‘டீ, காபியுடன் பால் சேர்த்துக் குடிக்க ....'.

- ஐசிஎம்ஆர் அறிவுறுத்துவதன் அறிவியல் பின்னணிதேநீர். இந்தத் தேநீருக்குத்தான் இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ், எத்தனை பாடல்கள், எத்தனை ரசிகர்கள். உடல் நடுங்கும் குளிரில் தொடங்கி கொளுத்தும் வெயில் வரை தேநீருக்காக ஏங்கும் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு வழிகாட்டுதல் அறிக்கையில் அடங்கியுள்ளன.

 

ஏனெனில், காலை எழுந்தவுடன் தேநீர், காலை உணவுக்குப் பிறகொரு தேநீர், மதிய உணவுக்குப் பிறகொரு தேநீர், மாலை ஒரு தேநீர், இரவொரு தேநீர், தூக்கம் வரவில்லையெனில் நள்ளிரவில் தேநீர். இப்படியாக தேநீர் என்பது பலருக்கும் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட பழக்கம்.

 

ஆனால், அது எவ்வளவு ஆரோக்கியமானது? இந்தியர்களுக்கான உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை அதை விளக்கமாகப் பட்டியலிட்டுள்ளது.

 

ஐசிஎம்ஆரின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹேமலதா, உறுப்பினர் செயலாளர் டாக்டர் உதய்குமார் மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பாராவ் எம் கவரவரப்பு, டாக்டர் கே.வி,ராதாகிருஷ்ணா, டாக்டர் அகமது இப்ராஹிம் உட்பட 13 விஞ்ஞானிகள் அடங்கிய கமிட்டி இந்த வழிகாட்டுதல் அறிக்கையைத் தயாரித்துள்ளது.

 

இந்த வழிகாட்டுதல் அறிக்கை, தேநீர், காபி ஆகியவற்றைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் அதீதமாகக் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிவுறுத்துவதாகக் கூறுகிறார் இந்த வழிகாட்டுதல் அறிக்கையை உருவாக்கிய கமிட்டியை சேர்ந்த ஒரு விஞ்ஞானி.

 

தேநீர், காபியை எப்படிப் பருகவேண்டும், அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் பிபிசி தமிழ் பேசியது.

 


சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர், காபி குடிக்கக்கூடாது – ஏன்?

தேநீர், காபி இரண்டிலுமே டன்னின் (Tannin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. "உணவிலிருந்து இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டங்களை உடல் கிரகித்துக்கொள்ளும் செயல்முறையில் இந்த வேதிப்பொருள் குறுக்கிடும்." ஆகையால், உணவு உண்பதற்கு ஒரு மணிநேரம் முன்னரும் பின்னரும் தேநீர், காபி ஆகியவற்றை அருந்தக்கூடாது என்கிறது ஐசிஎம்ஆரின் இந்திய உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை.

 

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் இரும்பு போன்ற நுண்ணூட்டப் பொருட்களை உடல் கிரகித்துக் கொள்ளும் செயல்முறையில் இந்த டன்னின் என்ற வேதிப்பொருள் இடையூறை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்க நாம் இப்படிப் பின்பற்றுவது சரியாக இருக்கும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி.

 

மேலும், வெறும் வயிற்றில் இதைப் பருகுவது சரியா என்ற கேள்விக்கு, அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது என்றும் உணவுக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்வதில் மட்டும் கவனம் தேவை என்றும் கூறினார்.

 

அவரது கூற்றுப்படி, இத்தகைய பழக்கத்தை நீண்டகாலமாக வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மக்களிடையே இதனால் அச்சுறுத்தக்கூடிய வகையிலான பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு வரையிலோ அல்லது உணவுக்குப் பிறகு ஒரு மணிநேரம் வரையிலோ தேநீர், காபி அருந்தும்போது, அந்த உணவில் இருந்து நமக்குக் கிடைக்கும் நுண்ணூட்டங்கள் உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

 

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், “நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட உடனேயே டீ, காபி குடித்தால், அந்த நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், அதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை டீ, காபியில் இருக்கும் டன்னின் என்ற வேதிப்பொருள் உடலுக்குக் கிடைக்காமல் தடுத்துவிடும்.”

 

தேநீரில் பால் சேர்த்துக் குடித்தால் என்ன பிரச்னை?

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும், அதில் கேஃபீன் இருப்பது போலவே தியோப்ரொமைன், தியோஃபில்லின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை உடலின் ரத்தக் குழாய்களைத் தளர்த்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

 

அதுமட்டுமின்றி, “தேநீரில் இருக்கக்கூடிய ஃபிளவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பாலிபினால்கள் இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும்" ஐசிஎம்ஆர் அறிக்கை வலியுறுத்துகிறது.

 

ஆனால், இதற்கு தேநீர் குடிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்யக்கூடாது. அதாவது, தேநீரில் பால் சேர்த்துப் பருகக்கூடாது. அதோடு, தேநீரை மிதமான அளவில் மட்டுமே பருகவேண்டும். அப்படிச் செய்தால், ஐசிஎம்ஆர் அறிக்கைப்படி இந்தப் பலன்களை அவற்றிலிருந்து பெற முடியும்.

 

பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஓர் ஊட்டச்சத்து உணவு எனச் சொல்லப்படும்போது அதை ஏன் தேநீர், காபியில் சேர்த்துக் குடிக்கக்கூடாது என்று ஐசிஎம்ஆரின் இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் கேட்டபோது "பால் நிச்சயமாக நமது உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்" எனக் குறிப்பிட்டார்.

 

ஆனால், “அதை தேநீருடன் சேர்த்துக் குடிக்கும்போது, தேநீரின் நன்மைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.”

 

அதாவது, பாலை தனியாகப் பருகுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இருப்பினும், தேநீருடன் சேர்க்கும்போது, “அதில் அதிகளவில் பால் மட்டுமே இருக்கும். தேநீரின் தனித்துவமான அளவு என்பது குறைந்துவிடும். ஆகையால், அதன்மூலம் கிடைக்கும் பலன்களை முழுதாகப் பெற முடியாது,” என்று விளக்குகிறார்.

 

கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும் பாலின்றிக் குடிப்பதே நல்லது என்று கூறும் அவர், அதற்காக பாலே குடிக்கக்கூடாது என்றில்லை எனவும் கூறுகிறார். “ஒரு நாளைக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் என ஏதாவதொரு வகையில் 300 மி.லி. பால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதை டீ, காபியுடன் சேர்த்துப் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்போதுதான் டீ, காபியின் நன்மைகள் கிடைக்கும்.”

 

ஒரு நாளைக்கு எவ்வளவு தேநீர், காபி குடிக்கலாம்?

இந்த உணவுமுறை வழிகாட்டுதலின்படி, ஒருவர் நாளொன்றுக்கு சராசரியாக 300 மில்லிகிராம் அளவுக்கு மேல் கேஃபீன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஐசிஎம்ஆர் கணக்குப்படி பார்த்தால், ஒருவர் குடிக்கும் ஒரு கப்(150மி.லி) தேநீரில் 30-65 மி.கி. கேஃபீன் உள்ளது. அதுவே ஒரு கப் காபியில் 80-120மி.கி. கேஃபீனும் இன்ஸ்டன்ட் காபியில் 50-65மி.கி. கேஃபீனும் உள்ளது.

 

அதாவது, ஃபில்டர் காபி என்றால் தோராயமாக ஒரு தனிநபர் இரண்டு கப் குடிக்கலாம், இன்ஸ்டன்ட் காபி என்றால் மூன்று அல்லது மூன்றரை கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தனிநபர் அதிகபட்சம் 300 மில்லிகிராம் வரை கேஃபீன் எடுத்துக்கொள்ளலாம்.

 

ஆனால், “கேஃபீனை மக்கள் காபி, டீ மூலமாக மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இல்லை. குளிர்பானங்களில்கூட கேஃபீன் கலக்கப்பட்ட பொருட்கள் உள்ளன."

 

ஆகையால், "காபி, டீ ஆகிய இரண்டை மட்டுமே வைத்து இதைக் கணக்கிடக்கூடாது. பொதுவாக நாம் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் கேஃபீனின் அளவைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்க வேண்டும்,” என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி வலியுறுத்துகிறார்.

 

அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்?

அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் இதயத் துடிப்பில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என்றும் ஐசிஎம்ஆர் அறிக்கை எச்சரித்துள்ளது.

 

அந்த அறிக்கைப்படி, அதிக அளவில் கெட்ட கொழுப்பு சேர்வது, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிக அளவில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கணிசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அதேபோல், கேஃபீன் அடங்கியிருப்பதால் அதிக அளவில் தேநீர் பருகுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறது உணவுமுறை வழிகாட்டுதல் அறிக்கை. காபியை தொடர்ந்து குடிப்பது அதை முழுவதுமாகச் சார்ந்திருக்க வேண்டும் என்ற மனநிலையை ஒருவருக்கு உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

 

அதுகுறித்துப் பேசிய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் குழுவின் விஞ்ஞானி, “காபி குடிப்பது பொதுவாக ஒருவருக்கு அதை அதிகம் சார்ந்திருக்க வேண்டுமென்ற மனநிலையை உருவாக்கும். அதேவேளையில், அதிக அளவில் காபி பருகுவது மற்ற பிரச்னைகளோடும் தொடர்புபடுத்தப்படுகிறது,” என்கிறார்.

 

எடுத்துக்காட்டாக, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிகம் காபி குடித்தவர்கள் இருப்பதைக் காண முடிவதைச் சில ஆய்வுகள் காட்டுகின்றன."

 

"அதற்காக, அதிக அளவில் காபி குடித்தாலே இந்தப் பிரச்னைகள் வந்துவிடும் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இருப்பினும், அந்தப் பிரச்னைகள் இருப்போர் மத்தியில் காபி அதிகம் குடிப்பவர்கள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது,” என்று வலியுறுத்துகிறார்.

நன்றி:க.சுபகுணம்-/-பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment