எங்கட தமிழ் ஆட்கள்-பறுவதம்பாட்டி


(இது ஒரு நடப்பு நிகழ்வுகளின் அலசல்)
அன்று பாடசாலையின் விடுமுறை என்பதால் விடிந்து நெடுநேரமாகியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பாக இருக்கவேண்டும்.  பாட்டி அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது புரிந்தது. பாட்டி போனை ஸ்பீக்கரில்விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக தெளிவாகக்கேட்டது.

அண்ணாமலைத்தாத்தாதான்பேசிக்கொண்டிருந்தார்.

"ஏன் இவையள் இப்படி?" என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார். 

"ஆரைச்  சொல்லுறியள்".

"எங்கட தமிழ் ஆட்கள் தான்"

"எதை வச்சுக்கொண்டு  அப்பிடிக் கதைக்கிறியள்?"

"ஒண்டா இரண்டா. இவன் மேன் வீடு வாங்கினதிலிருந்து எத்தினை தமிழாட்களை  வீட்டில கூரை,சுவர்,நிலம்,ஜன்னல்,washroom வேலைகள் என்று பலமுறையும் தமிழாட்களை ௬ப்பிட்டு ஒவ்வொருவரும் ஏமாற்றி தானே போகினம். அவனும் தமிழாட்கள் என்று நம்பித்தானே ௬ப்பிட்டவன். அவையும் தமிழாட்கள் தானே என்டுவிட்டுத் தமிழாட்களிலை  தானே வேலை பழக வாறது. ஆனால் கதைக்க விட்டுப் பார்க்கவேணும். தங்களை விட்டால் கனடாவிலை திறமா வேலை செய்ய ஆர் இருக்கினம் எண்டு விலாசம் பேசுவினம். வீட்டு ரிநோவேசன் வேலையில தமக்கு தெரியாதவை எதுவுமில்லை தம்பட்டம் அடிப்பினம். ஆனா எதுவும் தெரியாது.கழிவிடங்களில சும்மா பொறுக்கின பழைய ஆயுதங்களோட விலாசமாய் வந்து இறங்குவினம். செய்வதெல்லாம் குப்பை வேலைகள்”.

பாட்டியும்  தொடர்ந்தாள்.

"ஏன்,இங்கை மேள் நெடுகச் சொல்லுவாள்.கார் ஒண்டை திருத்துவதற்காக கொம்பனிக்கு கொண்டுபோனா அதை உயர்த்தி  கணணி இயந்திரங்கள் மூலம் CHECKபண்ணி 2,3 மணித்தியாலங்களில் தான் என்ன பிழை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் தமிழாட்கள் சரியான கெட்டிக்காரர்கள்.தாங்களே ஒருமுறை குனிஞ்சு பார்த்துவிட்டு படக்கெண்டு என்ன பிழை எண்டு  சொல்லி PARTS  எங்கள் காசில வேண்டிப் போட்டு அது எப்பிடி எண்டு பழகிக் கொள்வார்கள்.ஆனால் பிழைகள் தொடரும்.தெரியாத விசயங்களுக்கெல்லாம் ஏன் தலையிட்டு பேரினைக் கெடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது".

"ஒரு வளர்ந்துவிட்ட நாட்டில வாழ்ந்துகொண்டு இன்னும் நாம் திருந்தவில்லை. ஒருவனை ஏமாற்றினால் அவன் தன்னோட பழகிற உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லாமல் விடமாட்டான். இவர்கள் எத்தினை பத்திரிகைகள்,வானொலிகளுக்கு விளம்பரம் கொடுக்கட்டும்.ஆனால்  அவை எல்லாவற்றிலும் வலிமையானது வாடிக்கையாளரின் பிரச்சாரம் என்பது எங்கட ஆட்களுக்கு  இன்னும் புரியாதது ஏன் என்று  விளங்கவில்லைஎன்றார் அண்ணாமலைத்தாத்தா.

முடிவாகப் பாட்டியும், தமிழரிட்டை போகக் கூடாது என்பது பிள்ளையளின்ட நோக்கமில்லை.அவர்கள் தான் தமிழரை ஏமாத்தக் கூடாது என்று முடிவேடுக்கவேணும். அந்த எண்ணம் எங்கடயளிண்ட நெஞ்சில எப்ப முடிவாகுதோ அப்பத்தான் எங்கடயலும் இந்த நாட்டில வளர்ந்துவிட்ட இனங்களுக்கு சமமாக வளர்ந்துவிட முடியும்.

பாட்டியின் இவ் முடிவுரையினை நான் நற்சிந்தனையாக  உள்வாங்கிக்கொண்டேன்.


ஆக்கம்: பேரன் செ.மனுவேந்தன்

பகவத் கீதை என்ன சொல்கிறது?




பகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது.

போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனனை தைரியமூட்டிப் போர் புரிய வைக்க, கண்ணனால் எடுத்துக் கூறப்பட்ட பல நியாயங்களை உள்ளடக்கிய ஒரு போதனை நூலாகும்.

"போர்க்களத்தில் எதிரில் நிற்போர் எல்லாம் யார், யார்?. எனது வணக்கத்திற்கு உரிய பெரியோர்கள், குருமார்கள், ரிஷிகள், ஆசிரியர்கள், ஒரே இரத்த உறவிலான பெற்றோர்கள், சகோதரர்கள், பிள்ளைகள், ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள், அத்தோடு எதிரணியில் உள்ள, உனக்கே (கண்ணபிரானுக்கே) சொந்தமான சேனைகள்! 
இவர்களை எல்லாம் கொல்வது மகா பாவம் கண்ணா. என்னை விட்டுவிடு. எனக்கு அரசும் வேண்டாம், பதவியும் வேண்டாம். நான் இந்தப் பாவத்தைச் செய்ய விரும்பவில்லை"

இப்படி மறுத்து நிற்கும் அர்ச்சுனனுக்கு  கூறப்படுபவை, ஓர் உயர் அதிகாரியால், சிற்றூழியர்களுக்கு வழங்கப்படும் கோட்பாடுகளைக் கொண்ட கடுமையான கட்டளைகளாகும். சுயமாய்ச் சிந்திக்காவோ, மீறிச் செயல் படவோ உரிமை இல்லை.

"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்பதுதான் மூல சுலோகம். கேள்வி கேட்காதே, சொன்னதை மட்டும் செய்!

ஏனென்றால்,

"அவரவர் குணம் மற்றும் ஈட்டிய கர்மாவின் பலன்களின்படி நான்கு விதமான சாதி அமைப்பு என்னால் (கடவுளால்) உருவாக்கப்பட்டது".

"பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள், என்பன. ஒவ்வொரு சாதியினருக்கும் அவரவர் கடமைகள் என்று விதிக்கப்பட்டிருக்கின்றன. அக்கடமைகளைத் தவறாது அவர்கள் செய்து முடிக்க வேண்டியது கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது. அதை ஒருபோது உங்களால் மாற்றமுடியாது".

"க்ஷத்ரியர்கள் போர் புரியப் பிறந்தவர்கள். போர் புரிவது உனது கடமை. உயிர்களைக் கொல்வது பாவம் என்று நீ நினைப்பது வர்ண தர்மம் ஆகாது.  மக்களின் வாழ்க்கை சுருக்கமானது. அவை மரண சுழற்சியிலும் பிறப்பு சுழற்சியிலும் உள்ளன. ஆகவே, எப்படியும் அவர்கள் எப்படியாவது இறந்துவிடுவார்கள். கடமையின் ஒரு பகுதியாக நீ மக்களைக் கொன்றால் பரவாயில்லை. அவர்களின் இறப்புக்கு நீ ஒரு கருவியே ஒழிய அதை நீ செய்யவில்லை"

இவ்வாறான மனச்சாட்சிக்கு ஒவ்வாத, நியாயமற்ற, கொடூரத்தனமான கொலைகளைச் செய்யுமாறு  (கடவுள்) கிருஷ்ணன், அருச்சுனனை மூளைச் சலவை செய்து பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார்.

இவ்வளவு பேரையும் அநியாயமாகக் கொல்லாது பிரச்சனையைத் தீர்க்க சுலபமான வழியொன்றும் இந்தக் கடவுளுக்கு தோன்றவில்லையே!

யுத்த முடிவில் சகல எதிர் தரப்பினரும் கொல்லப்பட்டனர், கிருஷ்ணனின் சேனையில் எல்லோரும் தப்பினர்.
எல்லாப் பெரிசுகளையும், உறவுகளையும் கொன்று குவித்து 'கடமை வீரனாக' அர்ச்சுனன்  மிளிர்ந்தான்.

இப்படியாக, சில வினாடிகளுக்குள் யுத்தகளத்தில் வைத்துச் சொல்லப்படட பகவத் கீதைக்கு பொருள் கூறிப் பிரசங்கங்கள் செய்வோர், ஒரு மாசம்,இரண்டு மாசங்கள் என்று போதாது, வருடக்கணக்கில் தேவைப் படும் என்று சொல்லிக் கொள்வார்கள்.

முடிவில், இந்த வைணவ நூல், சாதாரண மனிதனுக்கு என்ன சொல்கிறது?:

* மற்ற சில மதங்கள் தங்கள் கடவுளை வணங்காதவனை மட்டும்தான் கொல்லும்படி கூற, இவர்கள் ஒரே மதத்தில் உள்ள தம் சுற்றத்தினரையே கொல்லும்படி போதிக்கிறது.

* சொந்த மூளையை பாவிக்காது சொன்னதைச் செய்யும் அடிமையாய் இரு என்று மட்டம் தட்டுகிறது.

* சாதிக் கொடுமைக்குள் இருந்துகொண்டே இரு, அதுதான் தெய்வ கட்டளை என்கிறது.

இந்த மகா நூல், ஒரு தீவிர வாதத்தையும், அடிமைத்தனத்தையும், சாதி பாகுபாடுகளையும் ஆதரித்துப்  போதிக்கும் ஒரு சாசனம்.

இதில், மனுஷனுக்கு விளங்காத தத்துவங்கள் பல இருப்பதாக ஆன்மிக வாதிகள் பறை சாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அப்படிச் சொன்னால்தான் அவர்களை நாலு பேர் 'அறிவாளிகள்' என்று நினைத்துக் கொள்வார்கள்.

மனிதனுக்கு விளங்காதவை இருந்துதான் என்ன, தொலைந்து போனால்தான் என்ன?

மொத்தத்தில், பகவத்கீதை மனிதனுக்கான ஒரு நீதி நூல் அல்ல! சமய நூலும் அல்ல!

அது ஓர் இருட்சி நூல்.

✍செல்வதுரை,சந்திரகாசன் 

காளி ஆக்கினேன் அவளை


அன்று காலங்களில் அவள் வசந்தம்,
இன்று  ஒடிந்திடிந்து போனதும்
அன்று கலைகளிலே அவள் ஓவியம்
இன்று  உருக்குலைந்து விட்டதும்
அன்று மாதங்களில் அவள் மார்கழி
இன்று சூடேறிக் கொதிப்பதும்
அன்று மலர்களிலே அவள் மல்லிகை,
 இன்று வன்முறை ஆனதுவும்

அன்று பறவைகளில் அவள் மணிப் புறா,
இன்று காட்டேரி ஆகுவதும்
அன்று பாடல்களில் அவள் தாலாட்டு,
இன்று ஒப்பாரி வைப்பதும்
அன்று கனிகளிலே அவள் மாங்கனி,
இன்று வேம்பாய்க் கசப்பதும்
அன்று காற்றினிலே அவள் தென்றல்
இன்று சூறாவளி ஆனதும்

அன்று பால்போல் சிரிப்பதில் பிள்ளை,
இன்று பேயாய் கதறுவதும்
அன்று  பனிபோல் அணைப்பதில் கன்னி,
 இன்று யமனாய் உதைப்பதும்
அன்று கண்போல் வளர்ப்பதில் அன்னை,
இன்று கொடுமையாய் கடிப்பதும்
அன்று கவிஞன் ஆக்கினாள்  என்னை,
  இன்று காளி ஆக்கினேன் அவளை

எவ்வாறு? எனின்,

பொல்லாத குடியாலும் இல்லாத வசையாலும்
எல்லாமே, எல்லாமே என்னால்தான் - என்
பொல்லாத காலம் காதல்தனை மறந்து
சொல்லாத பொய் ஒன்றும் இல்லை - எனக்கு
நல்லாக குணமொன்றும் இல்லை - ஐயையோ
எல்லாமே, எல்லாமே என்னால்தான்

எல்லாமே, எல்லாமே என்னால்தான்

-செல்வதுரை,சந்திரகாசன் 

நடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை

                                               
                                   
தமிழ்த்  திரைப்பட நடிகர் விஜய்  எனப்படும்  ஜோசப் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று  சென்னையில் பிறந்தார். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.
விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து, 1999 அன்று மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமை காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
1984–1988 குழந்தை நட்சத்திரமாக
பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் இயக்கத்தில் விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1992–1996 துவக்கம்
விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) , 1994 இல், இவர் ரசிகன், அஜித் குமாருடன் இணைந்து தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே மற்றும் விஷ்ணு ,சந்திரலேகா , 1995 இல் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.

1996–2003 திருப்புமுனை
1996 இல்- பூவே உனக்காகவே , வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா காலமெல்லாம் காத்திருப்பேன், 1997 இல்- லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர், நேருக்கு நேர்-  படங்கள் இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது. பின்னர் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.  
1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா  திரைப்படங்களிலும் , 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும்  படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.இதன்பின் -என்றென்றும் காதல், நெஞ்சினிலே , மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.
2000 மாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே , 2001 இல் சூர்யாவுடன் இணைந்து ஃப்ரண்ட்ஸ் சித்திக்கால் ,விஜய் பத்ரி ,ஷாஜஹான் ,2002 இல்  நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆன தமிழன் மற்றும் யூத் , ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா ,புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.

2003–2010 பரவலான வெற்றி
2003 இல்  விஜய் திருமலை , உதயா,   2004 இல் கில்லி வெளியானது. அன்று தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும். இதன்பின் மதுர,  2005 இல்  திருப்பாச்சி, சுக்ரன் , சச்சின் ,  2006 இல் சிவகாசி , 2007 இல் போக்கிரி  , அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆக  நடித்தார். 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது விழாவில் மக்களின் விருப்பமான சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார்.2008 இல், குருவி , 2009 இல் வில்லு , வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார்.
2011–2016 சர்வதேச புகழ்
2011 இல்   காவலன் படத்தில் இணைந்தார். சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் காவலன் திரையிடப்பட்டது. அடுத்த படமான  வேலாயுதம் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது .பின்னர்  2012 இல் நண்பன் ,ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது. பின்னர் பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நடித்த 2012 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான ரவுடி ரத்தோர் இல் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

அடுத்த திரைப்படமான துப்பாக்கி , சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு விஜயின் திரை வாழ்க்கையில் ₹180 கோடிக்கும் அதிகமாக  வசூல் செய்த படமாக ஆனது. அடுத்த படம் 2013 இல் தலைவா,   2014ல்  ஜில்லா, கத்தி , 2015 இல்  புலி,  2016ல்  ₹172 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த தெறி  என வசூல்கள் தொடர்ந்தன.

2017–தற்போது
 2017 இல் பைரவா  வின் பின்  ₹250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த மெர்சல்  கதாபாத்திரத்திற்காக 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2018 இல் இவர் நடித்த சர்கார், பின்னர் 2019 இல் வெளியான பிகில் உலக அளவில் அவ்  வருடம் தமிழ் சினிமாவின் அதிகவசூல் செய்த திரைப்படமாக மாறியது.

தெலுங்கு,இந்தித் திரைப்படங்களில்..
விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன.
இவருடைய தமிழ் படங்களில் பெரும்பாலானவை இந்திக்கு  டப்பிங் செய்யப்படுகின்றன. இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளியில் 1,3,4 என மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றதால் அவை இந்தித் திரைப்படங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது.
ரவுடி ரத்தோர் (2012) படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

அறப்பணி
விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் தொடங்கினார். இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது.
சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

இன்று இளையோரை அதிகம் கவர்ந்துள்ள நடிகர் விஜய் தனது திரைக் கதைகளில் வன்முறைகளை அதிகரித்துக் கொண்டு செல்வது அது இளையோரை தப்பான வழியிட்டு சென்றிடுமோ என்று பெரியோர்கள் அச்சம் தெரிவிப்பது அப்பப்போ காதில் விழத்தான் செய்கிறது.இது அவர் காதில் விழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

📂தொகுப்பு:செ .மனுவேந்தன்