பழம் நீ அப்பா! -சிறுகதை



"இற் இஸ் மெடிக்கல் மிறாக்கிள்" என்று கூறிக்கொண்டு வெளியில் வந்த டொக்டரை அங்கு காத்துக்கொண்டு நின்றவர்கள் கவனிக்கவே இல்லை.

உள்ளே கழுத்தெலும்பு முறிவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கதிரேசனுக்கு என்ன ஆகுமோ என்று அந்தரப்பட்டு, அழுதுகொண்டிருக்கும் அவன் அம்மாவை, அப்பா சிவகுருவும், அண்ணன் கணேசனும் ஆறுதல் கூறிக்கொண்டிருக்க, மறு பக்கத்தில் கதறிக்கொண்டு இருக்கும் கதிரேசனின் இளைய மனைவியை, மூத்த சம்சாரம் என்னவெல்லாமோ சொல்லித் தேற்றிக்கொண்டு இருந்தார்.

**********

கதிரேசன் உயரமான ஒரு மலை உச்சியில் உள்ள பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவன். அவன் மிகவும் அழகும், வீரமும், அறிவும் உடையவன் என்பதாலோ என்னவோ அழகிய இரு பெண்களுக்குக் கணவனாகியிருந்தான். ஊருக்கு உழைப்பதில் முன்னிற்பவன். மக்களுக்காக வாழ்பவன்.

இம்முறை ஊரில் பருவ மழை பொய்த்ததால் ஊர் மக்கள் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். அதன் நிமித்தம், ஊருக்கு நல்லதையே செய்ய நினைக்கும் கதிரேசனைத் தெரிவு செய்து, அவனுக்கு அளவுக்கு அதிகமாகவே அலங்காரம் செய்து, ஊர் வீதிகள் எல்லாம் வலம் வர வைத்தார்கள். அலங்காரம் என்றால் கொஞ்சம் அல்ல; நிறையவே!

கழுத்துக்குப் பல அடுக்கில் பழ மாலைகள்! முதலில் மாதுளம் பழங்களால் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மாலை. அதன் மேலே மாம்பழங்களினால் அடுத்த அடுக்கில் இன்னொரு மாலை. தொடர்ந்து ஆப்பிள் பழம் , தோடம்பழம், பியேர்ஸ் பழம், வாழைப்பழம், எலுமிச்சம் பழம், திராட்சைப் பழம், செரிப் பழம் என்று ஒன்பது அடுக்கில், பார்த்தவர்கள் 'பழம் நீ அப்பா' என்று கூறும் அளவுக்கு பழ மாலை அலங்காரம்.

இவ்வளவையும் சுமந்துகொண்டு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை, மேள தாளங்களுடன், காவடி ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பொம்மை ஆட்டம்  என்று சூழவர, சேவல் கொடி பிடிக்க, மூன்று ஆண் மயில்கள் தோகை விரித்து நடக்க, கால்களை முன்புறமாகவும், பின் புறமாகவும் ஓடி, இடைக்கிடை இடப்பக்கமும், வலப் பக்கமுமாக ஆட்டி, மேலே தொங்கி, கீழே பதிந்து, சுற்றிச் சுழன்று நடனம் ஆடித் தொடர்ந்து முழு ஊரையும் வலம் வந்ததால், கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் 50 கிலோ நிறையுள்ள பழ மாலைகளின் பாரத்தினால் கழுத்து/முதுகு எலும்புகள் எல்லாம் முறிந்து நொறுங்கி இருக்க வேண்டும். வலி தாங்க முடியாமையினால்தான் அவனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டோடினார்கள்.

**********

வெளியில், அப்பா சிவகுரு, அம்மாவுக்கு ஆறுதல் கூறினார். "கவலைப் படாதே. அவன் நீ தைரியம் கொடுத்து வளர்த்த பிள்ளை. எப்படியும் வழக்கம்போல வென்று வருவான்; அமைதியாய் இரு".

