எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21

இந்து அல்லது சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் அல்லது  கற்கோடாரி மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது. அங்கு  நான்கு குறியீடுகள் /  பொறிப்புகள் உள்ளன.  முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையது. அது  ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48 ஆகும். அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும் (எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைப்பிலும் (எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும் (எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக
எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்து அல்லது சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பது தான் நமக்குக்கிடைக்கும் இந்த செய்தி ஆகும். திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடு பவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப் படுகிறது. தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும். கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் படம்  இங்கு இணைக்கப் பட்டு உள்ளது. 

புதிய கற்கால [Neolithic] தமிழ் நாடும் அல்லது தென் இந்தியாவும் ஹரப்பான் மக்களின் மொழியையே அதிகமாக பாவித்தார்கள் என்பது இதனால் புலனாகிறது. இது கட்டாயம் திராவிட மொழியாகவே இருக்கக் கூடும். முதலாவதும் இரண்டாவதும் குறியீடுகள் குறித்து காட்டும் சொல் முருகன் ஆகும். இவ்விரண்டுக்கும் இடையிலான இணைதல் அடிக்கடி  சிந்து முத்திரைகளில், குறிப்பாக ஹரப்பா முத்திரைகளில்  காணப் படுகிறது.

1920களில் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்ட, புதையுண்டு கிடந்த மொகஞ் சொதாரோ, அரப்பா நகரங்கள், 3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும் எனவும் சிந்து வெளி நாகரிகம் மொகஞ் சொதாரோ, அரப்பா போன்றவற்றை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன என்றும் ஐராவதம் மகாதேவன் பல சான்றுகளுடன்  கூறுகிறார். உதாரணமாக, சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தின் பல பகுதிகள் குஜராத் திலும் இருந்தன. அங்குள்ள துவாரகையை தலை நகராகக் கொண்டு தமிழக வேளிர் ஆண்டனர் என்ற குறிப்பைக் கபிலர் புறநானூறு 201 ஆம் பாடலில் குறிப்பிடுகின்றார் என்கிறார்.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு இருங்கோவேளை வேண்டிய பொழுது, ”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான் இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன்.வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற் சுவர்களைக் கொண்ட  கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே! வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள் என்கிறார்.அதாவது, இருங்கோ வேளின் முன்னோர் துவாரகையை ஆண்ட வேளிர் என்றும், முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள் என்றும் அவ்வேளிர் மரபில் அவன்  49ஆவது தலைமுறை என்றும் அவனது வரலாற்றறை கூறுகிறார். மேலும், பல தமிழறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும் இருங்கோவேளின் வரலாற்றுடன் இணைத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!
[புறநானூறு 201]

(சிந்து வெளிப்பண்பாடும் சங்க இலக்கியமும் முனைவர் ஐராவதம் மகாதேவன் செம்மொழித் தமிழாய்வு நிறுவன வெளியீடு, சனவரி 2010)

பாரி மகளிரை ஏற்க மறுத்த இருங்கோவேள் மீது கபிலர் சினந்து பாடிய பாடல், புறம் 202 ஆம் செய்யுளில் உள்ளது. அப்பாடலில் வரும் “அரையம்” என்ற சொல் அரப்பாவைக் குறிப்பிடுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன். தமக்கு முன் பி.எல்.சாமி அரையம் என்பதை அரப்பா என்று செந்தமிழ்ச்செல்வி சனவரி 1994 இதழில் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார் மகாதேவன்.

இருபாற் பெயரிய வருகெழு மூதூர்க் 
கோடி பல வடுக்கிய பொருமணுக்குதவிய
நீடுநிலை அரையத்துக் கேடுங் கேளினி”

என்ற வரிகளில் அழிந்து போன இருபெரும் சிந்து வெளி நகரங்களைக் குறிக்கின்றார் என்கிறார் மகாதேவன். தம் கூற்றுக்கு மேலும் சான்றுகளாக அகம் 15, 208, 372, 375 ஆகிய பாடல் களையும் மற்ற சங்கப் பாடல்களையும் அவர் கூறுகிறார் என்பது கவனிக்கத் தக்கது. எனவே வடக்கில் இருந்து வந்த இவர்கள் ,பிந்திய ஹரப்பான் குறியீடுகளையும் கொண்டு வந்து இருக்கலாம் என நாம் நம்பலாம்.சிந்து வெளி பட எழுத்து [logographs], பின் மெல்ல  மெல்ல, எழுதுவதை இலகுவாக்கும் பொருட்டு, அசை எழுத்துக்களாக [logosyllabic] அல்லது ஒலியன் எழுத்துக்களாக [logophonetic ] மாறியது எனலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:22  தொடரும்

2 comments:

  1. மதன் வேதாFriday, February 16, 2018

    பாரியின் புதல்விகள் அவ்வையாரினால் அழைத்து செல்லப்பட்டு திருமணம் அவரால் செய்துவைக்க்ப்ட்ட்தாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது.எது சரியோ புரியவில்லை

    ReplyDelete
  2. உணமி வரலாறு வேறு ; ஐராவதம் மகாதேவன் உண்மை அறிந்தும் சொல்லும் வரலாறு வேறு https://www.facebook.com/thontamilarnagarigam/photos/a.646611005483463/1812672572210628/?type=3&theater

    ReplyDelete