விஞ்ஞானம் வழங்கும் விந்தை

 

அறிவியல்=விஞ்ஞானம்

灬முடி வளர்ச்சிக்கு புது வழிமுறை

நவீன யுகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தலைமுடி சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. முடி உதிர்வைத் தடுக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் அம்மா செய்யும் செம்பருத்தி எண்ணெயில் துவங்கி, அமேசான் காட்டின் அரியவகை மூலிகை வரை பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தான் ஜப்பானைச் சேர்ந்த யோகோஹாமா பல்கலை, லவங்கப்பட்டையில் இருக்கும் சின்னமிக் அமிலம், முடி வளர்ச்சிக்கு உதவும் எனக் கண்டுபிடித்துள்ளது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் லவங்கம் ஏற்கனவே பயன்பட்டு வருகிறது.

ஆக்ஸிடாக்சின் எனும் ஒரு ஹார்மோன் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், இதைத் தோல் வழியாக முடி வேர்களுக்குள் செலுத்துவது சுலபமல்ல. ஆனால், சின்னமிக் அமிலத்தால் முடிவேர்களுக்குள் ஊடுருவ முடியும். எனவே, இந்த அமிலத்தை 10 நாட்கள் முடி வேர்கள் மீது செலுத்திச் சோதித்துப் பார்த்தார்கள். 8 நாட்களிலேயே முடி வளரத் துவங்கியது.

இந்த அமிலத்தை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும், இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்ற விஷயங்கள் எல்லாம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளன. ஆய்வு முடிந்ததும் சின்னமிக் அமிலம் கலந்த முடி வளர்ச்சிக்கான அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டிற்கு வரும்.

அவ்வளவு துாரம் பொறுமை இல்லாதவர்கள் சின்னமிக் அமிலம் நிறைந்துள்ள முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிப்ளவர், கோகோ, திராட்சை உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

  ➖➖➖➖➖

🚈ஹைட்ரஜன் எரிவாயு ரயில்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு ரயில் தயாரிப்பு நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் ரயிலை வடிவமைத்துள்ளது. ஒரே ஒருமுறை எரிவாயுவை நிரப்பி 2,803 கி.மீ. துாரத்தை, 46 மணி நேரங்களில் கடந்துள்ளது. இதன் வாயிலாக இந்த ரயில், அதிக துாரம் பயணம் செய்த ஹைட்ரஜன் எரிவாயு ரயில் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

  ➖➖➖➖➖

🐖பன்றியின் சிறுநீரகம்

மருத்துவவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை எடுத்து 62 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர். பொருத்துவதற்கு முன்பாகப் பன்றியில் உள்ள சில மரபணுக்களை நீக்கி, மனிதர்களுக்கான மரபணுக்களை அதில் சேர்த்தனர்.

  ➖➖➖➖➖

🧠அல்சைமர்

நினைவுக் குறைபாடு ஏற்படுத்தும் மூளை நோயான அல்சைமர் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அமிலாய்டு புரதங்கள் மூளைத் திசுக்களில் படிவதுதான். இவ்வாறான படிதலுக்கும் PDE4B எனும் நொதிக்குமான தொடர்பை இங்கிலாந்தைச் சேர்ந்த லான்காஸ்டர் பல்கலை கண்டறிந்துள்ளது. இந்த நொதி உடலில் உற்பத்தியாவதைத் தடுத்தால் கட்டிகள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  ➖➖➖➖➖

☾நிலவுக்குத் தாவரங்கள்

அமெரிக்காவின் நாசா 2026ம் ஆண்டு நிலவுக்குத் தாவரங்களைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. நிலவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசையில், அங்குள்ள மண்ணில் தாவரம் எவ்வாறு வளர்கிறது என்று ஆராய்வதே இதன் நோக்கம்.

  ➖➖➖➖➖

🌏பூமியின் சுழற்சி

புவி வெப்ப மயமாதலால் துருவத்தில் பனிப்பாறைகள் உருகுகின்றன. இவ்வாறு உருகுவதால் பூமியின் சுழற்சி வேகம் மாறுபடுவதாகவும் அதனால் ஒரு நாளின் நீளம் அதிகரிப்பதாகவும் அமெரிக்காவைச்

சேர்ந்த கலிபோர்னியா பல்கலை கண்டறிந்துள்ளது.

