரட்டி முன் மட்டையைப் பார்த்தேன்.பின் தோழியிடம் இதைப்பற்றி கலந்துரையாடினேன் .மனித வாழ்வுக்கு அவசியமானது அனைத்துமே திருமந்திரத்தில் உள்ளது. பொறுமையாக தியான சிந்தனையுடன் வாசியுங்கள் என்றார்.முகநூல் திறந்த பின் திருமந்திரமும் திறப்பது அரிது. மனித வாழ்வில் மாற்ற வேண்டிய மாற வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது தான்.......கட்டுரை அழகாக சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. பரந்தாமன்Tuesday, March 17, 2020

  ஆரியர்களின் எந்தவிதமான கூத்துக்களுக்கும் இணங்கிப் போகும்போது இல்லாத பயம் உண்மைகளை ஒத்துக்கொள்ளக் கடவுளுக்கு பயப்பிடுவது விசித்திரமானது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் ,கடவுளையும் கல்நெஞ்சனாய் காட்டும் மனிதர்களும் உண்டு. அதனால்தானோ கல்லாய் சமைத்து வணங்குகிறார்கள்.

  ReplyDelete
 5. காந்தன்Tuesday, March 17, 2020

  இயேசு அப்பாவின் இத்தாலி, வத்திக்கான், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன; அல்லாவின் மெக்காவும், இரான், சவுதி என்ற மத்திய கிழக்குகளும் மூடியாச்சு. இந்தக் கோவிலுகளும் மூடியாச்சுது.

  எல்லாம் வரும் பக்தர்களை பாதுகாக்கவா அல்லது அவரவர்களின் கடவுள்மார்களுக்கு வைரஸ் தொத்தி அவர்கள் இறந்துபோகாமல் காப்பாத்தி வைச்சுக்கொள்வதற்காகவா?

  அவர்கள் இருந்தால்தானே மக்களைத் தொடர்ந்து காப்பாற்ற ஏலும்!

  ReplyDelete
 6. காந்தன்Tuesday, March 17, 2020

  ஜேசு அப்பாவின்ரை வத்திக்கானும் மூடி, இத்தாலியும் மூடி, ஐரோப்பா முழுவதும் மூடியாச்சு!

  அல்லா அண்ணையின்ரை மெக்காவும் மூடி, ஈரான், சவூதி மத்திய கிழக்குகளும் இழுத்து மூடியாச்சு!

  வெளிநாடுகளில் எழுந்தருளி இருந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் இந்து கடவுளுக்களையும் மூடியாச்சு!

  ஏனென்றால், இந்தக் கடவுளுக்களுக்கு கொரோனா பிடிச்சு செத்துப் போனால் பிறகு ஆர் மக்களைக் காப்பாற்றுவது என்று முதலில் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் எல்லாப் பக்தர்களும்!

  ReplyDelete
 7. சொந்த மூளையில்லாதவர்களே ,அடுத்தவன் பேச்சுக் கேட்டு மயங்குகிறார்கள். மதங்கள் மாறி,மாறி இறைவழிபாட் டையும், அரசியல்கட்சி போன்று இறைவனையும் கேவலப்படுத்திக்கொண்டு ,அடுத்தவன் கூறிய கருத்துக்களை சுமந்துகொண்டு திரிவதன் மூலம் ,தாம் சொந்தப் புத்தியில்லாதவர்கள் என சமுதாயத்தின் முன் நிறுவுகிறார்கள். இவர்களால் நாட்டிலும் ,வீட்டிலும் அமைதியில்லை. உங்கள் கருத்தில் ஒவ்வொருவனும் தனக்குள் தேட ஆரம்பித்தால் ,மதவாதம் ஒழிந்துவிடும்

  ReplyDelete