அண்ணன் கணேசன் தன்  தம்பியின் மனைவிமார் கதறுவதைக் கண்டு, தனக்கு இப்படி ஒரு மனைவியும் அமையவில்லையே என்று சிறிது சங்கடப்பட்டார். இன்னும் நிரந்தர பிரமச்சாரி. வயதே போவதில்லை.  தனது மொபைலின் கமெராவை எடுத்துத் தன் மூஞ்சையைப் பார்த்ததும், " சீ.., இந்தப் பெரிய நீண்ட மூக்கோடு... , பானை வயிறும், தோற்றமும்......,சகிக்க முடியவில்லை... எவள் எனது பக்கம் வருவாள்? இனிப்புச் சாப்பிடுவதை முதலில் நிற்பட்ட வேண்டும்; இனிமேல், உந்தப்  புக்கை, மோதகம், அவல் என்று ஒன்றும் இனிப்புச் சாப்பாடு செய்து தர வேண்டாம் என்று அன்போடு உணவு தரும் சனங்களுக்கும் சொல்ல வேண்டும்" என்று நினைத்தபடி,  "என்றாலும், ஊர் மக்கள் என்னைத்தானே என்ன செய்தாலும் முதலில் கூப்பிட்டுக் கூட உதவிக்கு நிற்கச் சொல்வார்கள்" என்று திருப்திப்பட்டார்.

அம்மா, ''இந்தப் பாழாய்ப் போன பழங்களால்தானே இவ்வளவும்.." என்று கண்களைக் கசக்கிக் கொண்டார்.

கணேசன் சொண்டுக்குள் சிறிய முன்முறுவலுடன் "சின்ன வயசில், ஓர் அங்கிள் கொடுத்த உந்த ஒற்றை மாம்பழத்தை, அப்பா, அம்மா எனக்குத் தந்ததனால்தானே உவன் என்னோடு சண்டை போட்டு, உலகமெல்லாம் சுற்றி, கோவித்துக்கொண்டு மலை மலையாய் ஏறிப் போய் ரகளை செய்தவன். இப்போ அதே பழமே அவனை....." என்று நினைத்துச் சிரித்த அடுத்த கணமே, தனது முகத்தைக் கவலையாக மாற்றிக் கொண்டு தாயை நோக்கி "அம்மா, நீங்கள்தான் எங்களுக்குச் சக்தியும், பலமும் தருபவர்; நீங்களே இப்படி நொடிந்துபோனால்...." என்று கூறிச் சமாதானம் செய்ய முனைந்தார்.

**********

இப்பொழுது டொக்டர் அவர்களின் அருகில் வந்து, "ஒன்றுக்கும் கவலைப் படாதேயுங்கோ. இவ்வளவுக்கும் எலும்புகள் எல்லாம் சுக்கு நூறாய் உடைந்திருக்க வேண்டும்; ஆனால், உங்கள் பிள்ளைக்கு ஒருவிதமான முறிவும் இல்லை, சாதாரண மஷெல் பெயின்தான், நீங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகலாம். நீங்கள் கும்பிடுகின்ற கடவுள்தான் அவனைக் காப்பாற்றினார்" என்றார்.

**********

வெளியில் வரும் கதிரேசனை வரவேற்க, அந்தக் கொட்டும் மழையில் ஊர்ச் சனங்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அவனுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தில் முன் வரிசையில் நின்ற 9 பேரிடம் - பழப் பிரார்த்தனை பலன் அளித்தபடியால் - அவனுக்குச் சாத்துவதற்காக பழ மாலைகள் இருந்தன. அதில் கோர்க்கப்பட்டிருக்கும் பழம் பலாப்பழம்!

மாலைகளைக் கண்டதுமே கதிரேசன் அலறி அடித்துக்கொண்டு திரும்பவும் E.D. யில் போய்ப் படுத்தவன் திரும்பி வரவே இல்லை.

நிலைமையைக் கண்ட கணேசன், 'என் தம்பி சார்பில் நான் உங்கள் மாலைகளை அணிகிறேன்" என்று கூறி, எல்லாவற்றையும் யானைப் பலத்தோடு ஏற்றுக்கொண்டார். இதனைத் தூரத்தில் நின்ற எலியொன்று வேடிக்கை பார்த்தது.

பாசக்கார அண்ணனல்லவா? 

:செ.சந்திரகாசன்

[குறிப்பு: பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையான உண்மைகளே(?)]

0 comments:

Post a Comment