  ➖➖➖➖➖

🪟ஒளியை மட்டும் அனுமதிக்க…

அமெரிக்காவைச் சேர்ந்த நோட்ரே டேம் பல்கலை வெப்பத்தைத் தடுத்து ஒளியை மட்டும் அனுமதிக்கும் படலத்தை உருவாக்கியுள்ளது. இதை ஜன்னல்களில் ஒட்டிவிட்டால் ஒளியில் உள்ள வெப்பத்தை ஏற்படுத்தும் புற ஊதா, அகச்சிவப்புக் கதிர்களை வடிகட்டிவிடும். இதன் வாயிலாக வீடு, அலுவலகங்களில் குளிரூட்டிகள் இல்லாமலேயே குளிராக வைத்திருக்க முடியும்.

  ➖➖➖➖➖

🤕புதிய எம்.ஆர்.ஐ.

மனித மூளையை மிகத் தெளிவாக ஸ்கான் எடுக்கக்கூடிய புதிய எம்.ஆர்.ஐ., இயந்திரத்தை பிரெஞ்சு மாற்று ஆற்றல் மையம் உருவாக்கியுள்ளது. வழக்கமாகத் தற்போது பயன்படும் இயந்திரங்கள் 3 டெஸ்லா காந்தப் புல ஆற்றலில் ஸ்கேன் செய்யும். இந்தப் புது இயந்திரம் 11.7 டெஸ்லாவில் எடுக்கும்.

  ➖➖➖➖➖

𞢹எல்லாவிதமான கொரோனா

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகம் எல்லாவிதமான கொரோனா வைரஸ்களையும் அழிக்கவல்ல தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. மருந்தை எலிகள்மீது சோதித்த போது கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்களை அழித்தது.

 ➖➖➖➖➖

🌐ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருப்பவை பசுமை இல்ல வாயுக்கள். அவற்றில் முக்கியமானது கரியமில வாயு. சுற்றுச்சூழலில் உள்ள, அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை நீக்கச் சில செயற்கை முறைகள் உள்ளன என்றாலும், இயற்கையாகவே சில வழிகளில் வாயு நீக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு கரியமில வாயுவை மரங்களும், கடலும் உறிஞ்சிக் கொள்கின்றன.

இதைத் தவிர சாதாரணமாகவே பாறைகள், கற்கள் சிதையும்போது அவை கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன. இந்த இயற்கை நிகழ்வை மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு. சிதைந்த கற்களை விவசாய நிலங்களில் துாவுவதால், பசுமை இல்லா வாயுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்படுவதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிப்பதாக ஷெஃபீல்ட் லெவர்ஹுல்ம் பல்கலை கண்டறிந்துள்ளது.

பொதுவாகவே கற்களின் மேற்பரப்பு தான் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கிறது. அதனால், ஒரு பெரிய கல் பல சிறு துண்டுகளாகும்போது பரப்பளவு அதிகரிக்கிறது, அதிகமான வாயுவை பெற்றுக்கொள்ளவும் செய்கிறது.

2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே செயற்கையாகக் கற்களை உடைத்துப் போடுவதன் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழலில் உள்ள 200 கோடி டன் கரியமில வாயுவை நீக்க முடியும் என்று கண்டறியப்பட்டுவிட்டது. இது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் போக்குவரத்து மூலம் உற்பத்தி ஆகும் கரியமில வாயுவின் அளவை விட அதிகம்.

சரி, இவ்வாறு உடைத்துப் போடுவதை வேறு எங்காவது செய்யலாமே, வயலில் ஏன் செய்ய வேண்டும்? சிதைந்த கற்களில் பயிர்களுக்குத் தேவையான பல நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன. இவை தான் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கின்றன. இதற்கு ஆதாரப்பூர்வமான சான்று வேண்டும் என்பதற்காகத் தான் விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தனர்.

சோளமும், சோயாவும் பயிர் சுழற்சி முறையில் பயிரிடப்படும் விவசாய நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். எரிமலைப் பாறைகளிலிருந்து உருவாகும் 'பசால்ட்' கற்துகள்களை ஒரு ஹெக்டேருக்கு 50 டன் என்ற அளவில் நிலத்தில் சேர்த்தனர். ஆண்டின் இறுதியில் நிலத்தின் மொத்த விளைச்சல் 16 சதவீதம் அதிகரித்தது. 'பசால்டி'ல் பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருந்ததே இந்த அமோக விளைச்சலுக்குக் காரணம்.

இங்கு விளைந்த பயிர்களும் ஊட்டச்சத்து மிகுந்து இருப்பதால், இவற்றை உண்ணும் மனிதர்கள், கால்நடைகளும் ஆற்றல் பெறுவர். ஒரு ஹெக்டேருக்கு பரப்பப்பட்ட 'பசால்ட்' துகள்கள் ஓராண்டிற்கு 4 டன் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டால் ஒரே நேரத்தில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, புவி வெப்பமயமாதலையும் தடுக்கலாம்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment