கோவிட் தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுமா?

முழுமையான விளக்கம்

கொரோனா.

இந்த வார்த்தையை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. 2020, 2021ஆம் ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா, மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் தான்.

 

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும், இந்த பக்க விளைவுகள் ஆபத்தை விளைவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

 

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சிலர், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தற்கு கொரோனா தொற்று காரணம் இல்லை என்றும் , மாறாக கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியால்தான் என்றும் கூறுகின்றனர்.

 

கொரோனா தடுப்பூசி பலருக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர்.

 

இந்த விவகாரத்தில் இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த பக்க விளைவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பது. இரண்டாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய அவசியம் உள்ளதா என்பது.

 

முதலில் இந்த முழு விவகாரமும் எப்படி தொடங்கியது என்பதை தெரிந்து கொள்வோம்.

 

இந்த விவகாரம் பிரிட்டனில் தொடங்கியது... AstraZeneca கொரோனா தடுப்பூசி பாதிப்புக்கு எதிரான முதல் வழக்கு , இரண்டு குழந்தைகளின் தந்தையான ஜேமி ஸ்காட் என்பவரால் கடந்த ஆண்டு தொடரப்பட்டது.

 

AstraZeneca-வின் கோவிட் தடுப்பூசி மூளை பாதிப்பை ஏற்படுத்தியதாக ஜேமி ஸ்காட் வாதிட்டார்.

 

ஏப்ரல் 2021 இல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தனது மூளை சேதமடைந்ததாகவும் கூறினார். இதனால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்கிறார்.

 

தடுப்பூசி போட்ட பலர் சேர்ந்து இந்த மருந்து நிறுவனத்திற்கு எதிராக தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

 

சிலர் தங்கள் உறவினர்களில் பலரை இழந்ததாகவும், பலர் தங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

 

ஜேமி ஸ்காட்டின் வழக்கறிஞர் பிபிசியிடம் பேசும்போது, நீதிமன்றத்தில் AstraZeneca சமர்ப்பித்த ஆவணங்களில், சிலருக்கு சில அசாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

 

இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில், அந்த நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசி 'சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் TTS ஏற்படுத்தக்கூடும்' என்று ஒப்புக்கொண்டது என்றார்.

 

,"சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி TTS ஏற்படுத்தலாம் என்பது ஏற்றுக்கொள்கிறோம். இது எப்படி நடக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை." என அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது.

 

இங்கே தான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. பக்கவிளைவுகள் பற்றி பேசும்போது, TTS/VITT syndrome பற்றி அறிவது முக்கியம். இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் TTS என்பது Thrombosis with Thrombocytopenia Syndrome என கூறுகின்றனர்.

 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு TTS ஏற்படுவதை V.I.T.T அதாவது Vaccine Induced Immune Thrombosis with Thrombocytopenia என கூறுகிறார்கள்.

 

TTS/VITT என்பது அசாதாரணமான ஒரு சின்ட்ரோம். இது Thrombosis மற்றும் thrombocytopenia ஒருசேர நிகழ்வதன் காரணமாக ஏற்படுகிறது.

 

இன்னும் விளக்கமாக எளிமையாக சொல்வதெனில், Thrombosis என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த உறைதல், thrombocytopenia என்பது பிளேட்லட் குறைபாடு.

 

பிளேட்லட் எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.

 

ரத்தம் என்பது நான்கு முக்கிய பொருட்களை உள்ளடக்கியது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லட்.

 

எலும்பு மஜ்ஜையில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களோடு பிளேட்லட்டும் உருவாகும்.

 

பிளேட்லட் சிறியதாகவும், நிறமற்றதாகவும் இருக்கும். நமது உடலில் ஒரு துளி ரத்தத்தில் லட்சக்கணக்கான பிளேட்லட்கள் இருக்கும்.

 

நமது உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால், உடனே அந்தப்பகுதிக்கு பிளேட்டுகள் ஓடிவந்து ஒன்றுசேர்ந்து ரத்தப்போக்கை நிறுத்த உதவும். உடலில் இது இயல்பாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடோ அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஏதேனும் நோய் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் மருந்தின் பக்கவிளைவு காரணமாகவோ உடலில் பிளேட்லட் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அந்த நிலைமையை தான் Thrombocytopenia என Medical Terms-ல் குறிப்பிடுகிறார்கள்.

 

ஆகவே, Thrombosis எனும் ரத்த உறைவும் ஏற்பட்டு thrombocytopenia எனும் பிளேட்லட் குறைபாடு பிரச்னையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மிக அபாயகரமாக இருக்கும், சில சமயங்களில் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

மாரடைப்பு, மூளையில் ரத்த உறைவு, நுரையீரலுக்குச் செல்லும் ரத்த குழாயில் ரத்த உறைவு என Blood Clot காரணமாக உடலின் எந்த பாகத்துக்கு வேண்டுமானாலும் ரத்த ஓட்டம் தடைபடலாம்.

 

ரத்த உறைவு வெவ்வேறு வடிவங்களில் நிகழலாம். தடுப்பூசி போடாத நபர்களுக்கும் இது நிகழக்கூடும்.

 

எனினும், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகுதான் VITT எனும் அரிய பிரச்னை ரத்தம் உறைவு காரணமாக ஏற்படுகிறது.

 

டெல்லி AIIMS மருத்துவமனையில், Clinical Hematology துறையின் இணைப் பேராசிரியராக உள்ள மருத்துவர் முகுல் அகர்வால், இது குறித்து பேசும்போது, விரிவாக விளக்கினார்.

 

மருந்தோ தடுப்பூசியோ எடுத்துக்கொண்ட பிறகு, சில சமயங்களில் உடலில் உருவாகும் சில Anti Bodies ரத்த உறைதல் மற்றும் பிளேட்லட் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. எனினும் இது அரிதினும் அரிதான Syndrome` என்றார்.

 

மேலும், 'ஹெப்பரின்' என்ற மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த TTS பிரச்னை தொடர்புபடுத்தப்படுகிறது. தடுப்பூசியோடும் இந்த பக்கவிளைவு தொடர்புபடுத்தப்படுகிறது.

 

பொதுவாக ஹெப்பரின் மருந்தோ, தடுப்பூசியோ எடுத்துக்கொண்டால், சுமார் ஒன்றரை மாதங்கள் வரை ஏதேனும் தீவிர பக்கவிளைவு ஏற்படுகிறதா என கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

 

இந்நாட்களில் ஹெப்பரின் மருந்து காரணமாக சிலருக்கு இந்த பக்கவிளைவு பிரச்னை வருவதை பார்க்கிறோம். ஆனால் தடுப்பூசியால் அல்ல.

 

ஹெப்பரின் மருந்து யாருக்காவது கொடுக்கிறோம் எனில், அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு ரத்த உறைதலை தடுக்கும் மருந்தும் தரப்படும் என்றார்.

 

ரத்த உறைவு, பிளேட் குறைபாட்டின் அறிகுறியை பற்றி மருத்துவர் விளக்கினார். நமக்கு காலில் ரத்த உறைவு ஏற்பட்டால் வலி, வீக்கம் ஏற்படும். மார்பில் ரத்த உறைவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருக்கக்கூடும்.

 

மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது எனில் தலைசுற்றல், தலைவலி, பார்வை பிரச்னை, வலிப்பு, சுய நினைவை இழப்பது போன்றவை ஏற்படலாம். பிளேட்லட் குறைபாடு ஏற்பட்டால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்றார் மருத்துவர் முகுல் அகர்வால்.

 

இப்போது அடுத்த முக்கியமான கேள்வி என்னவென்றால்தடுப்பூசி போட்டு ஓரிரு ஆண்டுகள் ஆன பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா? என்பதுதான்.

 

2023 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய Thrombotic Thrombocytopenia Syndrome என்ற ஒரு அரிய பக்க விளைவு பற்றி பேசியது.

 

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய பொது சுகாதார கொள்கை நிபுணர் டாக்டர் சந்திர காந்த் லஹரியா, ` தடுப்பூசியின் கூறுகள் நமது ரத்தத்தில் சென்று, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, ஆன்டிபாடிகளை உருவாக்கி, நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன மற்றும் நோயை எதிர்த்து போராட தயார்படுத்துகின்றன.

 

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே சிலருக்கு ஒவ்வாமை, பக்க விளைவுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

உடல் வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம், சில சமயங்களில் அரிதினும் அரிதான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். ஆனால், யாருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்துகொள்வது கடினம்.

 

எந்தவொரு அரிதான பக்க விளைவும் கூட பொதுவாக 6 வாரங்களுக்குள்ளாகவே தெரிந்துவிடும்.

 

ஆறு வாரங்களுக்குப் பிறகு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது மருந்து அல்லது தடுப்பூசி காரணமாகதான்ஏற்படுகிறது என்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

 

எனவே, யாராவது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசியைச் எடுத்துக்கொண்டிருந்தால், கவலைப்பட தேவையில்லை என்றார்.

 

தொடர்ந்து பேசிய மருத்துவர் சந்திரகாந்த் லஹரியா, ` ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது என மக்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்தேன். இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக கூற இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது.

 

கோவிட் பரவல், ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். கோவிடுக்கு பிறகு, சிலர் தங்களை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டனர். இது அவர்களின் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

ஒருசிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே உடலில் ஏதாவது மருத்துவப் பிரச்னைகள் இருக்கக்கூடும்.

 

தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரியளவில் உள்ளன. எனவே, அதுபோன்ற வீடியோக்களை தொடர்ச்சியாக காண்கிறோம்.

 

எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் புறந்தள்ளக் கூடாது என்பது உண்மைதான், ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தால், அது குறித்து அறிவியல்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் நாங்கள் அது குறித்து கருத்து எதையும் சொல்ல முடியாது என்றார்.

 

உங்கள் உடலில் ஏதேனும் விசித்திரமாக உணர்ந்தால், அதை அலட்சியம் செய்ய வேண்டாம். உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்` என அவர் கூறுகிறார்.

நன்றி:பிபிசி தமிழ் பிரிவு 

0 comments:

Post a Comment